நமது அன்றாட வாழ்க்கையில் முக்கிய இடத்தைப் பிடித்திருப்பவை டீ மற்றும் காபி. காலையில் எழுந்ததும் அந்த நாளை டீ, காபி அருந்திவிட்டுத்தான் தொடங்குகிறோம் பலரும். அதுவும் சுடச்சுட டீ, காபி இல்லையென்றால், குடித்த மாதிரியே இருக்காது என்று கருதுபவர்கள் நம்மில் பலர் உண்டு. ஆனால், தற்போது வெளிவந்துள்ள ஆய்வு முடிவு, சூடாக டீ, காபி, வெந்நீர் போன்றவற்றை அருந்துபவர்களுக்கு உணவுக்குழாயில் புற்றுநோய் வர வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கிறது.
இதற்கு முன்பு, கடந்த 2016-ம் ஆண்டில் உலக சுகாதார நிறுவனம், சூடான திரவங்கள் புற்றுநோயை உண்டாக்கும் என்று ஒரு எச்சரிக்கையை வெளியிட்டது. அந்த எச்சரிக்கை, ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையைக் குறிப்பிட்டத்து. குறிப்பாக 60 டிகிரி C அல்லது 140 டிகிரி ஃபாரன்ஹீட்டிற்கு மேல் வெப்பமாக எந்த பானத்தையும் அருந்தக்கூடாது என்று குறிப்பிட்டிருந்தது.
அந்த ஆய்வு முடிவுகள் ஒருபக்கம் இருக்க, சில ஆராய்ச்சியாளர்கள், ’சூடான பானங்களை அருந்துவதனால் மட்டுமே உணவுக்குழாயில் புற்றுநோய் வராது’ என்று கூறுகின்றனர். புகைப்பிடித்தல், அளவுக்கதிகமாக மது அருந்துதல், புகையிலை மெல்லுதல், ஆரோக்கியமற்ற உணவுமுறை, காற்று மாசு ஆகியவையும் இதற்குக் காரணம் என்கின்றனர்.