ஜெய்ப்பூர்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பவர்பிளேவில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்ததே தோல்விக்கு காரணம் என சிஎஸ்கே அணியின் கேப்டன் எம்எஸ் தோனி தெரிவித்தார்.
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கே அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 203 ரன்கள் இலக்கை துரத்திய சிஎஸ்கே அணியானது 7 விக்கெட்கள் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்து ஆட்டத்தை நிறைவு செய்தது. இந்த ஆட்டத்தில் பந்து வீச்சின் போது பவர்பிளேவில் சிஎஸ்கே 64 ரன்களை தாரை வார்த்திருந்தது. 14 ஓவர்கள் வரை களத்தில் இருந்த தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 43 பந்துகளில், 77 ரன்களை விளாசினார்.
மேலும் இறுதிக்கட்ட ஓவரில் துருவ் ஜூரல் 15 பந்துகளில் 34 ரன்களையும், தேவ்தத் படிக்கல் 13 பந்துகளில் 27 ரன்களையும் விளாச சிஎஸ்கே பந்து வீச்சாளர்கள் அனுமதித்தனர். இதன் காரணமாகவே ராஜஸ்தான் அணி 202 ரன்கள் வரை குவிக்க முடிந்தது. இந்த ஆடுகளத்தில் இவ்வளவு பெரிய இலக்கு என்பது சராசரிக்கும் அதிகமானதாகவே அமைந்தது.
போட்டி முடிவடைந்ததும் சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி கூறியதாவது: ராஜஸ்தான் அணி நிர்ணயித்த இலக்கு சராசரிக்கும் சற்று அதிகமானதாக இருந்தது. இதற்கு காரணம் நாங்கள் முதல் 6 ஓவர்களில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்ததுதான். ஆனால் அந்த நேரத்தில் ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு சிறப்பானதாக இருந்தது. அவர்கள், ஆட்டத்தை முடிக்கும்போது கூட மட்டை விளிம்பில் பந்துகள் பட்டு பவுண்டரிக்கு சென்றன. ரன்கள் செல்வதை எங்களால் கட்டுப்படுத்த முடியாமல் போனது.
பதிரனா பந்துவீச்சு மிகவும் நன்றாக இருப்பதாக நான் உணர்ந்தேன், அவர் மோசமாக பந்துவீசவில்லை. அவர் எவ்வளவு சிறப்பாக பந்துவீசினார் என்பதை அவர் வழங்கிய ரன்கள் பிரதிபலிக்கவில்லை. யஷஸ்வி ஜெய்ஸ்வால் சிறப்பாக பேட் செய்தார். முக்கியமாக பந்து வீச்சாளர்களை பின்தொடர்ந்தார், சரியாக கணக்கிட்டு துணிந்து செயல்பட்டார். எங்கள் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அவருக்கு இது சற்று எளிதாக இருந்தது. தொடக்கத்தில் யஷஸ்வி சிறப்பாக விளையாடிய நிலையில் இறுதிப் பகுதியில் துருவ் ஜூரல் அபாரமாக பேட் செய்தார். இவ்வாறு எம்எஸ் தோனி கூறினார்.
சிஎஸ்கே தனது அடுத்த ஆட்டத்தில் நாளை (30-ம் தேதி) சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் பிற்பகல் 3.30 மணிஅளவில் நடைபெறுகிறது.
இன்றைய ஆட்டங்கள்
கொல்கத்தா – குஜராத்
இடம்: கொல்கத்தா, நேரம்: பிற்பகல் 3.30
டெல்லி – ஹைதராபாத்
இடம்: டெல்லி; நேரம்: இரவு 7.30
நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோசினிமா