`மாஸ்க் அணிவதால் எந்தப் பயனுமே இல்லையா… உண்மை என்ன?' – மருத்துவரின் விரிவான விளக்கம்

Share

கொரோனா பரவலுக்குப் பிறகு, உலக முழுவதும் முகக்கவசத்தின் பயன்பாடு முக்கியத்துவம் பெற்றது. குறிப்பாக, கொரோனா தாக்கம் உச்சத்தில் இருந்தபோது, வெகுஜன மக்கள் முகக்கவசம் பயன்படுத்தினர். இதனால், நோய்ப் பரவல் மற்றும் நோய் பாதிப்பின் வீரியத்தைக் கட்டுப்படுத்த முடிந்ததாகச் சொல்லப்பட்டது.

இந்த நிலையில், உலகெங்கிலும் உள்ள மதிப்புமிக்க சில பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 12 ஆராய்ச்சியாளர்கள், முகக்கவசம் குறித்த ஆய்வினை மேற்கொண்டனர். அந்த ஆய்வு முடிவில், “கோவிட் 19 தொற்றுப் பரவலைத் தடுப்பதில் முகக்கவசம் பெரிதாகப் பயன்தரவில்லை” என்று கூறப்பட்டுள்ளது.

முகக்கவசம்

முகக்கவசம் அணிந்தவர்கள் மற்றும் அணியாதவர்களிடம் செய்யப்பட்ட சோதனைகளின் அடிப்படையில், இந்த ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், “முகக்கவசம் அணியாதவர்களுக்குக் காய்ச்சல், கோவிட் தொற்று போன்ற பாதிப்புகள் ஏற்படுவதற்கும், முகக்கவசம் அணியாதவர்களும் அதே பாதிப்புகள் ஏற்படுவதற்கும் பெரிதாக வேறுபாடுகள் இல்லை” எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு முடிவு மற்றும் முகக்கவசத்தின் பயன்பாடு குறித்து, சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியின் மூத்தப் பேராசிரியரும், மருத்துவத்துறையின் துறைத்தலைவருமான டாக்டர் பி.பரந்தாமனிடம் பேசினோம்.

“இந்த ஆய்வு முடிவுகளில், சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் முகக்கவசத்தை எந்த இடங்களிலெல்லாம் பயன்படுத்தினார்கள் எனக் கூறப்படவில்லை. அலுவலகம், பொது இடங்கள் மற்றும் வீட்டில் இருக்கும்போது என தாங்கள் இருந்த எல்லா இடங்களிலும் அவர்கள் முகக்கவசம் அணிந்திருந்தால், நிச்சயம் அவர்களுக்கு கோவிட் உள்ளிட்ட பிற பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருந்திருக்கும்.

மாறாக, அவர்கள் சில இடங்களில் மட்டுமே முகக்கவசம் பயன்படுத்தியிருக்கும் பட்சத்தில், முகக்கவசம் அணியாமல் இருந்த இடத்தில் அவர்களுக்குத் தொற்றுப் பரவல் ஏற்பட்டிருப்பதற்கும் வாய்ப்புகள் உண்டு. பெரும்பாலானோர் வீட்டில் இருக்கும்போது முகக்கவசம் அணிவதில்லை. குடும்பத்தில் ஒருவர் மூலமாக இன்னொருவருக்குத் தொற்று பாதிப்பு எளிதாகப் பரவலாம். அந்த விதத்திலும் இந்தச் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட முகக்கவசம் அணிந்த நபர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம்.

N95 மாஸ்க்

அடுத்து, சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் எல்லா நேரமும் எந்த வகையான முகக்கவசம் பயன்படுத்தினர் என்பதும் கவனிக்கப்பட வேண்டும். கொரோனா பரவல் அதிகரித்தபோது ‘N95’ வகை முகக்கவசம் அணிவது அதிக பலனைத் தரும் எனக் கூறப்பட்டது. ஏனெனில், நம் முகத்தில் 95 சதவிகிதம் அளவுக்கு இந்த வகை முகக்கவசம் பாதுகாப்பு வழங்க வாய்ப்புள்ளது என்பதால் அதற்கு அவ்வாறு பெயர்க்காரணம் வந்தது. ஆனால், சாதாரண சர்ஜிக்கல் வகை முகக்கவசம் அணியும்போது, நம் முகத்துக்கும் அந்த முகக்கவசத்துக்கும் இடையே காற்றுப் பரவலுக்கான வாய்ப்பு சற்று அதிகமாக இருப்பதால், ‘N95’ வகை முகக்கவசத்தைவிடவும் சற்று குறைவான அளவிலான பாதுகாப்புதான் கிடைக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பது உள்ளிட்ட பல காரணங்களால், முகக்கவசம் அணியாதவர்களுக்கு அதிக அளவில் கோவிட் அல்லது காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறது என வைத்துக்கொள்வோம். இதுவே, அவர்கள் முகக்கவசம் அணிந்திருந்தால், வைரஸ் தொற்றானது முகக்கவசத்தைத் தாண்டிதான் உடலுக்குள் நுழையும். இந்த இடத்தில் முகக்கவசமானது பாதிப்பின் வீரியத்தையும், உடலுக்குள் நுழையும் வைரஸின் எண்ணிக்கையும் குறைப்பதில் வடிகாலாக வேலை செய்யும்.

முகக்கவசம் அணிவதால் நூறு சதவிகிதம் வைரஸ் பாதிப்பே வராது எனச் சொல்ல முடியாதுதான். ஆனால், நிச்சயமாக பாதிப்பின் வீரியத்தைக் கட்டுப்படுத்த முடியும்” என்றவர், அன்றாட வாழ்வில் முகக்கவசம் அணிவதன் முக்கியத்துவத்தையும் விளக்கினார்.

டாக்டர் பி.பரந்தாமன்

“நெடுங்காலமாக மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை செய்யும்போது, மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் அனைவரும் முகக்கவசம் மற்றும் தலையுறையைப் பயன்படுத்தி வருகின்றனர். அந்த நேரத்தில் நோயாளியின் உயிருக்குத்தான் முதல் முன்னுரிமை அளிக்கப்படும். எனவே, அறுவை சிகிச்சை நேரத்தில் மருத்துவப் பணியாளர்களால், நோயாளிக்குத் தொற்று பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதால்தான் பாதுகாப்பு வழிமுறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். கொரோனா பரவல் அதிகமாக இருந்தபோது, பெரும்பாலானோரும் முகக்கவசம் அணிந்தனர். அதனால், வழக்கமான ஜலதோஷம், காய்ச்சல், ஆஸ்துமா ஒவ்வாமை, காசநோய் போன்ற பாதிப்புகளின் வீரியம் வெகுவாகக் குறைந்தது.

கண்ணுக்குத் தெரிந்த, தெரியாத தூசுகள் நம் சுவாசத்துடன் கலக்கும்போது, பலருக்கும் ஜலதோஷம், ஒவ்வாமை, காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். முகக்கவசம் அணிவதால் இதுபோன்ற பாதிப்புகளையும் பெருமளவில் கட்டுப்படுத்த முடியும். எச்சில் மூலமாக ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு வைரஸ் தொற்று பரவுவதைத் தடுப்பதிலும் முகக்கவசம் முக்கியப் பங்காற்றும். கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த பிறகு, பொது இடங்களில் முகக்கசவம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது.

மாஸ்க்

வரும் முன் காப்பதுதான் எல்லா விஷயங்களிலும் நல்லது. எனவே, நம் உடலைக் காக்கவும், நம் மூலமாகப் பிறருக்கு பாதிப்பு பரவுவதைத் தடுக்கவும், கூடுமானவரை பொது இடங்களில் முகக்கவசத்தை எப்போதுமே பயன்படுத்துவது நல்லது. N95, சர்ஜிக்கல், காட்டன் துணி வகை முகக்கவசம் என தங்களுக்கு உண்டான ஏதாவதொரு முகக்கவசத்தைப் பயன்படுத்துவது நிச்சயம் பயன்தரும்” என்று பயனுள்ள ஆலோசனையுடன் முடித்தார், மருத்துவர் பரந்தாமன்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com