பேசிக்கொண்டிருக்கும்போது இடையில் ஆரியபவனின் ஈவினிங் ஸ்பெஷல் போண்டா குருமா வந்தது. வாங்கி சாப்பிட்டவாறே பேச ஆரம்பித்தார், அதே பகுதியிலுள்ள பூர்ணிமா ஹோட்டலின் உரிமையாளார் சுகுமார். “கடைசில கவுண்டமணி காமெடி மாதிரி ஆகிருச்சுல… நானும் பக்கத்துல ஹோட்டல் வச்சிருக்கேன். இருந்தாலும் ஈவினிங் மறக்காம இங்க வந்துருவேன். என்னோட ஃபேவரைட் இதோ இந்த போண்டா குருமாதான். நானும் நிறைய ஊர்ல சாப்பிட்டுருக்கேன். இப்பவரைக்கும் இது கொடுக்குற டேஸ்ட் எங்கேயும் கிடைக்கல. அதுதான் இங்க நாங்க தொடர்ந்து வர்றதுக்கான காரணம்” என்றார்.
ஆரியபவன் ஹோட்டல் உரிமையாளர்கள் பரமானந்தன் & வெங்கட் ராமனிடம் பேசினோம்…
“45 வருஷம் ஆயிடுச்சு. ஆரம்பிக்கும்போது இந்தளவுக்கு இந்த ஹோட்டல் வரவேற்பைப் பெறும்னு நாங்க எதிர்பார்க்கல. இங்க சுத்தி இருக்கறவங்க எல்லாரும் நடுத்தர மக்கள்தான். இவங்களுக்கு திருப்தியான சுவையில், நியாயமான விலையில் கொடுக்கணும்ங்கிறதுதான் முதல் நோக்கமா இருந்துச்சு. அப்புறம் மக்களோட பேராதரவோட கொஞ்சம் கொஞ்சமா வளர ஆரம்பிச்சு, இங்க வந்து நிக்குது. காஞ்சிபுரத்துல யார் கேட்டாலும் ஆர்யபவன்னா டேஸ்ட்டுன்னு சொல்லுவாங்க. அது என்னைக்கும் மாறக்கூடாதுன்னு இன்னிக்கு வரை கையால மாவு அரைச்சு, தரமான உணவுகளைத் தயார் செய்யுறோம்.
காலை, மதியம், மாலை, இரவுன்னு எல்லா வேளையும் உணவு தயாராகும்போது முதல்ல நாங்க டேஸ்ட் பண்ணிருவோம் அதுக்கு அப்புறம் ஏதாவது மாற்ற வேண்டி இருந்தா சொல்லி மாத்திருவோம்.
காமாட்சி அம்மன், சங்கர மடத்துக்கு வந்துட்டுப் போறவங்க இங்கேயும் மறக்கமா வந்திருவாங்க… முன்னாடி இந்தப் பகுதியில ஷூட்டிங் நடக்கும்போது ரஜினிகாந்த், தேங்காய் சீனிவாசன், சுலோச்சனா, ஸ்ரீகாந்த், ஸ்ரீதேவின்னு பலரும் இங்கே வந்து சாப்பிட்டு இருக்காங்க, இங்கிருந்தும் அவங்களுக்கு சாப்பாடு போகும். வர்ற கஸ்டமர்ஸ் எல்லாம் ஹோட்டலை டெவலப் செய்யச் சொல்வாங்க. ஆனா, எங்களுக்குத் தயக்கமா இருக்கு. எங்களைப் பொறுத்தவரை பழைமையான இந்த லுக்தான் எங்களோட அடையாளமா பார்க்குறோம். இப்ப இருக்குற தலைமுறையினர், அந்தக் காலத்து ஹோட்டல் எப்படி இருந்ததுனு தெரிஞ்சுக்கணும், அந்த ஃபீலிங்கை கொடுக்க நினைக்குறோம் அவ்ளோதான்” என்றனர்.
பாரம்பர்யத்தையும் தரத்தையும் மக்கள் எப்போதும் ஆதரிக்க விரும்புகிறார்கள் என்பதற்கு ஆரியபவன் ஹோட்டல் ஓர் உதாரணம். தரத்துக்கு ஏற்ற விலை, நிறைவான சுவை எங்கு கிடைத்தாலும் அங்கு மக்கள் கூட்டம் நிரம்பும் என்பது சந்தேகமில்லை.