இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளோட எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிட்டே வர்றதும், தாம்பத்திய உறவுல நீரிழிவு சிலருக்கு இடர்ப்பாட்டை ஏற்படுத்துறதும் எல்லோருக்கும் தெரிஞ்ச விஷயங்கள்தான். ஆனா, தெரியாத விஷயம் இது ஆணுறுப்பையும் பாதிக்கும் என்பதுதான் என்கிற செக்ஸாலஜிஸ்ட் காமராஜ், இது தொடர்பான கேஸ் ஹிஸ்டரி ஒன்றையும் பகிர்ந்துகொண்டார்.

”அந்த ஆணுக்கு 35-ல இருந்து 40 வயசுக்குள்ள இருக்கும். நீரிழிவு பிரச்னையால பாதிக்கப்பட்டிருந்தார். அதுக்காக ஆரம்பத்துல மாத்திரை எடுத்துக்கிட்டவர், வாட்ஸ் அப் ஃபார்வர்டுகளை நம்பி, மாத்திரை சாப்பிடுறதை நிறுத்திட்டு, உணவுக் கட்டுப்பாட்டை மட்டும் ஃபாலோ பண்ண ஆரம்பிச்சிருக்கார். திடீர்னு ஒருநாள், அவரோட ஆணுறுப்புல எறும்பு கடிச்ச மாதிரி சுரீர்னு ஒரு வலி வந்திருக்கு. அதை அவர் பெருசா எடுத்துக்கலை. இந்த வலி அடிக்கடி வந்தப்போகூட வலி தாங்கக்கூடியதா இருந்ததால, பிரச்னையோட தீவிரம் புரியாம எந்தச் சிகிச்சையும் எடுத்துக்காமலே இருந்திருக்கார். ஒருநாள் தாம்பத்திய உறவுல ஈடுபட முயற்சி செஞ்சப்போ முடியாம கஷ்டப்பட்டிருக்கார். தவிர, ஆணுறுப்புல ஏதோ வித்தியாசமா இருக்கேன்னு ஃபீல் பண்ணிட்டு, தன்னோட உறுப்பை கவனிக்க ஆரம்பிச்சிருக்கார். அப்போ தான் தன்னோட உறுப்பு மேல் நோக்கி வளைஞ்சிருக்கிறதைக் கண்டுபிடிச்சிருக்கார். பயந்துபோய் என்கிட்ட வந்தார்.
வளைஞ்ச இடத்துல சின்னதா ஒரு கட்டி இருந்துச்சு. நீரிழிவுக்கான மருந்து, மாத்திரைகளை சரியா எடுத்துக்காம, அதனால ‘அன்கன்ட்ரோல் டயாபடீஸ்’ பிரச்னை இருக்கிற சிலருக்கு இந்த மாதிரி ஆணுறுப்புல கட்டி வரும். ஃபிட்ஸுக்கு சாப்பிடுற சில மருந்துகளாலும் இந்தப் பிரச்னை வரலாம். ஆணுறுப்புல விரிசல் ஏற்பட்டு, அந்த இடத்துல அளவுக்கு அதிகமா கொலாஜன் சுரந்தாகூட கட்டி வரலாம். இதுக்குப் பேரு பைரோனி டீசிஸ். இந்தப் பிரச்னை வந்தா ஆணுறுப்பு மேல் நோக்கியோ அல்லது ‘எல்’ ஷேப்பிலோ வளைய ஆரம்பிக்கும். வலியும் இருக்கும். இவர்களால, வாழ்க்கைத்துணையோட உறவு கொள்ளவும் முடியாது. பைரோனி பற்றிய விழிப்புணர்வு இல்லாதவங்க ரொம்ப பயந்திடுவாங்க.
ஆணுறுப்புல தொடர்ந்து வலி இருந்தா உடனே டாக்டரை பாருங்க. ஒருவேளை பைரோனி வந்தாலும், அதை சரி செய்ய இன்னிக்கு பல சிகிச்சைகள் இருக்கு. தெரபிட்டிக் அல்ட்ரா சவுண்ட் முறையில கட்டியைக் கரைக்கலாம். ஷாக் தெரபி கொடுத்தும், அறுவை சிகிச்சை செய்தும்கூட கட்டியை நீக்கலாம். நீரிழிவு பாதிப்பு இன்னிக்கு பலருக்கும் இருக்கிறதால, பைரோனியால பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கையும் சமீபத்துல அதிகமாகிட்டே வருது. ஸோ, நீரிழிவு வந்தா மாத்திரை சாப்பிடுங்க. வாட்ஸ் அப் ஃபார்வர்டுகளை நம்பி சிக்கல்ல மாட்டிக்காதீங்க” என்கிறார் டாக்டர் காமராஜ்.