ராகுல் காந்தி விவகாரத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது: டி.ஆர்.பாலு எம்பி பேச்சு

Share

பல்லாவரம்: பம்மல் தெற்கு பகுதி திமுக சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பம்மலில் நேற்று முன்தினம் மாலை பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. பம்மல் நகர தெற்கு பகுதி திமுக செயலாளரும், தாம்பரம் மாநகராட்சி 1வது மண்டல குழு தலைவருமான வே.கருணாநிதி தலைமை தாங்கினார். பம்மல் 6வது வட்டச் செயலாளர் ஜெகநாதன் வரவேற்றார்.
இதில், டி.ஆர்.பாலு எம்பி பேசுகையில், ‘‘மோடி பற்றி அவதூறாக பேசியதாக ராகுல்காந்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை கூட செய்யாமல், அவர் மீண்டும் நாடாளுமன்றத்திற்குள் வரமுடியாத வகையில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆக, மிகப்பெரிய மோசடி இன்று இந்திய நாடாளுமன்றத்தில் நடந்திருக்கிறது. இப்படிப்பட்ட மோசடிகளுக்கெல்லாம் துணை போகின்ற மோடி, இந்த நாட்டில் இருந்து அகற்றப்பட வேண்டும். எனவே வரும் நாடாளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்’’ என்றார்.  விழாவில் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இலவச தையல் இயந்திரம், சலவைப் பெட்டி, பிரஷர் குக்கர் ஆகியவை வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் இ.கருணாநிதி, எஸ்.ஆர்.ராஜா, தாம்பரம் மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் காமராஜ் மற்றும் திமுக தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com