சமீப காலமாகவே ‘சூப்பர் ஃபுட்’ என்ற வார்த்தை பிரபலமாகி வருகிறது. பலரும் சூப்பர் ஃபுட்களை தேடி தேடி சாப்பிட்டு வருகின்றனர். ஆனால் உண்மையிலேயே சூப்பர் ஃபுட் என்பது நமது உடலுக்கு கூடுதல் பலன்களை அளிக்கிறதா அல்லது மிகைப்படுத்தி சொல்லப்படுகிறதா? ஒரு சாதாரண உணவை எந்த விஷயம் சூப்பர் ஃபுட்டாக மாற்றுகிறது, அதன் பலன்கள் என்ன மற்றும் நமது டயட்டில் சேர்க்க வேண்டிய சூப்பர் ஃபுட்களுக்கான ஒரு சில உதாரணங்கள் போன்றவற்றை இந்த பதிவில் பார்க்கலாம்.
சூப்பர் ஃபுட்கள் என்றால் என்ன?
சூப்பர் ஃபுட்கள் என்பது நமது உடலுக்கு தேவையான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பயோக்டிவ் சேர்மங்களை அதிக அளவில் கொண்டிருக்கும் உணவுகள் ஆகும். பயோஆக்டிவ் சேர்மங்களில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் ஃபைட்டோ கெமிக்கல்கள், ப்ரோ பயோடிகள், பிரீ பயோட்டிகள், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், பாலிபீனால்கள் கெராட்டினாய்டுகள் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகள் காணப்படுகிறது.
இந்த அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் பயோஆக்டிவ் சேர்மங்கள் ஆகியவை பிற உணவுகளில் இருந்து சூப்பர் ஃபுட்டை தனித்துவமாக வேறுபடுத்தி காட்டுகிறது. இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது முதல் ஆற்றல் அளவுகளை ஊக்குவிப்பது வரை போன்ற உடலின் இயற்கையான செயல்பாடுகள் பலவற்றிற்கு உதவுகிறது.
மேலும் இந்த சூப்பர் ஃபுட்கள் ஒரு சில நாள்பட்ட நோய்களை தடுப்பதற்கும், நமது வாழ்க்கை முறையை சிறப்பாக நடத்துவதற்கும் உதவி புரிகிறது. கமர்ஷியலாக சூப்பர் ஃபுட் என்ற வார்த்தை அதிகப்படியாக பயன்படுத்தப்பட்டு வந்தாலும், இது நமது உடலுக்கு எக்கச்சக்கமான பலன்களை அளிக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.

இந்த சூப்பர் ஃபுட்கள் புதிதாக முளைத்த காளான்கள் அல்ல, பல நூற்றாண்டுகளாகவே இந்த சூப்பர் ஃபுட் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே இருந்து வருகிறது. உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பாரம்பரிய கிரேக்க மற்றும் ரோமர்கள் இந்த சூப்பர் ஃபுட்களை சாப்பிட்டு வந்தனர். பாரம்பரிய சீன மருத்துவத்தில் ஜின்சங் என்ற மூலிகை அதன் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் காரணமாக ஒரு சூப்பர் ஃபுட்டாக கருதப்படுகிறது. அதேபோல ஆயுர்வேதமும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட பரிந்துரை செய்கிறது. மஞ்சள், இஞ்சி மற்றும் அஸ்வகந்தா போன்ற உணவுகள் பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவில் கிடைக்கும் சூப்பர் ஃபுட்கள்: தற்போது மக்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வருவதால் சூப்பர் ஃபுட்கள் பெருமளவில் பிரபலமாகிவிட்டது. பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் பாஸ்ஃபுட்கள் பாரம்பரிய உணவுகளை மாற்றி வரும் இந்த சமயத்தில் சூப்பர் ஃபுட்கள் பல நூற்றாண்டுகளாக ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை பராமரிக்க உதவுகிறது.
பெரும்பாலான இந்திய சமையல் உணவுகளில் பயன்படுத்தப்படும் மஞ்சள் அதில் இருக்கக்கூடிய வீக்க எதிர்ப்பு பண்பு காரணமாக ஒரு சூப்பர் ஃபுட்டாக கருதப்படுகிறது. மேலும் கொண்டைக்கடலை, முருங்கைக்கீரை, நெல்லிக்காய், பாதாம் மற்றும் முந்திரி போன்றவையும் பிரபலமான சூப்பர் ஃபுட்களுக்கு சில எடுத்துக்காட்டுகள்.
எனினும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கேல் அல்லது கோஜி பெர்ரிகள் போன்றவை நடுத்தர குடும்பத்தினருக்கு பெரும்பாலும் கிடைக்கப் பெறுவதில்லை. ஆயினும், உள்ளூரில் கிடைக்கக்கூடிய கருவேப்பிலை அல்லது முருங்கைக்காய் போன்றவை அவற்றிற்கு சமமான ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளன.
இந்தியாவில் அதிக அளவில் காணப்படும் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நீரிழிவு, உடல் பருமன் ஆகிய வாழ்க்கை முறை நோய்களை சமாளிக்க சூப்பர் ஃபுட்கள் பெரிதும் உதவுகிறது. தங்களது அன்றாட உணவில் போதுமான ஊட்டச்சத்து பெறாத நபர்களுக்கு இந்த சூப்பர் ஃபுட்கள் ஒரு சிறந்த சப்ளிமென்ட் ஆகவும் செயல்படுகிறது.
உணவில் சூப்பர் ஃபுட்களை இணைப்பது எப்படி?
சூப்பர் ஃபுட்களை நமது உணவில் சேர்ப்பதன் மூலமாக நமது உடலுக்கு கிடைக்க கூடிய ஊட்டச்சத்துக்களை அதிகரித்து நமது ஒட்டு மொத்த ஆரோக்கியத்தை நாம் கவனித்துக் கொள்ளலாம். இத்தகைய போஷாக்கு நிறைந்த உணவுகளை நமது அன்றாட உணவில் சேர்ப்பதற்கான ஒரு சில குறிப்புகளை இப்பொழுது பார்க்கலாம்:
- சிறிய அளவில் துவங்கவும்: உங்கள் வழக்கமான உணவில் ஒன்று அல்லது இரண்டு சூப்பர் ஃபுட்களை இணைப்பதன் மூலம் நீங்கள் ஆரம்பிக்கலாம். உதாரணமாக, நீங்கள் ஸ்மூத்தி சாப்பிடும் பொழுது அதில் சியா விதைகளை சேர்க்கலாம் அல்லது உங்கள் காலை உணவோடு பெர்ரி சேர்த்து சாப்பிடலாம்.
- பலவிதமான உணவுகளை முயற்சி செய்யவும்: சாலட் முதல் சூப் வரை மற்றும் மெயின் கோர்ஸ் டிஷ்கள் போன்ற எல்லா விதமான உணவுகளிலும் சூப்பர் ஃபுட்களை நீங்கள் சேர்க்கலாம். கினோவா, கேல், மஞ்சள் அல்லது இஞ்சி வைத்து பலவிதமான புது ரெசிபிகளை நீங்கள் முயற்சி செய்து சாப்பிடலாம்.
- உள்ளூரில் கிடைக்கக்கூடிய பொருட்களை பயன்படுத்தவும்: கோஜி பெர்ரி போன்ற சர்வதேச சூப்பர் ஃபுட்களை அனைவராலும் வாங்க முடியாது. அவற்றிற்கு சமமான ஊட்டச்சத்துக்கள் கொண்ட முருங்கை இலை, கருவேப்பிலை, துளசி போன்றவற்றை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
- வித்தியாசமாக யோசிக்கவும்: சூப்பர் ஃபுட்கள் ஆரோக்கியமான உணவுகள் என்றாலும் அது போரடிக்க கூடிய உணவுகள் அல்ல. அதனை பிற ருசியான உணவுகளோடு சேர்த்து சமைத்து சாப்பிடுவதன் மூலமாக நீங்கள் அந்த உணவுகளை சுவாரஸ்யமானதாக மாற்றலாம்.
- முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ளுங்கள்: ஒரு வாரத்திற்கு நீங்கள் என்ன சமைக்க போகிறீர்கள் என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு வைப்பது அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களையும் பெறுவதற்கு உங்களுக்கு உதவும். மதியத்திற்கு எந்தெந்த உணவுகளை செய்யலாம் என்றும், என்ன மாதிரியான ஸ்நாக்ஸ் வகைகளை தயாரிக்கலாம் என்பதையும் நீங்கள் திட்டமிட்டுக் கொள்ளுங்கள். ஸ்நாக்ஸ் வகைகள் செய்யும் பொழுது அவற்றில் நட்ஸ் மற்றும் ட்ரை ஃப்ரூட்ஸ் சேர்த்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்வதன் மூலமாக நமது அன்றாட உணவை ஆரோக்கியமானதாக நாம் மாற்ற முடியும்.
Also Read | கீல்வாதம் இருக்கவங்க என்ன சாப்பிடலாம்..? என்ன சாப்பிடக் கூடாது..? முழுமையான தகவல்கள்..!
எனினும் சூப்பர் ஃபுட்கள் சாப்பிடுவது மட்டுமே நம் உடலுக்கு போதாது. அனைத்து ஊட்டச்சத்துகளும் நிறைந்த சமச்சீரான உணவுகளோடு சூப்பர் ஃபுட்களை சாப்பிட்டால் மட்டுமே நமக்கு சரியான பலன் கிடைக்கும். ஆகவே சூப்பர் ஃபுட் சாப்பிடுவதால் உங்களுக்கு அனைத்து ஊட்டச்சத்துகளும் கிடைத்துவிடும் என்ற தவறான எண்ணத்தை கொண்டிருக்க வேண்டாம். எல்லா விதமான காய்கறிகள், பழங்கள் மற்றும் முழு தானியங்கள் போன்றவற்றை உணவில் சேர்த்து சாப்பிடுவது நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை சிறப்பாக கவனித்துக் கொள்ள உதவும். அதோட சூப்பர் ஃபுட்களை சாப்பிடுவதால் பாரம்பரியமாக நாம் சமைத்து வரும் உணவுகளை சாப்பிட வேண்டாம் என்பது அர்த்தம் அல்ல. பாரம்பரிய உணவுகளையும் நமது அன்றாட உணவில் சேர்த்து சாப்பிடுவது அவசியம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.