எங்கே பார்த்தாலும் கணகளைக் கவரும் வகையில் நாவல் பழங்கள் விற்பனைக்கு கொட்டிக் கிடக்கின்றன. சர்க்கரைநோயாளிகளுக்குப் பரிந்துரைக்கப்படும் நாவல் பழத்தில், விதம் விதமான உணவுகள் தயாரிக்கலாம் என்பது பலருக்கும் தெரியாது. இந்த வார வீக் எண்டை நாவல் பழ விருந்தால் ‘ஊதா கலரு’ ஸ்பெஷலாக்கலாமா…?
நாவல்பழ ரசம்
தேவையானவை:
நாவல் பழம் – 10 (கொட்டை நீக்கியது)
ரசப்பொடி – அரை டீஸ்பூன்
தக்காளி – ஒன்று (சிறியது)
மிளகு – சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன்
வெல்லத்துருவல் – ஒரு டீஸ்பூன்
பூண்டு – 2 பல் (ஒன்றிரண்டாகத் தட்டியது)
நறுக்கிய கொத்தமல்லித்தழை, புதினா – தலா ஒரு டேபிள்ஸ்பூன்
வேகவைத்த துவரம்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தாளிக்க:
கடுகு – கால் டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – ஒன்று
கறிவேப்பிலை – சிறிதளவு
நெய் – ஒரு டீஸ்பூன்

செய்முறை:
நாவல்பழத்துடன் தக்காளி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். வாணலியில் நெய்விட்டு சூடாக்கி, கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். இதனுடன் அரைத்த நாவல்பழச்சாறு ஊற்றி அடுப்பைக் குறைந்த தணலில் வைக்கவும்.
பிறகு துவரம்பருப்பு, ரசப்பொடி, உப்பு, தட்டிய பூண்டு, மிளகு – சீரகத்தூள் சேர்த்து ஒரு கொதி விடவும். ரசம் நுரைத்து வரும் போது வெல்லத்துருவல் சேர்த்து இறக்கவும். மேலே கொத்தமல்லித்தழை, புதினா தூவி சூடான சாதத்துடன் பரிமாறவும்.
நாவல்பழ அல்வா
தேவையானவை:
நாவல் பழம் – 2 கப் (கொட்டை நீக்கியது)
கோதுமை பிரெட் – 2
நாட்டுச் சர்க்கரை – அரை கப்
ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன்
உடைத்த பாதாம், முந்திரி – தலா ஒரு டேபிள்ஸ்பூன்
பாதாம் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன்
பால் பவுடர் – 2 டேபிள்ஸ்பூன்
வேஃபர் கோன் – தேவையான அளவு
செர்ரி – தேவையான அளவு (அலங்கரிக்க)
நெய் – தேவையான அளவு

செய்முறை:
பாதாம், முந்திரியைத் தண்ணீரில் ஒரு மணிநேரம் ஊறவைத்து, மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். ஒரு கப் நாவல் பழத்துடன் சிறிதளவு தண்ணீர்விட்டு மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். பிரெட்டின் ஓரங்களை நீக்கிவிட்டு நாவல்பழச்சாற்றில் பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும். வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய்விட்டுச் சூடானதும் மீதமுள்ள நாவல்பழத்தைச் சேர்த்து வதக்கவும்.
இதனுடன் ஊறவைத்த பிரெட் விழுது, சிறிதளவு நெய்விட்டு அடுப்பை குறைந்த தணலில் வைத்துக் கிளறவும். பிறகு, ஏலக்காய்த்தூள், நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கிளறவும். கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும்போது பால் பவுடர் சேர்த்து கிளறி இறக்கவும். மேலே பாதாம் துருவலைத் தூவவும். இந்தக் கலவையை ஒரு ஸ்பூனால் எடுத்து வேஃபர் கோன்களில் நிரப்பி, மேலே செர்ரி வைத்துப் பரிமாறவும்.
நாவல்பழ சாக்கி இட்லி
தேவையானவை:
இட்லி அரிசி, பச்சரிசி – தலா ஒரு கப்
சாக்லேட் பேஸ்ட் – கால் கப்
(எசன்ஸ் கடைகளில் கிடைக்கும்)
வெந்தயம் – ஒரு டீஸ்பூன்
ஆமணக்கு விதை – 2
நாவல் பழம் – 2 கப் (கொட்டை நீக்கி பொடியாக நறுக்கியது)
முழு உளுத்தம்பருப்பு – அரை கப்
டூட்டி ஃப்ரூட்டி – 2 டேபிள்ஸ்பூன்
விருப்பமான மோல்டு – தேவையான அளவு
நெய் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை:
அரிசி வகைகளை ஒன்றாகக் கலந்து இரண்டு மணி நேரம் ஊறவைத்து அரைக்கவும். உளுத்தம்பருப்புடன் வெந்தயம், ஆமணக்கு விதை சேர்த்து இரண்டு மணி ஊறவைத்து அரைக்கவும். அரைத்த அரிசி, பருப்பை ஒன்றாகக் கலந்து புளிக்கவிடவும்.
ஒரு கப் நாவல் பழத்துடன் சாக்லேட் பேஸ்ட் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்து எடுக்கவும். புளித்த மாவுடன் அரைத்த விழுது, மீதமுள்ள நாவல்பழம், உப்பு, டூட்டி ஃப்ரூட்டி சேர்த்துக் கலக்கவும். விருப்பமான மோல்டில் நெய் தடவி, மாவு கலவையை ஊற்றி, 20 நிமிடங்கள் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.
நாவல்பழ ஜெல்லி
தேவையானவை:
ஜெலட்டின் – 20 கிராம் (2 சிறிய பாக்கெட்)
சர்க்கரை – ஒரு கப்
நாவல்பழச்சாறு – அரை கப்
கடைந்த பாலேடு – அரை கப்
வறுத்த விருப்பமான நட்ஸ் – 2 டேபிள்ஸ்பூன் (ஒன்றிரண்டாக உடைத்தது)
நாவல்பழத் துண்டுகள் – கால் கப்
வெண்ணெய் – சிறிதளவு

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் அரை கப் தண்ணீர் ஊற்றி ஜெலட்டினை 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். அந்தப் பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி சிறு தீயில் வைத்து ஜெலட்டினை கரையவிட்டு இறக்கவும். மற்றொரு பாத்திரத்தில் சர்க்கரையுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்துக் கரையவிட்டு இறக்கி, ஆற விடவும். இதனுடன் ஜெலட்டின் கரைசல், நாவல்பழச்சாறு சேர்த்துக் கலக்கவும்.
விரும்பிய அச்சில் சிறிதளவு வெண்ணெய் தடவி ஜெலட்டின் – நாவல் பழச்சாறு கரைசலை ஊற்றி குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும். ஆறு மணி நேரம் கழித்து வெளியே எடுத்து துண்டுகளாக்கவும். பாலேட்டுடன் வறுத்த நட்ஸ், ஜெல்லித் துண்டுகள், நாவல்பழத் துண்டுகள் சேர்த்துக் கலந்து பரிமாறலாம். ஜெல்லியை அப்படியேவும் சாப்பிடலாம். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.