நாற்பது வருஷங்களுக்குப் பின்னால் அவளை பார்க்கில் சந்திப்பேன் என்று கனவில் கூட நினைத்ததில்லை. கலிபோர்னியாவில் என் பையன் வில்லாவுக்கு வந்து சில மாதங்கள் போனதே தெரியவில்லை. மாலை வாக்கிங் போவதற்காக அந்த பார்க்குக்கு சென்றிருந்தேன்.
காலேஜ் நாட்களில் அவள் தான் பியூட்டி க்வீன். அவள் பார்வைக்காக மாணவர் கூட்டமே தவமிருக்கும். அவள் இதயத்தில் எனக்கு மட்டும் தான் இடம் இருந்தது அவள் அவ்வப்போது வீசும் காதல் பார்வையில் அது புலப்படும். பல இடங்களில் சந்திப்பு. ஆனால் என் ஏழ்மை நிலையால் பிரிந்தோம்.
இன்று மீண்டும் ஒரு அழகான சந்திப்பு. உயரமான மரங்கள், பூச்செடிகளில் பல வண்ணங்களில் பூக்கள் – மிக ரம்யமான சூழல். அந்த நாட்களின் காதலின் பக்கங்களை புரட்ட இதை விட சிறந்த இடம் கிடைக்குமா?
இதோ என் அருகில் வருகிறாள். சற்றே நரைத்த, அதே நெளி நெளி கூந்தல், ஒளி படைத்த கண்கள், கமலா ஆரஞ்சு சுளை உதடுகள். காணாமல் போன வசந்தம் இதோ மீள்கிறதே !
தேன்குரலில் ..
“ கோபி farewell தினம் அன்று….”
‘ஆஹா மறக்கமுடியாத சில நிகழ்வுகள்..’
மனம் சிறகடித்தது.
“என்னிடம் வாங்கிய நூறு ரூபாயை இப்போதாவது திருப்பித் தருவாயா?”
அவள் கேட்டாள்.
பர்ஸில் இந்திய கரன்சியும் இருந்தது. பெருமூச்சுடன் திருப்பி தந்தேன். உணர்வுகள் காற்றுப்போன பலூன்.
நன்றி கூட சொல்லாமல் சென்று விட்டாள் – அந்த தலை நரைத்த, முட்டைக் கண் , மயில் குரல் கிழவி.
வாழ்க்கையே வெறுத்தது.
நற நற – இது பல் கடிக்கும் சத்தம்
-எஸ். கோபாலகிருஷ்ணன்