மும்பையில், அழகு சாதன க்ரீமால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மும்பையைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், தனது சரும நிறத்தை அதிகரிக்க விரும்பி தனக்குத் தெரிந்த அழகு நிலையத்தில் முகத்துக்குப் பூசும் க்ரீம் ஒன்றை வாங்கியுள்ளார். அந்த க்ரீம் தடவிய சில நாள்களிலேயே முகம் நன்றாக பொலிவடைவதையும், சரும நிறம் கூடியதையும் உணர்ந்துள்ளார். இதனால் அதே க்ரீமை வாங்கி, அந்தப் பெண்ணின் சகோதரி மற்றும் தாயார் இருவரும் பயன்படுத்தி உள்ளனர். அவர்களுக்கும் சரும நிறம் சிவப்பாக மாறியுள்ளது.
அதேநேரம், இந்த அழகு சாதன க்ரீமை பயன்படுத்தத் தொடங்கிய நான்கே மாதங்களில் மூவருக்கும் அடுத்தடுத்து சிறுநீரகப் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு, `Glomerulonephritis’ எனும் சிறுநீரகம் தொடர்பான பிரச்னை இருப்பது தெரிய வந்தது. இந்தப் பிரச்னை இருப்பவர்களுக்கு சிறுநீரகத்தின் சின்னஞ்சிறிய வடிகால்கள் பாதிப்படையும். இதற்கான சிகிச்சை எடுக்கத் தொடங்கிய போது மூவருக்கும் ஒன்றாக இந்த பாதிப்பு ஏற்பட்டதற்கு என்ன காரணம் என ஆராயத் தொடங்கினர்.