இந்திய பங்குச் சந்தையில் நீண்ட காலத்தில் (10,15,20 ஆண்டுகள்) நெகடிவ் வருமானத்துக்கு வாய்ப்பு இல்லை. எவ்வளவுக்கு எவ்வளவு முதலீட்டு காலம் அதிகரிக்கிறதோ, அந்த அளவுக்கு ரிஸ்க் குறைந்து, வருமானம் அதிகரிக்கிறது. இந்திய பங்குச் சந்தையின் ஓராண்டு வருமானத்தை தனித் தனியாக எடுத்துப் பார்த்தால் அது அதிக ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். ஆனால், எந்த ஒரு 10, 15 ஆண்டு காலத்தை எடுத்துக் கொண்டாலும் இந்திய பங்குச் சந்தை கொடுத்திருக்கும் வருமானம் 11 முதல் 19% க்குள் இருக்கும். அதாவது சராசரியாக 15 சதவிகிதமாக இருக்கும். அதுவும் இந்த வருமானத்துக்கு முதலீடு செய்து ஓராண்டுக்கு பிறகு நீண்ட கால ஆதாயத்துக்கு நிதி ஆண்டில் ரூ.1 லட்சம் வரைக்கும் வருமான வரி கிடையாது. அதற்கு மேற்பட்ட லாபத்துக்கு 10% வரிக் கட்டினால் போதும்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, வரும் காலத்தில் உறுதியானதாக இருப்பதால், பங்குச் சந்தையின் வளர்ச்சியும் உறுதியானதாக இருக்கும். சுருங்கச் சொன்னால், பொருளாதாரம் வளர்த்தால், பங்குச் சந்தையும் வளரும் எனலாம்.

சந்தையின் ஏற்ற இறக்கத்தை தாண்டி பங்குச் சந்தை, ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டில் அதிக லாபம் பார்க்க ஒரே வழி சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (எஸ்ஐபி) தான். அப்படி செய்யும் போது முதலீட்டை வயது மற்றும் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கு ஏற்ப பல்வேறு சொத்துகளில் பிரித்து போடும் அசெட் அலோக்கேசனை பின்பற்ற வேண்டும். பங்குச் சந்தை மற்றும் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் களில் குறைந்தது ஐந்தாண்டுகளுக்கு தொடரக் கூடியவர்கள் மட்டும் முதலீட்டை மேற்கொள்ள வேண்டும். முதலீட்டின் மதிப்பு 10-20% குறைந்தாலும் கவலைப்படக் கூடாது. 5,10,15 ஆண்டுகளில் தொடர்ந்து அதிக வருமானம் மற்றும் டிவிடெண்ட் வழங்கும் ஃபண்ட்களில் முதலீடு செய்வது லாபகரமாக இருக்கும்.
எண்டோமென்ட் ஆயுள் காப்பீடு மற்றும் பங்குச் சந்தை சார்ந்த காப்பீட்டுத் திட்டங்கள் இவை காப்பீடு முதலீடுகளாக உள்ளன. இவற்றில் காப்பீடு அளிப்பதற்காக பிரீமியத்திலிருந்து பணம் எடுக்கப்படுவதால் எண்டோமென்ட் பாலிசிகளில் நீண்ட காலத்தில் ஆண்டுக்கு சுமார் 5-6 சதவிகித வரி இல்லாத வருமானம் கிடைக்கும். இதுவே யூலிப் பாலிசி என்கிற போது அதன் வருமானம் பங்குச் சந்தையின் செயல்பாட்டை சார்ந்துள்ளது. சுமார் 7-8 ஆண்டுகளுக்கு தொடர்ந்து பிரீமியம் கட்டி வரும் நிலையில் யூலிப் பாலிசி லாபகரமாக இருக்கும்.
தங்கத்தை பொறுத்தவரையில்அதன் மதிப்பு ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டது அந்த வகையில் அதன் மூலம் கிடைக்கும் வருமானமும் ஏற்ற இரக்கத்திற்கு உட்பட்டது. நீண்ட காலத்தில் பணவீக்கத்தை விட ஒரு சதவீதம் அதிக வருமானம் எதிர்பார்க்கலாம்.
எந்தெந்த முதலீடுகள் மூலம் தோராயமாக எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதை சுட்டிக் காட்டி உள்ளோம். இவற்றை பயன்படுத்தி உங்கள் நிதி இலக்குகள் மற்றும் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கு ஏற்ப முதலீட்டுத் திட்டங்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.