“மூன்று பந்துகளை வைத்து அவரை முடக்கிவிட முடியாது" – சூர்யகுமார் யாதவ் குறித்து ரோஹித் சர்மா

Share

நேற்று சேப்பாக்கத்தில் நடந்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையான ஒருநாள் போட்டியில் இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியைத் தழுவியிருந்தது. 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி தொடரைக் கைப்பற்றியது.

இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் செட்டில் ஆன பின்பு அடிக்கலாம் என்ற பழைய ஓடிஐ பார்முலாவைப் பின்பற்ற நினைத்து அடுத்தடுத்து அவுட்டாகி நிலை தடுமாறிப் போயினர். இதனால் இந்திய அணி வெற்றி வாய்ப்பைத் தவறவிட்டது. இந்நிலையில் சூர்யகுமார் யாதவ் கடந்த இரண்டு ஒருநாள் போட்டிகள் போலவே, இந்த மேட்ச்சிலும் கோல்டன் டக் ஆனதைப் பலரும் விமர்சித்து வந்தனர்.

சூர்யகுமார் யாதவ்

இந்நிலையில் நேற்றைய ஆட்டம் முடிந்த பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரோஹித் சர்மா, இந்திய அணியின் தோல்வி குறித்தும் சூர்யகுமார் யாதவ் கோல்டன் டக் ஆனது குறித்தும் பேசியிருந்தார்.

இதுபற்றி பேசிய அவர், “சூர்யகுமார் யாதவ் இந்தத் தொடரில் மூன்று பந்துகளை மட்டுமே எதிர்கொண்டார். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் அவருக்கு மூன்று நல்ல பந்துகள் கிடைத்தன, அதைத் தவறவிட்டார். ஆனால், இதில் பெரிதாக கவனம் செலுத்த வேண்டுமா என்று எனக்குத் தெரியவில்லை. எப்படி இதைக் கையாள வேண்டும், எப்படி முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்று அவருக்கு நன்றாகத் தெரியும். அவர் நன்றாக ஸ்பின் விளையாடுவதை கடந்த இரண்டு வருடங்களாகப் பார்த்து வருகிறோம். அதனால்தான் கடைசி 15-20 ஓவர்களில் அவருக்கு வாய்ப்பு வழங்கினோம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவரால் மூன்று பந்துகளை மட்டுமே விளையாட முடிந்தது. இது யாருக்கும் நடக்கலாம். இதனால் அவரது திறமை குறைந்து போகப்போவதில்லை. அவர் இதை கடந்து வருவார்” என்றார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com