விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வ.புதுப்பட்டியை சேர்ந்த சகோதரிகள் விஷாலி, சத்தியப்பிரியா நேபாளத்தில் நடைபெற்ற இன்டர்நேஷனல் யோகா போட்டியில் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளனர். இதில் ஆச்சர்யமும் சிறப்பும் என்னவென்றால்,
பயிற்சியாளர் இல்லாமல் யூடியூப் பார்த்து யோகாசன பயிற்சி பெற்று, சாதித்துள்ளனர் இந்த சகோதரிகள்.
வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு, வியப்புடன் அந்த சகோதரிகளிடம் பேசினோம். யோகாசனப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மாணவி சத்தியப்பிரியா, “ஸ்ரீவில்லிபுத்தூர் பக்கத்துல வ.புதுப்பட்டி தான் எங்களோட ஊர். அப்பா பத்மநாபன்(54), அம்மா அருணா(45). என்னோட அக்கா விஷாலி, பி.ஏ. இங்கிலீஷ் முதலாமாண்டு படிக்கிறா. நான் 12-ம் வகுப்பு இப்போதுதான் முடித்துள்ளேன்.
சின்ன வயசுல இருந்தே யோகா மேல எங்க ரெண்டு பேருக்கும் அதிக ஆர்வம் உண்டு. நான் 10 வருஷமா யோகா பயிற்சி பண்ணிட்டு வர்றேன். மாநில அளவிலான போட்டி, மாவட்ட அளவிலான போட்டி, தேசிய அளவிலான போட்டி இப்படி நிறைய போட்டிகள்ல நானும், அக்காவும் கலந்துக்கிட்டு பரிசுகள் வாங்கிருக்கோம். மாநில அளவில் மட்டுமே 50க்கும் மேற்பட்ட போட்டிகள்ல கலந்துக்கிட்டு அத்தனையிலும் பதக்கம் வாங்கிருக்கிறேன். டிரையம்ப் மற்றும் நோபல் வேர்ல்டு ரிக்கார்டு புக்ல சாதனை படைச்சு மெடல் வாங்கிருக்கேன். அதுபோல கோவால நடந்த நேஷனல் போட்டியில கலந்துக்கிட்டு தங்கம் வாங்கிருக்கேன்.