பட மூலாதாரம், Getty Images
புகழ்பெற்ற இந்தியத் தொழிலதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா காலமானார். அவருக்கு வயது 86. அவரது மறைவை டாடா குழுமம் ஒரு அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.
அந்த அறிக்கையில், டாடா சன்ஸ்-இன் தற்போதைய தலைவர் நடராஜன் சந்திரசேகரன், ரத்தன் டாடா ‘உண்மையிலேயே அசாதாரணமான தலைவர்’ என்று கூறியிருக்கிறார்.
மேலும் அந்த அறிக்கையில், “ஒட்டுமொத்த டாடா குடும்பத்தின் சார்பாக, அவரது அன்புக்குரியவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர் மிகவும் ஆர்வத்துடன் போராடிய கொள்கைகளை நிலைநிறுத்த பாடுபடும்போது, அவரது மரபு தொடர்ந்து எங்களுக்கு ஊக்கமளிக்கும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
டாடா குழுமத்தின் தலைவராக ரத்தன் டாடா இருந்த காலத்தில், ஆங்கிலோ-டச்சு எஃகு உற்பத்தியாளர் கோரஸ், பிரிட்டனைச் சேர்ந்த கார் பிராண்டுகளான ஜாகுவார், லேண்ட் ரோவர், மற்றும் உலகின் இரண்டாவது பெரிய தேயிலை நிறுவனமான டெட்லி ஆகியவை உட்பட பல பெரிய நிறுவனங்களை டாடா குழுமம் தன்வசப்படுத்தியது.
இன்று டாடா குழுமத்தின் ஆண்டு வருமானம் 100 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் (இந்திய மதிப்பில் சுமார் 8.4 லட்சம் கோடி ரூபாய்) மேலாக உள்ளது.
பட மூலாதாரம், Getty Images
உதவியாளராக இருந்து தலைவராக உயர்ந்தவர்
ரத்தன் டாடா 1937-ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார். அவரது தந்தை ஜாம்ஷெட்ஜி டாடாவின் பேரனான நாவல் டாடா.
1955-ஆம் ஆண்டு ரத்தன் டாடாவுக்கு 17 வயதானபோது, கட்டுமானமும் பொறியியலும் கற்க அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்திற்குச் சென்றார்.
உயர்கல்விக்குப் பிறகு, 1962-ஆம் ஆண்டு டாடா நிறுவனத்தில் உதவியாளரகச் சேர்ந்தார். அதில் பல பதவிகளை வகித்த பின் 1974-இல் டாடா நிறுவனத்தின் இயக்குநரானார்.
1975-ஆம் ஆண்டு, அமெரிக்காவின் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் மேம்பட்ட வணிக மேலாண்மைப் பட்டம் பெற்றார்.
பட மூலாதாரம், Getty Images
பின்னர் 1981-ஆம் ஆண்டு டாடா நிறுவனங்களின் தலைவராக நியமிகப்பட்டார் ரத்தன் டாடா.
அதன்பின் 1991-ஆம் ஆண்டு, ஜே.ஆர்.டி டாடாவுக்குப்பின் மொத்த டாடா குழுமத்திற்கும் தலைவரனார். அந்த பதவியில், டாடா நிறுவனத்தை மறுசீரமைப்பு செய்யத் துவங்கினார்.
2008-ஆம் ஆண்டு ‘டாடா நானோ’ என்ற சிறிய காரை அறிமுகப்படுத்தியது அவரது பெரும் திட்டங்களில் ஒன்றாகப் பார்க்கப்பட்டது.
இந்தியத் தொழிற்துறைக்கு அவரது சேவைகளை அங்கீகரிக்கும் விதமாக 2008-ஆம் ஆண்டு அவருக்கு இந்திய அரசு பத்ம பூஷன் விருது வழங்கியது.
2012-ஆம் ஆண்டு, 50 ஆண்டுகள் டாடா குழுமத்தின் தலைவராக இருந்தபின்னர், அவர் அப்பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். அதன்பின் சன்ஸ்-இன் கௌரவத் தலைவராக நியமிக்கப்பட்டார்.