- அஷ்ரஃப் படானா
- பிபிசி ஹிந்திக்காக

பட மூலாதாரம், @INCINDIA
ராகுல் காந்தியின் நாடு தழுவிய பாத யாத்திரையின் தாக்கம், இந்திய தென் மாநிலங்களில் அதிகமாகவே தெரிகிறது.
செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்தப் பயணத்தில், ராகுல் காந்தி தினமும் 20 முதல் 25 கிலோ மீட்டர் பயணம் செய்வது மட்டுமின்றி சமூகத்தின் பல்வேறு தரப்பினருடனும் உரையாடி வருகிறார்.
செப்டம்பர் 30ஆம் தேதி கேரள எல்லையைத் தாண்டி கர்நாடகாவுக்கு வந்துள்ள ராகுல் காந்தி அங்கு 21 நாட்கள் பயணம் மேற்கொள்கிறார். கர்நாடகாவில் 7 மாவட்டங்களில் 500 கி.மீ.க்கு மேல் பயணம் செய்த அவர் அடுத்தகட்டமாக தெலங்கானாவுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.
கேரளாவில், இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜெய்சங்கருக்கும், கொச்சியில் ராகுல் காந்தியுடன் மதிய உணவருந்த அழைப்பு வந்தது. செப்டம்பர் 7 ஆம் தேதி, தமிழகத்தின் கன்னியாகுமரியில் இருந்து ராகுல் காந்தி தனது நடைப்பயணத்தை மேற்கொண்டார். 300 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து கொச்சியை அடைந்தார்.
அந்த மதிய உணவின்போது ஒருவர் ராகுல் காந்தியிடம், அன்று, ஜெய்சங்கரின் 60வது பிறந்தநாள் என்று கூறினார். ஜெய்சங்கர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கார்டு வைத்திருப்பவர். ஆனால், அவரது பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை என்று கேரள காங்கிரஸ் சகாக்களிடம் ராகுல் காந்தி கேட்டதுடன், உடனே கேக் வரவழைக்கப்பட்டது.
பட மூலாதாரம், BHARAT JODO
“அவர் எனக்கு ஒரு துண்டு கேக் கொடுத்தார், சூழல் மிகவும் இனிமையாக இருந்தது. அவர் நாம் சொல்வதை நன்கு கேட்டறிகிறார்.” என்று ஜெய்சங்கர் கூறினார். இத்தனைக்கும் ஜெய்சங்கர் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர் கூட இல்லை. நாடு தழுவிய அளவில் நரேந்திர மோடிக்கு ஒரு சவாலாக ராகுல் காந்தியால் உருவெடுக்க முடியும் என்ற உறுதியான நம்பிக்கையும் அவருக்கு இல்லை.
ராகுல் காந்தி சரியான நேரத்தில் சரியான நடவடிக்கை எடுத்துள்ளார் என்று அவர் கூறுகிறார், “2024 தேர்தலுக்கு முன் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்க வேண்டும். அவர் கேரளாவிலும் தமிழகத்திலும் மிகவும் பிரபலமாக உள்ளார். மேலும் மோடிக்கு சவால் விடுகிறார். ஆனால் இதெல்லாம் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது எனக்குத் தெரியாது. ” என்பது அவர் கருத்து.
CPI கேரளாவில் ஆளும் கூட்டணியான இடது ஜனநாயக முன்னணியின் (LDF) ஒரு பகுதியாகும், இது பாரம்பரியமாக காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியின் (UDF) எதிரியாக இருந்து வருகிறது, மேலும் இரண்டுக்கும் இடையே ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிகாரம் மாறி மாறி வருகிறது.
பட மூலாதாரம், @INCINDIA
கேரளாவின் அரசியல் சமன்பாடு
இருப்பினும், 2021 இல் நடந்த சட்டமன்றத் தேர்தல், இதற்கு விதிவிலக்காக இருந்தது. எல்.டி.எஃப் அதிக இடங்கள் மற்றும் வாக்கு சதவீதத்துடன் மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடிந்தது. இதற்குப் பிறகும், வரும் லோக்சபா தேர்தலில் மீண்டும் 2019 போன்ற முடிவுகள் வரலாம் என ஜெய்சங்கர் நம்புகிறார். அப்போது மாநிலத்தில் உள்ள 20 இடங்களில் காங்கிரஸ் தலைமையிலான யுடிஎப் 19 இடங்களில் வெற்றி பெற்றது. இது மட்டுமின்றி, எல்.டி.எப்-ஐ விட இந்தக் கூட்டணி 11.19 சதவீதம் கூடுதல் வாக்குகளை பெற்றது.
ஆனால், தமிழகத்திலும் கேரளாவிலும் ராகுல் காந்தியின் வருகைக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் யாத்திரையில் அதிக அளவில் கலந்து கொண்டுள்ளனர்.
52 வயதான ராகுல் காந்திக்காக மக்கள் மணிக்கணக்கில் காத்திருந்தனர். இந்த இரண்டு மாநிலங்களிலும் ராகுல் காந்தி மிகவும் பிரபலமானவர் என்பதும் சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
பட மூலாதாரம், @INCINDIA
ராகுல் காந்தி ஓட்டப்பந்தய வீரர் போல் வேகமாக நடப்பதைக் கேள்விப்பட்ட ஒரு வயதான பெண்மணி, “கடவுளே, என் மகனை காஷ்மீர் அடையும் வரை காப்பாற்று” என்று கூறினார்.
ராகுல் காந்தி இதுவரை தனது பயணத்தின்போது டி-சர்ட், ஜீன்ஸ் மற்றும் ஓடும் காலணிகளை அணிந்திருந்தார். சில நேரங்கலில் அவர் குர்தா பைஜாமாவில் காணப்பட்டார். இந்தப் பயணத்தின்போது பல்வேறு வகையான மனிதர்களையும் சந்தித்து வருகிறார்.
இது குறித்து ஆலப்புழாவை சேர்ந்த காங்கிரஸ் தொண்டர் ஷானவாஸ் தாஹா கூறுகையில், “அவர் எனது மாவட்டத்திற்கு வந்தபோது, இரண்டு நாட்களாக சில கிலோமீட்டர்கள் நடந்து சென்றேன். அவருக்காகச் சாலையோரத்தில் பலர் காத்திருந்தனர். அவர்களை எனக்குத் தெரியும். அவர்களில் பலர் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவாளர்களும் எங்கள் கட்சியின் விமர்சகர்களும் ஆவார்கள்” என்றார்.
தமிழகத்தில் ராகுல் காந்தியின் பயணத்தைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்த ஸ்டாலின், ராகுல் காந்தியை அவரது சகோதரர் என்று அழைத்தார். தமிழகத்தில் ஸ்டாலினின் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் காங்கிரஸைத் தவிர சிபிஎம் கட்சியும் இடம்பெற்றுள்ளது.
ஆனால், ராகுல் காந்தியின் வருகைக்கு கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கடந்த வாரம்தான், முக்கிய சிபிஎம் தலைவரும் மாநில முதலமைச்சருமான பினராயி விஜயன் இந்தப் பயணத்தை நியாயமற்ற முறையில் எதிர்த்ததாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது.
பட மூலாதாரம், @INCINDIA
இடது சாரி கூட்டணியின் எதிர்ப்பு
காங்கிரஸ் தலைவர் கே.சி.வேணுகோபால், “யாத்திரைக்கு எதிர்ப்பு தெளிவாக உள்ளது. அவர்கள் மோதி மற்றும் ஷா ஜோடியை தக்கவைக்க விரும்புகிறார்கள். அவர்களின் கட்சி ஆதரவாளர்களை எனக்குத் தெரியும், அவர்கள் இதயத்தில் காந்தி இருக்கிறார், காந்தியும் அவர்கள் கட்சிக்கு எதிராக எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை. பாஜகவின் வெறுப்பு அரசியலை மட்டுமே ராகுல் காந்தி விமர்சிக்கிறார்.” என்று கூறியிருந்தார்.
ராகுல் காந்தி தனது நீண்ட பயணத்தின் பெரும் பகுதியைக் கேரளாவில் செலவிடுகிறார் என்றும், பாஜக ஆளும் உத்தரபிரதேசத்தில் குறைவாகவே செலவிடுகிறார் என்றும் விஜயன் தொடர்ந்து கூறி வருகிறார். உண்மையில், இடதுசாரி ஜனநாயக முன்னணி வாய்ப்புகள் கடந்த முறை போல் அதிர்ச்சியளிக்காமல் இருக்க வேண்டுமே என்று அவர் அஞ்சுகிறார்.
கடந்த பொதுத் தேர்தலின்போது, ராகுல் காந்தி வயநாட்டில் போட்டியிட்டது மற்ற தொகுதிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
சிபிஎம் ஊதுகுழலான தேசாபிமானி இதழ், அதன் தலையங்கத்தில் ராகுல் காந்தியை ‘பப்பு’ என்று குறிப்பிட்டுள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. வயநாட்டில் ராகுல் காந்தியை வேட்பாளராக காங்கிரஸ் அறிவித்த மறுநாளே இந்தத் தலையங்கம் வெளியிடப்பட்டது.
2019 பொதுத் தேர்தலில், CPM மூன்று இடங்களை மட்டுமே பெற்றது – கேரளாவில் இருந்து ஒன்று மற்றும் தமிழ்நாட்டில் இருந்து இரண்டு. CPI இரண்டு இடங்களை மட்டுமே பெற்றது, இரண்டும் தமிழ்நாட்டிலிருந்து.
தமிழகத்தில் காங்கிரஸ் மற்றும் திமுகவுடன் கூட்டணி வைத்ததால் இடதுசாரிகளுக்கு இந்த நான்கு இடங்கள் கிடைத்தன.
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் திமுக-காங்கிரஸ் கூட்டணி 38 இடங்களிலும், அண்ணா திமுகவுக்கு ஓரிடமும் கிடைத்துள்ளது.
கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான UDF கூட்டணியில் தமிழ்நாட்டின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய முஸ்லிம் லீக்கும் அடங்கும்.
பட மூலாதாரம், @INCINDIA
காங்கிரஸின் வியூகம் என்ன?
கடந்த வாரம் திருச்சூரில் நடந்த பேரணியில், கடந்த தேர்தலில் காங்கிரஸ்-திமுக கூட்டணி வெற்றி பெற்றது குறித்து பி.விஜயன் பேசும்போது, “ராகுல் காந்தி இங்கு தேர்தலில் போட்டியிட வந்தபோது, அவர் பிரதமராகப் போகிறார் என்று எங்கள் மக்கள் நினைத்தார்கள். ஆனால் இப்போது மக்கள் அது தவறு என்பதை உணர்ந்து விட்டார்கள். காங்கிரஸால் இனி அதே தந்திரத்தைச் செய்ய முடியாது,” என்றார்.
யுடிஎஃப் எம்பிக்களை விமர்சித்த அவர், பாஜகவை தடுக்கவோ, கேரள பிரச்சனைகள் குறித்த விவகாரங்களை நாடாளுமன்றத்தில் எழுப்பவோ அவர்களால் முடியவில்லை என்றார்.
ஆனால், காங்கிரஸ் கட்சி இந்த விமர்சனங்களை ஆதாரமற்றது என்று கூறி வருகிறது. கேரளாவில் பாஜகவின் ‘ஏ’ அணியாக இடதுசாரி கூட்டணி செயல்பட்டு வருவதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
இது பற்றி காங்கிரஸ் கட்சியின் கேரள தலைவர் கே.சுதாகரன் கூறும்போது, “நாங்கள் வகுப்புவாத, பாசிச சக்திகளை எதிர்த்துப் போராடும்போது, முதல்வர் பாஜகவின் மொழியைப் பேசுகிறார். அவர், மோதியையும், அமித்ஷாவையும் விமர்சிக்கவில்லை. அவர்களைப் போலவே பயங்கரவாத குற்றச்சாட்டின் கீழ் முஸ்லிம்களைச் சிறையில் அடைத்து வருகின்றார்.” என்கிறார்.
கேரளாவில் நடைபெறும் இந்தப் பயணத்திற்காக ராகுல் காந்தி ஏழு மாவட்டங்களில் சுமார் 450 கி.மீ. பயணம் செய்தார். அக்டோபர் 1ஆம் தேதி கர்நாடகா வரும் அவர், கேரளாவில் தமது 21 நாட்கள் பயணத்தை நிறைவு செய்கிறார். இந்த யாத்திரையில் மக்கள் பெருமளவில் இணைவதாகவும், இதுவரை இரண்டு லட்சம் பேர் யாத்திரைக்குப் பதிவு செய்துள்ளதாகவும் காங்கிரஸ் கட்சியினர் கூறி வருகின்றனர்.
தமிழ்நாடு-கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு ராகுல் காந்தி முக்கியத்துவம் அளிப்பதன் பின்னணியில், மூன்று மாநிலங்களும் சேர்ந்து 87 எம்.பி.க்கள் உள்ளனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தமிழகத்தில் இருந்து 39, கர்நாடகாவில் இருந்து 28, கேரளாவில் இருந்து 20. இதில் அதிகபட்சமாக திமுகவுடன் சேர்ந்து வெற்றி பெற வேண்டும் என்பதே காங்கிரசின் எண்ணமாக இருக்கும்.
இந்த மூன்று மாநிலங்களிலும் சிறப்பாகச் செயல்பட்டால், மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள பிராந்தியக் கட்சிகளுடன் இணைந்து சிறப்பாகச் செயல்பட முடியும் என்பதும் கட்சியின் உத்தியாக இருக்கலாம்.
சமூக சீர்திருத்தவாதி சத்தாம்பி சுவாமிகள் கேரளாவில் தனது உரையில் ஸ்ரீ நாராயண குரு மற்றும் தலித் ஹீரோ அய்யான்களி ஆகியோரைக் குறிப்பிடுகிறார். யாத்திரையின் முடிவில் தினமும் மக்கள் மத்தியில் உரையாற்றும் அவர், வெறுப்பு மற்றும் பிரிவினை அரசியல், வேலையில்லாத் திண்டாட்டம் குறித்துப் பேசுகிறார்.
கட்சியின் ஊடகம் மற்றும் விளம்பரப் பிரிவின் தலைவர் பவன் கேரா கூறும்போது, “நாட்டை ஒன்றிணைப்பதில் யாருக்கு எதிர்ப்புகள் இருக்க முடியும்? இந்த யாத்திரை, மக்களைச் சென்றடைவதற்கான கட்சியின் முயற்சியாகும். இதில், சமூக துருவமுனைப்பு, பொருளாதார சமத்துவமின்மை மற்றும் அரசியல் மையப்படுத்தல் பற்றிய விவகாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன,” என்கிறார்.
பட மூலாதாரம், TWITTER @RAHULGANDHI
உத்தர பிரதேசத்தில் குறைவான நேரம் – ராகுலின் கருத்து என்ன?
ராகுல் காந்தி தனது உரையில் பரஸ்பர சகோதரத்துவம் மற்றும் அகிம்சை பற்றி குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில், பாஜக மற்றும் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக், நாட்டை மத ரீதியாக பிளவுபடுத்துவதாக அவர் குற்றம்சாட்டினார். மேலும், சமூகத்தில் வெறுப்புணர்வை அதிகப்படுத்துபவர்களை மக்கள் மறந்து விடுகிறார்கள் என்பதையும் குறிப்பிட்டார்.
கொச்சியில், தனது கேரள பயணம் வெற்றியடைந்ததாக அவர் அழைத்தார். இது மிகவும் ஊக்கமளிக்கிறது என்றார். இருப்பினும், உத்தர பிரதேசம் போன்ற மாநிலத்தில் அதிக நேரம் கொடுக்காதது குறித்துப் பதிலளித்த அவர், பயண திட்டத்தை மாற்றுவது கடினம் என்று கூறினார்.
உத்தர பிரதேசத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவான சிந்தனையுடன் பரிசீலித்து வருகிறோம். அதனால் கவலைப்பட வேண்டாம் என்றார்.
இந்த பயணத்தின்போது நாட்டின் ஒரு கோடியிலிருந்து மறு கோடிக்குப் பயணித்து வருகிறோம். இதில் பல மாநிலங்களுக்குச் செல்ல இயலவில்லை. 10,000 கிமீ தூரம் முழுவதும் பயணம் செய்வதும் இயலாத காரியம் என ராகுல் காந்தி கூறினார்.
பொன்னியின் செல்வன்: சினிமா விமர்சனம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: