முதன்மை விளையாட்டு மையங்களில் சேர ஏப்.30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப, அறிவியல் பூர்வமான விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய முதன்மை நிலை விளையாட்டு மையங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் 6 இடங்களில் செயல்பட்டு வருகின்றன. இங்கு சேர விரும்பும் 13 வயதுக்குட்பட்ட மாணவர்கள், www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் ஏப்.30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தகுதியை பொருத்தவரை தனி நபர் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகளில் விண்ணப்பிப்பவர்கள் மாநில (ம) மாவட்ட அளவில் குடியரசு, பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகள், அங்கீகரிக்கப்பட்ட மாநில விளையாட்டுக் சங்கங்கள் நடத்தும் போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அல்லது தமிழக அணியில் தேர்வு செய்யப்பட்டு தேசிய அளவில் தேசிய விளையாட்டு சம்மேளனங்கள், இந்திய பள்ளி விளையாட்டுக் கூட்டமைப்பு, இந்திய விளையாட்டு அமைச்சகம் நடத்தும் போட்டிகளில் கலந்து கொண்டவர்களும், பன்னாட்டு அளவில் அங்கீகாரம் பெற்ற போட்டிகளில் கலந்து கொண்டு மற்றும் பதங்கங்கள் பெற்றவர்களும் மாநில மற்றும் மாவட்ட அளவில் முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் பதக்கம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு விண்ணப்பித்தவர்களுக்கான தேர்வுப் போட்டிகள் வரும் மே 2-ம் தேதி காலை 7 மணியளவில் சென்னை, ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம் (தடகளம், குத்துச்சண்டை, பளுதூக்குதல்), நுங்கம்பாக்கம் விளையாட்டரங்கம் (டென்னிஸ்), வேளச்சேரி ஏஜிபி நீச்சல்குள வளாகம் (ஜிம்னாஸ்டிக்ஸ், நீச்சல்), செங்கல்பட்டு டிஎன்பிஎஸ்இயு (வில்வித்தை, சைக்கிளிங், இறகுபந்து) ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. மேலும் விவரங்களுக்கு 9514000777 என்ற எண்ணை அணுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.