சென்னை: தமிழகத்தில் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி வருகிற 16ம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக ஆட்சியில் மின் கட்டணம், பால் விலை, பேருந்து கட்டணம், சொத்து வரி உள்ளிட்ட எதையுமே உயர்த்தாமல், மக்கள் நலனை மட்டுமே பிரதானமாக கொண்டு மடிக்கணினி, மிதிவண்டி, தாலிக்கு தங்கம், திருமண நிதியுதவி தொகை, மகப்பேறு நிதியுதவி தொகை, பள்ளி செல்லும் மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்தையும் வழங்கியது. திமுக அரசு, அதிமுக அரசில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை முடக்கியதோடு, சொத்து வரியையும், மின் கட்டணத்தையும் உயர்த்தி, இன்றைக்கு மேலும் மக்களை துன்பக் கடலில் ஆழ்த்தி, என்றைக்குமே விடியாது என்ற நிலைக்கு இந்த அரசு சென்று கொண்டிருப்பதை உணர்த்துகிறது.
‘மின் கட்டணத்தை உயர்த்திய திமுக அரசை கண்டித்தும், அறிவிக்கப்பட்டுள்ள மின் கட்டண உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தியும்’, அதிமுக சார்பில், அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டங்களிலும், வருகிற 16ம் தேதி (வெள்ளி) காலை 10.30 மணியளவில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள் செய்ய வேண்டும். மாவட்ட தலைநகரங்களில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டங்களில், சம்பந்தப்பட்ட மாவட்டங்களை சேர்ந்த தலைமை கழக செயலாளர்களும், 16ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள, அண்ணா 114வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்கள் 22ம் தேதி நடைபெறும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.