மெஸ்ஸியின் 10-ம் நம்பர் ஜெர்ஸியை அணியும் யாமல்! | Yamal holds Messi s number 10 jersey for barcelona

Share

பார்சிலோனா: ஸ்பெயின் வீரர் லாமின் யாமல், பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில், அவருக்கு மெஸ்ஸியின் 10-ம் எண் ஜெர்ஸியை வழங்கியுள்ளது அந்த அணி நிர்வாகம்.

கால்பந்து உலகின் வருங்கால நட்சத்திரமாக அறியப்படுகிறார் 18 வயதான லாமின் யாமல். அதற்கான தகுதியை கிளப் அளவிலும், சர்வதேச அளவிலும் அவர் நிரூபித்துள்ளார். 2023 சீசன் முதல் பார்சிலோனா சீனியர் அணியில் அவர் விளையாடி வருகிறார்.

பார்சிலோனா அணிக்காக 18 கோல்கள் பதிவு செய்துள்ளார். சக அணி வீரர்கள் கோல் பதிவு செய்ய 25 அசிஸ்ட்களை செய்து உதவியுள்ளார். லா லிகா, கோபா தெல் ரே, ஸ்பானிஷ் சூப்பர் லீக் உள்ளிட்ட உள்நாட்டு தொடரில் அவர் இடம்பெற்ற பார்சிலோனா அணி நடப்பு சீசனில் பட்டம் வென்றுள்ளது. சாம்பியன்ஸ் லீக்ஸ் தொடரிலும் அரையிறுதி வரை அந்த அணி முன்னேறி இருந்தது.

மறுபக்கம் பார்சிலோனா அணிக்காக 2004 முதல் 2021 வரையில் மெஸ்ஸி விளையாடி இருந்தார். அந்த அணிக்காக 474 கோல்களை மெஸ்ஸி பதிவு செய்துள்ளார். பல்வேறு கோப்பைகளை பார்சிலோனா அணிக்காக மெஸ்ஸி வென்று கொடுத்துள்ளார். 2021-க்கு பிறகு பிஎஸ்ஜி அணியில் விளையாடி இருந்தார். இப்போது இன்டர் மியாமி அணிக்காக விளையாடி வருகிறார். பார்சிலோனா மட்டுமல்லாது மற்ற கிளப் அணிகள் மற்றும் அர்ஜென்டினா அணிக்காக 10-ம் எண் ஜெர்ஸியை அணிந்து மெஸ்ஸி விளையாடி வருகிறார்.

இந்நிலையில்தான் மெஸ்ஸியின் 10-ம் எண் ஜெர்ஸியை யாமலுக்கு வழங்கி உள்ளது பார்சிலோனா அணி நிர்வாகம். இதற்கு காரணம் களத்தில் அவரது துல்லிய செயல்பாடு என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அவர் கால்பந்து உலகின் அடுத்த நட்சத்திர வீரராக பார்க்கப்படுவதும் இதற்கு காரணம். 16 வயதில் ஸ்பெயின் அணிக்காக சர்வதேச போட்டிகளில் அவர் அறிமுகமாகி இருந்தார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com