
முத்துவேல்
தஞ்சாவூர் மாவட்டம் மைக்கல்பட்டி பள்ளிக்கூடத்தில் படித்த மாணவி மதமாற்றத்தால் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி வீடியோ வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய விஷ்வ ஹிந்து பரிஷத் பிரமுகர் முத்துவேல், பாதிரியார் ஒருவரை பணம் கேட்டு மிரட்டியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரியலூர் தூய லூர்து அன்னை ஆலயத்தில் பாதிரியாராக இருந்துவந்த டோமினிக் சாவியே என்பவரிடம் 25 லட்ச ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதாக விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் அரியலூர் மாவட்ட செயலாளர் முத்துவேலை அரியலூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூய லூர்து அன்னை ஆலயத்தில் பாதிரியாராகவும் ஆர்.சி. பள்ளியின் தாளாளராகவும் இருந்து வருகிறார் டோமினிக் சாவியோ. இவர் 2019ஆம் ஆண்டு முதல் அந்த தேவாலயத்தின் பங்குத் தந்தையாகவும் தாளாளராகவும் செயல்பட்டு வருகிறார்.
இவருக்கு எதிராகவும் இவர் நடத்திவரும் பள்ளிக்கூடங்களுக்கு எதிராகவும் “அரியலூர் பள்ளிக்கூடங்களில் இந்துப் பெண்களை வன்கொடுமை செய்யும் பாதிரியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தப் பள்ளிக்கூடங்களில் பிள்ளைகளைப் படிக்கவைக்கும் இந்துக்களே உஷார். உங்கள் பிள்ளைகளைக் கிறிஸ்தவப் பள்ளிகளில் சேர்க்காதீர்கள்” என்று பிளக்ஸ் போர்டு அடித்து அரியலூர் மாவட்டத்தில் ஆங்காங்கே வைக்கவும் தமிழ்நாடு முழுக்க ஆர்ப்பாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யவும் விஷ்வஹிந்து பரிஷத்தின் அரியலூர் மாவட்டச் செயலாளரான முத்துவேல் என்பவர் முயற்சிப்பதாககூறி, வினோத் என்பவர் டோமினிக் சாவியோவை அணுகியுள்ளார்.
இது தொடர்பான ஆடியோ பதிவு ஒன்றையும் அவர் கொடுத்துள்ளார்.
பள்ளி நிர்வாகி புகார்
ஆனால், தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்பதால் பணம் ஏதும் கொடுக்க முடியாது என டோமினிக் சாவியோ கூறியுள்ளார்.
இதற்குப் பிறகு முத்துவேல் டோமினிக் சாவியோ மீது சமூகவலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, டோமினிக் சாவியோ அரியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து முத்துவேலை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளது மாவட்ட காவல்துறை.
இந்த முத்துவேல் மீது 15க்கும் மேற்பட்ட வழக்குகள் ஏற்கெனவே நிலுவையில் உள்ளன. மதமாற்றம் செய்ய முயன்றதாகக் கூறி சில கிறிஸ்தவர்களை தோப்புக்கரணம் போட வைத்த வழக்கு, இரு மதத்தினர் இடையே பகையைமைத் தூண்டும் விதத்தில் நோட்டீஸ் அடித்து விநியோகித்த வழக்கு உள்ளிட்ட வழக்குகள் இவர் மீது இருக்கின்றன.
ஆனால், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில்தான் இவரது பங்கு வெகுவாகப் பேசப்பட்டது.
அரியலூர் மாவட்டம் வடுகப்பாளையத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள தனியார் கிறிஸ்துவ பள்ளியில் படித்து வந்தார். கடந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி இவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
அவர் மருத்துவ சிகிச்சையில் இருக்கும்போது, அந்த மாணவி பேசுவது போல ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டது. அந்த வீடியோவில், இரண்டு வருடங்களுக்கு முன்பாக தன்னை பள்ளியில் மதமாறும்படி கட்டாயப்படுத்தியதாகவும் அதற்கு தான் ஒத்துவராததால் திட்டியும் அதிக வேலை வாங்கியும் கொடுமைப்படுத்தியதாகவும் அந்த மாணவி கூறுவது போல வீடியோ காட்சி இருந்தது.
அந்த வீடியோவை வெளியிட்டவர்தான் இந்த முத்துவேல். கிறிஸ்தவ பள்ளிக்கூடம் ஒன்றில் படித்துவந்த மாணவி, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகத் தெரிந்ததும் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று வீடியோ எடுத்து, அதனை எடிட் செய்து வெளியிட்டதாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. மாணவி மரணமடைந்த வழக்கை தற்போது சி.பி.ஐ. விசாரணை செய்து வருகிறது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பிற மதத்தினர் குறித்து மோசமாகப் பேசிய விவகாரத்தில் முத்துவேல் ஏற்கனவே கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: