முதலிரவன்று, சில பெண்களுக்கு ஹைமன் எனப்படும் ஜவ்வு கட் ஆகி ரத்தக்கசிவு ஏற்படலாம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனால், சில ஆண்களுக்கும் இப்படி நிகழும் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று.
அது தொடர்பான கேஸ் ஹிஸ்டரி ஒன்றைதான் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ் இப்போது பகிர்ந்து கொள்ளவிருக்கிறார்.

“ஆணுறுப்பின் கீழ்ப்பகுதியில் தோலும் தசையும் இணைந்த பகுதி ஒன்று இருக்கும். இந்தப் பகுதியில் தோல் மிகவும் லேசாக ஒட்டிக்கொண்டிருக்கும். இந்தப் பகுதியை ஃப்ரூன்லம் (frenulum) என்போம். முதலிரவில் முதல்முறையாக உறவுக்கு முயலும்போது, முன்தோல் பின்னுக்குத் தள்ளப்படும். அப்போது ஃப்ரூன்லம் வேகமாக இழுபட்டு கிழிந்து விடலாம்.
திருமணத்துக்கு முன்பு வேகமாக சுயஇன்பம் செய்யும்போதுகூட சிலருக்கு இப்படி நிகழலாம். ஃப்ரூன்லம் கிழியும்போது அங்கிருக்கும் ரத்தக்குழாய் கட் ஆகி ரத்தம் வெளியேற ஆரம்பிக்கும். சிலருக்கு ரத்தப்போக்கு லேசாக இருக்கும். இவர்களுக்கு சிறிது நேரத்தில் ரத்தக்கசிவு நின்றுவிடும். சிலருக்கோ ரத்தம் பீய்ச்சியடிக்க ஆரம்பிக்கும்.100 மி.லி, 200 மி.லி ரத்தம்கூட வெளியேறலாம். முதலிரவுக்காக கட்டிக்கொண்டு வந்த பட்டு வேட்டியெல்லாம் ரத்தத்தால் நனைந்துவிடும்.
ரத்தக்கசிவு நின்றுவிட்டவர்கள், மறுநாள் காலையில் என்னை பார்க்க வருவார்கள். ரத்தப்போக்கு அதிகமாக இருப்பவர்கள், ரத்தக்கறை படிந்த வேட்டியுடன் முதலிரவு அறையில் இருந்து அப்படியே மருத்துவமனைக்கு ஓடி வருவார்கள்.
உடனடியாக தையல் போட்டு ரத்தப்பெருக்கை நிறுத்த வேண்டியிருக்கும். சில ஆண்களுக்கு ஆணுறுப்பின் முன்தோல் மட்டும் கிழிந்து, சிகிச்சை எடுக்க வருவார்கள். இதுவும் நார்மல் தான். இந்தப் பிரச்னைகள் நூறு தம்பதியரில் 2 அல்லது 3 தம்பதியருக்கு ஏற்படலாம்.
கட் ஆன ஃப்ரூன்லம் பத்து, பதினைந்து நாள்களில் ஆறிவிடும். ஆனால், ஆறிய பிறகும், அந்தப் பகுதி பலவீனமாகவே இருக்கும். உறவுக்கு முயன்றால் மறுபடியும் கட் ஆகலாம். சிலருக்கு திரும்பத் திரும்ப கட் ஆகும். ஒருகட்டத்தில், இவர்கள் தாம்பத்திய உறவு கொள்வதற்கே பயப்பட ஆரம்பிப்பார்கள்.
சம்பந்தப்பட்ட ஆணுக்கு சில பயிற்சிகள் மூலம் பயத்தை தணிப்போம். மனைவிக்கு டயலேட்டர் உதவியுடன் பெண்ணுறுப்பின் உறவுப்பாதையை சற்று பெரிதுபடுத்துவோம். ஒருவேளை இப்படியொரு சம்பவம் உங்கள் முதலிரவில் நடந்தால், பதறாமல் மருத்துவரை சந்தியுங்கள். இதுவும் இயல்பான விஷயம்தான்” என்கிறார் டாக்டர் காமராஜ்.