இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர், ‘ஜாம்பவான்’ ரவிச்சந்திரன் அஸ்வின் புதன்கிழமை (டிச. 18) சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
அஸ்வின் எப்போதுமே இந்திய அணியில் ஒரு மேட்ச் வின்னர், விக்கெட் டேக்கர் என்பதை மறுக்க இயலாது.
பல இக்கட்டான தருணங்களில் இந்திய அணிக்கு விக்கெட் எடுத்துக் கொடுத்து திருப்புமுனையை ஏற்படுத்தி, ஆட்டத்தின் போக்கையே மாற்றியவர் அஸ்வின் என்பதில் துளியும் சந்தேகமில்லை. சில தருணங்களில் பேட்டிங்கிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இந்திய அணியின் வெற்றிக்குப் பங்களித்திருக்கிறார்.
இதே ஆஸ்திரேலியாவில் கடந்த 2021ம் ஆண்டில் சிட்னி டெஸ்டில் அஸ்வினின் அற்புதமான ஆட்டத்தை யாராலும் மறக்க முடியாது. டெஸ்ட் மட்டுமல்லாது ஒருநாள் மற்றும் டி20 போட்டியில்கூட அஸ்வின் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி தன்னை வெளிப்படுத்தக்கூடியவர். அஸ்வினின் அற்புதமான பந்துவீச்சால் இந்திய அணி பல ஆட்டங்களில் வென்றுள்ளது என்றாலும், அதில் 5 முக்கியமான ஆட்டங்கள் என்றென்றும் ரசிகர்களால் மறக்கமுடியா நினைவில் நிற்பவை. அவை குறித்துப் பார்க்கலாம்.
மறக்க முடியாத சிட்னி டெஸ்ட் டிரா
கடந்த 2021ம் ஆண்டில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரில் விளையாடியது. அடிலெய்ட் டெஸ்டில் தோற்ற இந்திய அணி, மெல்போர்ன் டெஸ்டில் வென்று 1-1 என்று சமனில் இருந்தது. முதல் டெஸ்டில் தோற்றவுடனே அப்போது கேப்டனாக இருந்த கோலி சொந்த வேலை காரணமாக தாயகம் திரும்பிவிட்டார். ஷமி, ஜடேஜா காயம் காரணமாக விளையாடவில்லை. ரஹானே தலைமையில் இந்திய அணி சிட்னியில் 3வது டெஸ்டில் விளையாடியது.
இந்த டெஸ்டில் வெல்ல வேண்டும் அல்லது டிரா செய்ய வேண்டிய நிலையில் இந்திய அணி இருந்தது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 338 ரன்களும், இந்திய அணி 244 ரன்களும் சேர்த்தன. 2வது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. இந்திய அணி வெற்றிக்கு 407 ரன்கள் இலக்கு நிர்ணயி்க்கப்பட்டது.
4-வது நாள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் சேர்த்திருந்தது, ரஹானே, புஜாரா களத்தில் இருந்தனர். கடைசி நாளில் ரிஷப் பந்த்(97), புஜாரா(77) ஆகியோரின் சிறப்பான பங்களிப்பால் இந்திய அணி தோல்விப் பிடியிலிருந்து நழுவியது. ஆனால், வெற்றி யார் பக்கம் என்பதை தீர்மானிக்க முடியவில்லை. 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி அதன்பின் விக்கெட்டுகளை வீழ்த்த போராடியது.
களத்தில் ஹனுமா விஹாரி(23), அஸ்வின்(39) ரன்களுடன் ஆஸ்திரேலிய வீரர்களின் மின்னல்வேகப் பந்துவீச்சை எதிர்கொண்டு விக்கெட்டை இழக்காமல் பேட் செய்தனர். அதிலும், அஸ்வின் 128 பந்துகளில் 39 ரன்களும், விஹாரி 161 பந்துகளில் 23 ரன்களுடனும் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்தனர். இறுதிவரை இருவரையும் ஆட்டமிழக்கச் செய்ய முடியவில்லை என்பதால் ஆட்டம் டிராவில் முடிந்தது.
இந்த ஆட்டத்தை இந்திய அணி டிரா செய்து, காபாவில் நடந்த கடைசி டெஸ்டில் வென்று இந்திய அணி தொடரை வென்று கோப்பையைத் தக்கவைத்தது. காயம் காரணமாக அஸ்வின் கடைசி டெஸ்டில் விளையாடவில்லை. இருப்பினும், சிட்னி டெஸ்டில் ஆஸ்திரேலியா வசம் சென்ற வெற்றி வாய்ப்பைத் தடுத்து, விஹாரியுடன் சேர்ந்து அஸ்வின் அமைத்த பார்ட்னர்ஷிப், ஆட்டத்தை டிரா செய்ய உதவி, தொடரை வெல்லவும் காரணமாக அமைந்தது. இந்த பார்ட்னர்ஷிப் மட்டும் உடைந்திருந்தால் நிச்சயம் ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளைச் சாய்த்து வெற்றி பெற்றிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
பாகிஸ்தானுடன் “மைண்ட் கேம்”
கடந்த 2022ம் ஆண்டு டி20 உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அஸ்வின் ஆடிய மைண்ட் கேம் என்றென்றும் மறக்க முடியாது. அஸ்வின் சந்தித்தது ஒரே பந்துதான், அந்த ஒரு பந்து ஆட்டத்தையே திருப்பிப் போட்டது. பாகிஸ்தான் அணி 159 ரன்கள் சேர்த்தது. 160 ரன்கள் இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.
31 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது. கோலி, ஹர்திக் பாண்டியா கூட்டணி ஆட்டத்தை கையில் எடுத்து வெற்றி நோக்கி நகர்த்தினர். கடைசி ஓவரில் இந்திய அணி வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. நவாஸ் கடைசி ஓவரை வீசினார். முதல் பந்தில் ஹர்திக் பாண்டியா 40 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து தினேஷ் கார்த்திக் களமிறங்கினார். 2வது பந்தில் டிகே ஒரு ரன்னும், 3வது பந்தில் கோலி 2 ரன்களும் சேர்த்தனர்.
4வது பந்தை நவாஸ் கோலி மார்புக்கு மேல் வீசவே கோலி அதை சிக்ஸர் அடித்தார், நடுவரும் நோபால் வழங்கினார். ரீபாலை நவாஸ் வைடாக வீசினார். மீண்டும் நவாஸ் வீசிய பந்து பைஸில் 3 ரன்களை பெற்றுத் தந்தது. 5வது பந்தில் தினேஷ் கார்த்திக் ரன்அவுட் ஆகிவெளியேறினார். கடைசி ஒரு பந்தில் இந்திய அணி வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்டது. அஸ்வின் கடைசிப் பந்தைச் சந்திக்கக் களமிறங்கினார்.
மிகவும் கூலாக, எந்தப் பதற்றமும் இன்றி அஸ்வின் காணப்பட்டார். அதேநேரம், பாகிஸ்தான் பந்துவீச்சாளர் நவாஸ், மற்ற வீரர்கள் அனைவரும் பதற்றத்துடனும், பரபரப்புடனும் இருப்பதையும் அஸ்வின் கவனித்தார். நவாஸ் கடைசிப்பந்தை வீசியவுடன் அஸ்வின் சற்று ஸ்டெம்பிலிருந்து முன்னோக்கி நகரவே பந்து வைடாகச் சென்றது. நடுவரும் வைடு வழங்கவே, ஒரு ரன் கிடைத்தது. பாகிஸ்தான் வீரர்களின் மனநிலையை, பதற்றத்தை நன்கு அறிந்து அஸ்வின் புத்திசாலித்தனமாக செயல்பட்டு ஒரு ரன்னைப் பெற்றார்.
இந்திய அணி வெற்றிக்கு ஒரு பந்தில் ஒரு ரன் தேவைப்பட்டது. நவாஸ் வீசிய பந்தில் அஸ்வின் ஒரு ரன் எடுக்கவே, இந்திய அணி அபார வெற்றி பெற்றது. ஆட்டத்தில் கடைசிவரை கோலி ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றாலும், அஸ்வினின் கடைசிநேர சமயோஜித ஆட்டம், செயல் எளிதாக ஒரு ரன்னைப் பெற்றுக் கொடுத்தது.
எதிரணிக்குப் பந்துவீசும்போதும் பேட்டர்களின் மனநிலை அறிந்து பந்துவீசுவதில் அஸ்வினுக்கு நிகர் அவர்தான். பேட்டர்கள் எந்த சூழலில் இருக்கிறார்கள், பதற்றத்துடன் இருக்கிறார்களா, நெருக்கடியா என்பதை அறிந்து அஸ்வின் அதற்கேற்றார்போல் பந்துவீசுவார். அதேபோலவே, பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திலும் வீரர்களின் பதற்றம், படபடப்பு, ஆகியவற்றை எளிதாக சாதகமாக மாற்றி அணிக்கு அஸ்வின் வெற்றி தேடித்தந்துள்ளார்.
ஒரே தொடரில் 27 விக்கெட்
டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் பல சாதனைகளை, மைல்கல்களை எட்டியுள்ளார். அதிவேகமாக 300 விக்கெட், 2வது அதிகபட்ச விக்கெட் என பல சாதனைகளை அஸ்வின் படைத்துள்ளார். ஆனால், சிறந்த பந்துவீச்சாக இருப்பது 2016ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில்தான் அஸ்வினுக்கு மைல்கல்லாக அமைந்தது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் இந்த தொடரில் மட்டும் அஸ்வின் 27 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதிலும், இந்தூரில் 2016, அக்டோபர் 8ம் தேதி நடந்த 3வது டெஸ்டில் அஸ்வின் 13 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது அவரின் சிறந்தப் பந்துவீச்சில் ரத்தினமாகும். முதல் இன்னிங்ஸில் இந்திய அணி கோலியின் இரட்டை சதம்,ரஹானேயின் சதம் ஆகியவற்றால் 557 ரன்களில் டிக்ளேர் செய்தது. இதில், முதல் இன்னிங்ஸில் அஸ்வின் 81 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளையும், 2வது இன்னிங்ஸில் 59 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தி, 321 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெல்ல காரணமாக அமைந்தார். ஆட்டநாயகன் விருதும், தொடர்நாயகன் விருதையும் அஸ்வின் கைப்பற்றினார்.
தோனியின் நம்பிக்கை தளபதி
சிஎஸ்கே அணியில் இருந்தபோதிலிருந்து அஸ்வினின் பந்துவீச்சையும், திறமையையும் தோனி நன்கு பயன்படுத்தியவர். அஸ்வின் தனது திறமையை வெளிப்படுத்த பல வாய்ப்புகளை தோனி வழங்கியவர். சிஎஸ்கே கேப்டனாக இருந்தபோதும், இந்திய அணிக்கு தோனி கேப்டனாக இருந்தபோதும், அஸ்வினின் திறமையை வெளிக்கொண்டு வந்ததில் தோனிக்கு முக்கிய பங்குண்டு.
கடந்த 2013ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராஃபி இறுதி ஆட்டத்திலும் அஸ்வினின் திறமை மீது தோனி நம்பிக்கை வைத்து பந்துவீச வைத்தார். தோனியின் நம்பிக்கையைக் காப்பாற்றிய அஸ்வின் கோப்பையை வென்றுகொடுத்தார். இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி கடைசி ஓவரில் வெற்றிக்கு 15 ரன்கள் சேர்க்க வேண்டும். ஏற்கனவே அஸ்வின் 3 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 6 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி கச்சிதமாக பந்துவீசியிருந்தார்.
இதனால் கடைசி ஓவரை வீச தோனி அஸ்வினை அழைத்தார். அஸ்வின் கடைசி ஓவரை கட்டுக்கோப்பாக வீசி 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வெல்ல வைத்தார். தனக்குக் கிடைத்த வாய்ப்பை அஸ்வின் சரியாகப் பயன்படுத்தி சாம்பியன்ஸ் டிராஃபியை இந்திய அணி வெல்ல முக்கியப் பங்காற்றினார்.
டென்னிஸ் லில்லி சாதனை முறியடிப்பு
டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் 537 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அளவில் அதிகபட்ச விக்கெட் எடுத்த 2வது வீரர் என்ற பெருமையைப் பெற்றிருந்தாலும் அவரின் 300-வது விக்கெட்டுக்கென தனிச்சிறப்பு இருக்கிறது.
ஆம், 54 போட்டிகளிலேயே அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 300-வது விக்கெட்டை எட்டினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 300 விக்கெட்டை எட்டி, டென்னிஸ் லில்லியின் சாதனையை அஸ்வின் முறியடித்தார். டென்னிஸ் லில்லி 56 டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட்டை எட்டியநிலையில் அஸ்வின் 54 போட்டிகளில் இந்த சாதனையை நிகழ்த்தினார். அதுமட்டுமல்லாமல், முரளிதரனைவிட 4 போட்டிகள் குறைவாகவே விளையாடி இந்த சாதனையை அஸ்வின் நிகழ்த்தினார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 2011ம் ஆண்டு அறிமுகமாகிய அஸ்வின் அடுத்த 6 ஆண்டுகளிலேயே 300 விக்கெட்டுகளை எட்டி கிரிக்கெட் உலகையே வியப்பில் ஆழ்த்தினார். இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் இந்த சாதனையை நிகழ்த்தியபோது அவருக்கு 29 வயது, அஸ்வினுக்கு 31வயதாகி இருந்தது. மறைந்த ஷேன் வார்ன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி 6 ஆண்டுகளில் 300 விக்கெட்டுகள் சாதனையை எட்டிய நிலையில் அஸ்வின் 6 ஆண்டுகள், 18 நாட்களில் இந்த மைல்கல்லை அடைந்தார்.
நாக்பூரில் இலங்கைக்கு எதிராக நடந்த இந்த டெஸ்டிலும் அஸ்வின் இரு இன்னிங்ஸிலும் சேர்த்து 8 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணி இன்னிங்ஸில் 239 ரன்களில் வெற்றி் பெற முத்தாய்ப்பாக திகழ்ந்தார்.
இந்திய அணியில் அஸ்வின் சாதிக்க, உலகக் கிரிக்கெட்டில் முத்திரை பதிக்க இன்னும் ஏராளமான இடங்கள் இருக்கையில், கிரிக்கெட் பேருலகம் திடீரென அவரின் பங்களிப்பை நேற்றுடன் இழந்தது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு