பதின்ம வயதில் அடியெடுத்து வைக்கும்போதே பலருக்கும் தங்கள் உடல் குறித்த அக்கறை ஆரம்பித்துவிடுகிறது. அது அக்கறையாக இருக்கும்வரை பிரச்னையில்லை. ஆனால் அது உடல் குறித்த தாழ்வு மனப்பான்மையாக மாறும்போதுதான் பிரச்னையே… சரும நிறம் தொடங்கி, உடல் அளவு வரை எதுவும் இந்தத் தாழ்வு மனப்பான்மைக்கு காரணமாகலாம். டீன் ஏஜில் பெரும்பாலான பெண்களை கவலைக்குள்ளாக்குவது மார்பக அளவு குறித்த உண்ணம்.
மார்பகங்கள் சிறியதாக இருந்தாலும் கவலை, பெரிதாக இருந்தாலும் கவலை என இவர்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தம், அவர்களது இல்லற வாழ்க்கையைத் தாண்டியும் தொடர்கிறது. இதை எப்படி அணுகுவது…. இந்த எண்ணத்திலிருந்து மீள்வது எப்படி? விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த உளவியல் ஆலோசகர் சித்ரா அரவிந்த்.

“தங்கள் உடல் குறித்த அதீத கவலை கொள்வது ‘பாடி டிஸ்மார்ஃபிக் டிஸ்ஆர்டர்’ (Body dysmorphic disorder (BDD) எனப்படும் உளவியல் கோளாறு. தனக்கு மிகப்பெரிய உடல் குறைபாடு இருப்பதாகக் கற்பனை செய்து கொள்வது, வெளிப்படையாக வெளியில் தெரியாத சின்னச்சின்ன சருமப் பிரச்னைகள், அழகு சார்ந்த விஷயங்களுக்காக பித்துப் பிடித்தது போன்ற மனநிலைக்குச் செல்வது ஆகியவை இந்த ரகம்தான்.
பாடி டிஸ்மார்ஃபிக் கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள், தன் உடலைத் தானே வெறுக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். சமூகம் தன்னை எப்படிப் பார்க்குமோ என்ற எண்ணத்தில் வெளியே செல்வதற்கே தயங்குவார்கள். இந்த பாதிப்பு உள்ளவர்கள், வேறு பிரச்னைகளுக்கான மருத்துவப் பரிசோதனைகளைக்கூட தவிர்ப்பார்கள். உதாரணத்துக்கு மார்பக அளவு குறித்த கவலை உள்ளவர்கள், மார்பகப் புற்றுநோய்க்கான சோதனை செய்வதற்குக்கூட தயங்குவார்கள். இவர்களுக்கு தாம்பத்திய உறவும் பாதிக்கப்படலாம்.
மார்பகங்கள் சிறியதாக இருந்தாலோ, பெரிதாக இருந்தாலோ அது குறித்துக் கவலை கொள்வதும் பாடி டிஸ்மார்ஃபிக் டிஸ்ஆர்டரின் அறிகுறிதான். படித்த, நல்ல வேலையில் இருக்கும் பெண்களுக்குக்கூட மார்பகங்களின் அளவு குறித்த கவலை இருக்கிறது. இந்த மனநிலைக்கு சமூகமும் ஒருவகையில் காரணம் என்றே சொல்லலாம். பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற சமூக அழுத்தம், திரைப்படங்களும், ஊடகங்களும் பெண்ணுடலை சித்தரிக்கும் விதம் போன்றவை, பெற்றோர் மற்றும் உறவினர் நடத்தும் முறை, பள்ளி மற்றும் குடும்பச் சூழலில் சிறுவயதில் எதிர்கொண்ட கேலி, விமர்சனங்கள், கொடுமைகள் போன்றவையும் ஒரு பெண்ணுக்கு தன் உடல் குறித்த அதீத கவலையைக் கொடுத்திருக்கலாம்.

பெரிய மார்பகங்கள் இருக்கும் பெண்களுக்கு எல்லோரும் தன்னையே பார்ப்பது போன்ற உணர்வு இருக்கும். தனக்குப் பிடித்த உடைகளை அணிய முடியாதது, நடக்கவோ, ஓடவோ முடியாதது என அவை தரும் அழுத்தங்கள் பல. சிறிய மார்பகங்கள் கொண்டவர்களுக்கோ தான் பெண்மையுடன் இல்லையோ, அழகாக இல்லையோ என்ற எண்ணம்… பதின்ம வயதில் பெண் உடலில் நிகழும் ஹார்மோன் மாற்றங்கள், உடல் குறித்த அதீத எதிர்பார்ப்பையும் அப்படி அமையாமல் போகும்போது தீவிர மன அழுத்தத்தையும் கொடுக்கின்றன. மார்பகங்களின் அளவை அதிகரிக்கவோ, குறைக்கவோ காஸ்மெட்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்களை நாடும் இவர்கள், உண்மையில் அணுக வேண்டியவர் உளவியல் ஆலோசகரே…
பிரபலங்கள், நடிகைகள் போன்றோரைப் பார்த்துவிட்டு, மார்பக அளவை மாற்றும் அறுவை சிகிச்சை செய்துகொள்வதெல்லாம் சரியான விஷயமில்லை. அந்த அறுவைசிகிச்சை பிற்காலத்தில் பக்க விளைவுகளையே தரும். அதேபோல மார்பக அளவை அதிகரிப்பதாக விளம்பரப்படுத்தப்படும் க்ரீம்களை பயன்படுத்துவதும் ஆபத்தானது. அந்த க்ரீமில் சேர்க்கப்பட்டுள்ள பொருள்கள், அவற்றின் பக்க விளைவுகள் குறித்து தெரியாமல் பயன்படுத்தக்கூடாது.
முறையான உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவுப்பழக்கம் போன்றவற்றைப் பின்பற்றினால் ஒட்டுமொத்த உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்கலாம். குறிப்பிட்ட உணவுக்கும் மார்பக அளவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. உடல் எடை அதிகமானவர்களுக்கு மார்பங்களிலும் எடை கூடும். உடல் எடை குறையும்போது மார்பக அளவும் மாறும். இதுதான் இயல்பானது. மற்றபடி மார்பக அளவுக்கும் ஆரோக்கியத்துக்கும் எந்தத் தொடர்புமில்லை.

கர்ப்ப காலத்தில் பெண்களின் மார்பக அளவில் மாற்றம் தெரியும். அதற்கேற்ப அவர்கள் உள்ளாடையை மாற்ற வேண்டும். கர்ப்ப காலத்தில் தாயின் சிந்தனை குழந்தையின் ஆரோக்கியத்தை பற்றியதாக மட்டுமே இருக்க வேண்டும். அதைத் தவிர்த்து மார்பக அளவு குறித்து கவலைப்பட்டால் அது மன அழுத்தமாக மாறும். கர்ப்பகால உடல் மாற்றம் என்பது அழகானது என உணர வேண்டும். மார்பக அளவு குறித்த கவலையில் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவதைத் தவிர்க்கக்கூடாது.
சிறுவயதிலிருந்தே உடல் குறித்த தன்னம்பிக்கையுடன் வளர, பெற்றோர் குழந்தைகளை ஊக்கப்படுத்த வேண்டும். விளையாட்டாகக்கூட, குழந்தைகளை உருவகேலி செய்யாமலிருப்பதோடு, மற்றவர்கள் அப்படிச் செய்வதையும் அனுமதிக்கக்கூடாது. குழந்தைக்கு உடல் குறித்த தாழ்வு மனப்பான்மை இருப்பது தெரிந்தால் உளவியல் ஆலோசகரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். சரியான நேரத்து கவுன்சலிங் மூலம் அவர்களை மன அழுத்தத்திலிருந்தும், உடல் குறித்த தாழ்வு மனப்பான்மையிலிருந்தும் நிச்சயம் மீட்கலாம்” என்றார்.
– கவிதா ஸ்ரீ