முதல் டி20: சஞ்சு சாம்சன் அபாரம்; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்திய அணி! | India victory by 61 runs vs South Africa

Share

டர்பன்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 61 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்றது.

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய கிரிக்கெட் அணி 4 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதன் முதல் ஆட்டம் வெள்ளிக்கிழமை (நவ.08) டர்பன் நகரில் உள்ள கிங்ஸ்மீட் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 8.30 மணி அளவில் தொடங்கியது.

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பவுலிங் தேர்வு செய்ததையடுத்து, இந்திய அணி பேட்டிங் இறங்கயது. தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா – சஞ்சு சாம்சன் களம் புகுந்தனர். இதில் 4-வது ஓவரில் அபிஷேக் சர்மா 7 ரன்களுக்கு அவுட் ஆனார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 21 ரன்கள் வரை தாக்குப்பிடித்தார். பாட்ரிக் வீசிய 9வது ஓவரில் விக்கெட்டாகி வெளியேறினார்.

ஒற்றை ஆளாக நின்று சிக்சர்களையும், பவுண்டரிகளையும் விளாசி ரன்களை குவித்துக் கொண்டிருந்தார் சஞ்சு சாம்சன். 27 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், 47 பந்துகளில் சதமடித்து மிரட்டினார். மறுபுறம் திலக் வர்மா 33 ரன்களில் கேட்ச் கொடுத்துவிட்டு வெளியேறினார். சிறப்பாக விளையாடிய சஞ்சு சாம்சனை 50 பந்துகளில் 107 ரன்களை குவித்து 16-வது ஓவரில் வெளியேறினார்.

இதனையடுத்து ஹர்திக் பாண்டியா 2 ரன்கள், ரிங்கு சிங் 11, அக்சர் படேல் 7, அர்ஷ்தீப் சிங் 5, ரவி பிஷ்னோய் 1 என இந்திய அணி 20 ஓவர் முடிவில் 202 ரன்களை எடுத்திருந்தது.

அடுத்து 203 என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்களாக எய்டன் மார்க்ரம், ரையான் ரிக்கல்டன் இருவரும் ஆடினர். கேப்டன் மார்க்ரம் முதல் ஓவரிலேயே இரண்டு பவுண்டரிகளை அடித்து ஆட்டமிழந்தார். ரிக்கல்டன் 5வது ஓவர் தாக்குப் பிடித்து 21 ரன்கள் எடுத்தார்.

தொடக்கம் முதலே இந்திய அணியின் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் தென் ஆப்பிரிக்க அணி திணறியது. அதிகபட்சமாக ஹெய்ன்ரிச் கிளாசன் 25 ரன்களும், மார்கோ ஜென்சன் 23 ரன்கள் எடுத்தனர். வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய் இருவரும் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அடுத்தடுத்து விக்கெட்களை இழந்த தென் ஆப்பிரிக்க அணி 17.5வது ஓவரில் அனைத்து விக்கெட்களை இழந்து 141 ரன்களில் இந்தியாவிடம் தோல்வியடைந்தது.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com