நேற்று பெங்களூருவில் நடைபெற்ற ஐபிஎல் 2023 தொடரின் 5-வது போட்டியில் ரோஹித் தலைமையிலான மும்பை இந்தியன்ஸை, டுபிளெசிஸ் தலைமையிலான ஆர்சிபி அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஊதித் தள்ளியது. மும்பை 171 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸை முடிக்க, தொடர்ந்து ஆடிய ஆர்சிபி அணியில் விரட்டல் மன்னன் விராட் கோலி 49 பந்துகளில், 6 பவுண்டரிகள், 5 சிக்சர்களுடன் 82 ரன்களுக்கு நாட் அவுட் பேட்ஸ்மேனாக 17வது ஓவரிலேயே இலக்கை எட்டி மும்பையை நொறுக்கினர்.
கேப்டன் ஃபாப் டுபிளெசிஸ் 43 பந்துகளில், 5 பவுண்டரி, 6 சிக்சர்களுடன், 73 ரன்களை விளாச, இருவரும் சேர்ந்து 15வது ஓவரில் 148 ரன்களைச் சேர்க்க ஆட்டம் அங்கேயே முடிந்து விட்டது. மும்பை அணியில் பியூஷ் சாவ்லா எனும் லெக் ஸ்பின்னர்தான் சிக்கனம் காட்டி 4 ஓவர்களில் 26 ரன்கள் என்று கட்டுக்கோப்புடன் வீசினார். மற்றெல்லோரும் செம சாத்து வாங்கினர்.
மும்பை அணி பேட் செய்த போது முகமது சிராஜ் அட்டகாசமாக வீசினார். அவரை ஆட முடியவில்லை. 3 ஓவர்களில் 5 ரன்களை மட்டுமே கொடுத்தார். ஹிட்மேன் ரோகித் என்கிறோம். ஆனால், அவரோ 10 பந்துகளில் ஒரே ஒரு ரன்னை மட்டுமே எடுத்து ஆகாஷ் தீப் பந்தை எட்ஜ் செய்தார். முன்னதாக இந்த 1 ரன்னை எடுப்பதற்குள் ஒரு கேட்சையும் கொடுத்தார். ஆனால் அது நழுவ விடப்பட்டது. இஷான் கிஷனை பிரஷர் போட்டு காலி செய்தார் சிராஜ். இவர் 4 ஓவர் 21 ரன்களை மட்டுமே கொடுத்து 1 விக்கெட்டைக் கைப்பற்றினார். மும்பை இந்தியன்ஸ் அணியின் சூப்பர் ஸ்டார் சூர்யகுமார் யாதவின் துயரம் தொடர்கின்றது. பிரேஸ்வெல் பந்தை வாரிக்கொண்டு அடிக்கப்போய் பாயிண்டில் ஷாபாஸ் கையில் கேட்ச் ஆனது. இன்னிங்ஸும் சொதப்பல் ரகம். 16 பந்துகளில் 15 ரன்களைத்தான் எடுத்தார்.
ஆனால் மும்பையில் அதிகம் அறியப்படாத திலக் வர்மா உண்மையில் ஸ்டன்னிங் ஆக பேட் செய்தார். 19 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை அணி இழந்திருந்த நிலையில் இறங்கினார் திலக் வர்மா. 2வது பந்தே சிக்சர் விளாசினார். மேக்ஸ்வெல் ஓவரில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி. பிறகு ஆகாஷ் தீப்பை ஒரு ஸ்கூப் பவுண்டரி என்று விளாச, இன்னொரு முனையில் அறிமுக வீரர் நெஹால் வதேரா, கரண் சர்மாவை 2 சிக்சர்கள் விட்டார். இதில் 2வது சிக்ஸ் லாங் ஆன் திசையில் மேற்கூரையில் போய் விழுந்தது. பெரிய வீரர் டிம் டேவிட் பவுல்டு ஆனார். வர்மா விக்கெட் கொடுப்பவராகத் தெரியவில்லை 32 பந்துகளில் அரைசதம் கண்ட அவர் 46 பந்துகளில், 9 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 84 ரன்களை விளாச மும்பை இந்தியன்ஸ் டீசண்ட் ஸ்கோரான 171 ரன்களை எட்டியது.
கோலியும், டுபிளெசிஸும் இறங்கினர். மும்பை பந்து வீச்சில் ஒன்றுமே இல்லை. ஒரு தாக்கமும் இல்லை. 14.5 ஓவர்களில் 148 ரன்களை குவித்தனர். இருவரும் 11 பவுண்டரிகள், 11 சிக்சர்களைப் பறக்கவிட்டனர். டுபிளெசிஸ் ஆட்டமிழந்தவுடன் கோலி புகுந்தார். முன்னதாக, கோலி கொடுத்த ரிடர்ன் கேட்சை ஜோப்ரா ஆர்ச்சர் தவற விட்டார். ஜோப்ரா ஆர்ச்சர் 4 ஓவர் 33 ரன்கள் கொடுத்து விக்கெட் எடுக்க முடியாமல் முடிந்தார். 2 பவுண்டரி 2 சிக்சர்களையும் கொடுத்தார். ஆட்ட நாயகன் விருது டுபிளெசிஸுக்கு கொடுத்தாலும் கோலியின் ஆட்டத்தில் மெருகு கூடியிருந்தது என்னவோ உண்மை.
ஆட்டம் முடிந்தவுடன் விராட் கோலி கூறியதாவது. “நான் இதை ஒரு கணத்திற்காகவாவது குறிப்பிட விரும்புகின்றேன். மும்பை 5 முறை ஐபிஎல் பட்டம் வென்றுள்ளது, சிஎஸ்கே 4 முறை கோப்பையை வென்றுள்ளது. இந்த இரண்டு அணிகளுக்கு அடுத்து நாங்கள்தான். அதாவது ஆர்சிபிதான் பிளே ஆஃப் சுற்றுக்கு 8 முறை தகுதி பெற்றுள்ளது. எனவே இம்முறையும் ஒரு சமயத்தில் ஒரு போட்டி என்பதை கணக்கில் எடுத்துக் கொண்டு திட்டங்களைச் செயல்படுத்துவோம். இந்தப் போட்டியில் செய்ததைப் போல.
இது மிகப்பெரிய வெற்றி. நிறைய பந்துகள் மீதம் வைக்க வேண்டும் அப்போதுதான் நெட் ரன் ரேட் விவகாரத்தின் போது சவுகரியமாக இருக்கும். நானும் டுபிளெஸியும் ஆரம்பித்த விதம் மும்பை இந்தியன்ஸின் உத்வேகத்தை காலி செய்து விட்டது. பவுலர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தோம்” என அவர் கூறினார்.