பட மூலாதாரம், Getty Images
பிபிசி இந்தியாவின் முன்னாள் செய்தியாளர் சர் மார்க் டலி புது டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை காலமானார். அவருடைய முன்னாள் சகாவான சதீஷ் ஜேக்கப் இத்தகவலை உறுதிப்படுத்தினார்.
அவருக்கு வயது 90. மார்க் டலி பிபிசியில் இருந்து விலகிய பின்னர் சுயாதீன செய்தியாளராக பணியாற்றி வந்தார்.
2009ம் ஆண்டு பிபிசி ஹிந்தி சேவையின் ‘ஏக் முலாகத்’ எனும் சிறப்பு நிகழ்ச்சியில், தன் வாழ்க்கையின் அதிகம் அறியப்படாத பக்கங்கள் குறித்து மார்க் டலி வெளிப்படையாக பேசினார்.
பிபிசி ஹிந்தி சேவையின் அப்போதைய இந்திய ஆசிரியரான சஞ்சீவ் ஸ்ரீவத்சவா மார்க் டலியை இதற்காக நேர்காணல் செய்தார். அந்த நேர்காணலில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மார்க் டலி அளித்த பதில்கள்:
நாங்கள் இதழியல் துறையில் பணியாற்ற தொடங்கிய காலகட்டத்தில், இத்துறையில் சாதிக்க வேண்டும் என முயற்சிப்பவர்கள் ஒன்று உங்களுடனோ அல்லது அருண் ஷோரியுடனோ ஒப்பிடப்படுவார்கள். அதுகுறித்து எப்படி உணருகிறீர்கள்?
பலரும் ஏன் அப்படி சொல்கிறார்கள் என எனக்கு தெரியவில்லை. என்னுடைய கடின உழைப்பால் மட்டுமே இது நிகழ்ந்ததாக நான் கூறமாட்டேன். எனக்கு அதிர்ஷ்டம் இருந்தது மற்றும் கடவுள் என் பக்கம் இருந்தார்.
உண்மையில் அந்த காலகட்டத்தில் இந்தியாவில் தொலைக்காட்சியே கிடையாது. வானொலி அரசின் வசம் மட்டுமே பிரத்யேகமாக இருக்கும். ‘ஆல் இந்தியா ரேடியோ’ அரசு வானொலி நிலையம் என்று மக்கள் கூறுவார்கள். வேறு கோணத்துடன் செய்திகளை கேட்க வேண்டும் என விரும்புபவர்கள் பிபிசி செய்திகளை கேட்பார்கள். நான் பிபிசியுடன் தொடர்புடையவன், அதனால் தான் நான் பிரபலமானேன்.
இன்றைக்கும் நாங்கள் பார்வையாளராகவோ அல்லது விஐபியாகவோ செல்லும்போது உங்களை குறித்து விசாரிப்பார்கள். இப்போது நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என கேட்பார்கள். இத்தகைய புகழ்மிக்க பணிகளுக்குப் பிறகு எப்படி உணருகிறீர்கள்?
இல்லை, அதுவொன்றும் சிறப்பான ஒன்றாக தெரியவில்லை. அப்படி நடந்தால், நான் திமிர் பிடித்தவனாக மாறிவிடுவேன். ஆணவத்துடன் இருப்பது இதழியல் துறைக்கு நல்லதல்ல. இதையேதான் நான் இளம் செய்தியாளர்களுக்கு கூறுகிறேன்: இதழியல் துறையில் ஆணவமாக இருப்பது மிகப்பெரிய பாவம் என அவர்களுக்கு கூறுகிறேன்.
நான் ஒரு பெரிய செய்தியை எழுதி, அதனால் சிறந்த செய்தியாளராக மாறினேன் என நினைப்பது தவறானது. ஸுல்ஃபிகர் அலி பூட்டோ தூக்கிலிடப்பட்டது குறித்து நான் எழுதியது என்பது என்னுடைய கதை அல்ல; அது பூட்டோவினுடைய கதை. அதனால்தான் என்னை மற்றவர்கள் சிறந்த மனிதர் என கூறும்போது நான் ஆணவக்காரனாக மாறிவிடுவேனா என அச்சப்படுகிறேன்.
பட மூலாதாரம், Getty Images
பூட்டோவை போன்று இந்திரா காந்தியின் படுகொலை குறித்தும் நீங்கள் செய்தி சேகரித்துள்ளீர்கள். ராஜீவ் காந்தி டிரான்சிஸ்டரை கேட்டுக்கொண்டிருப்பது போன்ற புகைப்படம் உள்ளது. அவர் அதில் என்ன கேட்டுக்கொண்டிருந்தார் என்பது எனக்கு தெரியாது, ஆனால் பிபிசி செய்தியை அவர் கேட்டுக்கொண்டிருந்ததாக கூறுகிறார்களே…
ஆனால் அவர் கேட்டுக்கொண்டிருந்தது மார்க் டலியினுடையது அல்ல, சதீஷ் ஜேக்கபினுடையது என்று கூற விரும்புகிறேன். சதீஷ் ஜேக்கபின் ஆதரவு இல்லாவிட்டால் நான் இவ்வளவு பிரபலமாகியிருக்க மாட்டேன் என நான் கூறுவேன்.
ஆரம்பக் கதைக்கு செல்வோம். நீங்கள் இந்தியாவில் பிறந்து பின்னர் லண்டனுக்கு இடம்பெயர்ந்தீர்கள். உங்களின் வாழ்க்கை குறித்து சிறிது சொல்லுங்கள்…
நான் கொல்கத்தாவின் டோலிகஞ்ச் (Tollygunge) எனும் பகுதியில் பிறந்தேன். கிளாண்டர் ராபர்ட்சன் – ஸ்நாப் எனும் நிறுவனத்தில் என்னுடைய அப்பா கூட்டாளியாக இருந்தார். அச்சமயத்தில் அந்த நிறுவனம் நிலக்கரி சுரங்கங்கள், ரயில்வே மற்றும் காப்பீட்டு நிறுவனம் ஆகியவற்றை உள்ளடக்கிய பெரிய நிறுவனமாக இருந்தது. என்னுடைய அம்மா வங்கதேசத்தின் ஓகாரா சந்திப்பில் உள்ள சிறுநகரத்தில் பிறந்தவர். இன்றும் கூட ரயில் மூலம் மட்டுமே அங்கு செல்ல முடியும்.
10-15 ஆண்டுகளுக்கு முன்பு ஓகாரா சந்திப்புக்கு நான் சென்றபோது அங்கிருந்த ரயில் நிலைய பொறுப்பாளர் ஏன் அங்கு வந்தேன் என கேட்டார். என்னுடைய அம்மா இங்குதான் பிறந்ததாக அவரிடம் கூறினேன். அவர் என்னிடம், “அப்படியென்றால் நீங்கள் மக்களின் வரவேற்பை பெற வேண்டும்” என கூறினார். அங்கிருந்து உடனடியாக சென்றுவிட்டேன்.
என்னுடைய குழந்தைப் பருவத்தை நான் கொல்கத்தாவில் கழித்தேன். இந்திய குழந்தைகளுடன் நாங்கள் விளையாடியதில்லை. பள்ளியில் நாங்கள் ஆங்கில குழந்தைகளுடன் படித்தோம். நாங்கள் சிறிது ஹிந்தியில் எழுத முயற்சித்தாலும், நான் அந்த மொழியை கற்றுக்கொள்ளக் கூடாது என தடுப்பதற்காக 24 மணிநேரமும் என்னை கண்காணிப்பதற்காக பணியாள் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார். சமையலர்கள் அல்லது மற்ற பணியாட்களுடன் நெருங்கிப் பழக வேண்டாம் என எங்களுக்கு சொல்லப்பட்டது.
ஒருமுறை என் பெற்றோரின் ஓட்டுநருடன் நான் ஹிந்தியில் எண்ணிக் கொண்டிருந்தபோது, என்னை கவனித்துக்கொள்ள நியமிக்கப்பட்டிருந்த பணியாள் என்னை அறைந்து, “இது உன்னுடைய மொழி அல்ல” என கூறினார். எனவே, சிறுவயதில் ஹிந்தி அல்லது வங்கமொழி கற்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை.

உங்களுடைய பள்ளி மற்றும் கல்லூரி படிப்பு குறித்து சொல்லுங்கள்…
நான் இங்கிலாந்தில் உள்ள பொதுப் பள்ளியில் படித்தேன். அது ஆண்கள் மட்டுமே படிக்கும் பள்ளி. நான் தவறாக நடந்துகொண்டாலோ அல்லது ஒழுங்காக படிக்கவில்லையென்றாலோ ஆசிரியர்கள் என்னை அடிப்பார்கள். அதன்பின், இரண்டு ஆண்டுகளுக்கு நான் ராணுவத்தில் இணைந்து பணியாற்றினேன். ஆனால், அது எனக்கு கொஞ்சம்கூட பிடிக்கவில்லை. அதன்பின், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் சென்று வரலாறு மற்றும் மதம் குறித்து படித்தேன். நான் பாதிரியாராக திட்டமிட்டிருந்தேன், ஆனால் என்னால் படிப்பை முடிக்க முடியவில்லை.
அதன்பின், டார்ஜிலிங்கில் உள்ள உண்டு-உறைவிடப் பள்ளியில் ஐந்து ஆண்டுகள் படித்தேன். அதன்பின் இங்கிலாந்து சென்றேன். 21 ஆண்டுகள் நான் படிப்பில் மட்டுமே ஈடுபட்டிருந்தேன். நான் பல்கலைக்கழகம் சென்றபோது ஒரு சுதந்திர உணர்வை உணர்ந்தேன். அதனால் நான் குறைவாகவே படித்தேன், அங்கு விளையாடினேன் மற்றும் பெண்களை துரத்தினேன்.
ஒன்பது வயதில் கொல்கத்தாவிலிருந்து இங்கிலாந்துக்கு இடம்பெயர்ந்தபோது எப்படி உணர்ந்தீர்கள்?
மிகவும் மோசமான இடத்திற்கு வந்தது போல உணர்ந்தேன். அதற்கு 2-3 காரணங்கள் இருந்தன. முதலில், வானிலை மோசமாக இருந்தது, மேலும் மிகக் குறைவான சூரிய வெளிச்சமே இருக்கும். இந்தியாவில் எங்களுக்கு பல வேலையாட்கள் இருப்பார்கள், ஆனால் இங்கிலாந்தில் எல்லா வேலைகளையும் நாங்களே செய்ய வேண்டியிருந்தது. இந்தியாவில் எனக்கு பல நண்பர்கள் உண்டு, ஆனால் இங்கிலாந்தில் அதிக நண்பர்கள் இல்லை. இங்கிலாந்து சென்றவுடனேயே நான் பள்ளியில் சேர்க்கப்பட்டேன்., அங்குள்ள ஆசிரியர்கள் கடுமையானவர்களாக இருந்தனர். டார்ஜிலிங்கில் இருந்த பள்ளி மிகவும் நன்றாக இருந்தது.
பட மூலாதாரம், Getty Images
நீங்கள் ராணுவத்தில் பணிபுரிந்துள்ளீர்கள், கேம்பிரிட்ஜில் வரலாறு மற்றும் இறையியலை படித்துள்ளீர்கள். எப்படி நீங்கள் பிபிசியில் இணைந்தீர்கள்?
அந்த சமயத்தில் நான் பாதிரியாரவதற்கான படிப்பை முடிக்க முடியவில்லை. அப்போது பல்கலைக்கழக தலைமை பொறுப்பில் உள்ளவர் என்னிடம் வந்து, “நீ சிறப்பான நபர், ஆனால் நீ தீவிரமாக இருப்பதில்லை. எனவே பிரசங்கத்தை நிறுத்திவிட்டு, பொது இல்லத்தில் தங்கிவிடு,” என்றார்.
அதன்பின், முதியவர்களுக்காக பணிபுரியும் அரசுசாரா நிறுவனத்தில் நான் பணியாற்றினேன். தற்செயலாக பிபிசியில் பணிபுரிவதற்கான விளம்பரத்தை பார்த்து அதற்கு விண்ணப்பித்தேன். ஆனால், எனக்கு செய்தியாளர் வேலை கிடைக்கவில்லை. அதன் பணியாளர் துறையில் எழுத்தர் (clerical) பணியில் சேர்ந்தேன். ஓராண்டுக்குப் பின் இந்தியாவுக்கு வரும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வேலைக்கான நேர்காணலின்போது எனக்கு சிறிது ஹிந்தி தெரிந்திருக்க வேண்டும் என எதிர்பார்த்தனர். அங்கு நான் ஒன்பது ஆண்டுகள் இருந்தாலும் எனக்கு சில மழலைப் பாடல்கள் மட்டுமே ஹிந்தியில் தெரியும்.
இந்தியாவுக்கு நீங்கள் வந்தபின்பு, இதழியல் பணியில் உங்களுக்கு வாய்ப்பு கிடைத்ததா?
நான் இந்தியாவுக்கு வந்தபோது பணியாளர் துறையிலேயே இருந்தேன். அங்கு நிறைய வேலைகள் இருக்காது. எனவே, நான் என்னுடைய சொந்த முயற்சியில் செய்தியாளராக விரும்பினேன். தொலைக்காட்சி பிரிவினருக்கு அப்போது உதவுவேன். ஒரு பழங்கால கார் பேரணி (Statesman Vintage Car Rally) குறித்த நிகழ்ச்சிதான் என்னுடைய முதல் நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் ஒரு பெண், அவருக்கு அந்த நிகழ்ச்சி பிடித்திருந்தது.
சிறுவயதில் நீங்கள் ஹிந்தி கற்கவில்லை. பின்னர் நீங்கள் இங்கிலாந்து சென்றுவிட்டீர்கள். பின்னர் எப்படி ஹிந்தி கற்றீர்கள்?
நான் ஹிந்தியில் பேச முயற்சித்தேன். ஆனால், செய்திப்பிரிவில் என்னுடைய பணி குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக இருந்தது. அதனால், தொடர்ந்து என்னால் ஹிந்தி கற்க முடியவில்லை, ஆனாலும் ஹிந்தி செய்தித்தாள்கள் படித்து அதைக் கற்றேன். நான் எப்போதெல்லாம் இந்தியாவில் ஒருவரிடம் ஹிந்தியில் பேச வேண்டும் என முயற்சிக்கிறேனோ, அப்போதெல்லாம் அவர்கள் ஆங்கிலத்திலேயே பதிலளிப்பார்கள்.
ஆங்கிலம் பேசத் தெரியாதவர்கள் தாழ்ந்தவர்களாக உணர்ந்த ஒரு காலம் இருந்தது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
அந்த காலத்தில் நீங்கள் ஹிந்தியில் பேசினால், மற்றவர்கள் எரிச்சலடைந்து, “எனக்கு ஆங்கிலம் தெரியாது என இவர் நினைக்கிறாரா” என நினைத்துக்கொள்வார்கள். இந்தியாவின் தன்னம்பிக்கை வளர்ந்துள்ளது என நான் நம்புகிறேன். ஆனால், ஹிந்தி மொழியில் பேசுபவர்களின் தன்னம்பிக்கை இன்னும் அதிகரிக்க வேண்டும்.
ஒரு பத்திரிகையாளராக நீங்கள் பல செய்திகளை கொடுத்திருக்கிறீர்கள். மறக்க முடியாத ஏதேனும் ஒரு செய்தி?
ஒரு சுவாரசியமான சம்பவம் உண்டு. அவசரநிலை காலத்தின் போது வித்யா சரண் சுக்லா தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சராக இருந்தார். அவர் என்னை அழைத்து, “உங்களுக்குச் செய்திகள் எங்கிருந்து கிடைக்கின்றன?” என்று கேட்டார். அதற்கு நான், “எங்களிடம் பத்திரிகையாளர்கள் இருக்கிறார்கள், நாங்கள் அகில இந்திய வானொலி செய்திகளைக் கேட்கிறோம்” என்று பதிலளித்தேன். அதற்கு அவர், “நீங்கள் உளவு பார்க்கிறீர்கள் என்று நான் நினைக்கிறேன்” என்றார். நான் ஏன் அப்படி நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, “நீங்கள் உளவு பார்க்கவில்லை என்றால், பிறகு ஏன் இந்தி கற்றுக்கொண்டீர்கள்?” என்றார் அவர்.
வித்யா சரண் சுக்லா, சஞ்சய் காந்தியின் நெருங்கிய ஆதரவாளராகக் கருதப்பட்டார். சமீபத்தில் வருண் காந்தி விவகாரத்தில் சுக்லாவிடம், ‘இன்று சஞ்சய் காந்தி இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்?’ என்று கேட்டதற்கு, ‘சஞ்சய் வருணுக்கு இரண்டு அறை கொடுத்திருப்பார்’ என்றார். இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
சஞ்சய் காந்தி மிகவும் கண்டிப்பான சுபாவம் கொண்டவர். தடியடியின் மூலம் (அதிகாரத்தின் மூலம்) அனைத்தையும் சரி செய்துவிடலாம் என்று அவர் நம்பினார். அதனால்தான் அவசரநிலை காலம் மிகவும் மோசமாக இருந்தது.
இந்திரா காந்தியுடன் உங்களுக்குப் பழக்கம் இருந்தது. அவரைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
இந்திரா காந்தியைப் பற்றித் தெளிவாக எதுவும் சொல்ல முடியாது. சில நேரங்களில் அவர் மிகவும் நட்புடனும், சில நேரங்களில் மிகவும் கடுகடுப்பாகவும் நடந்துகொள்வார். அவசரநிலைக்குப் பிறகு ஓரிருமுறை நான் பிபிசி இயக்குநருடன் இந்திரா காந்தியைச் சந்திக்கச் சென்றேன். அப்போது இயக்குநர் அவரிடம், “மக்கள் உங்களைத் தோற்கடித்துவிட்டார்கள், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு இந்திரா காந்தி, “மக்கள் வதந்திகளால் திசைதிருப்பப்பட்டனர், பெரும்பாலான வதந்திகளைப் பரப்பியது பிபிசி தான்” என்றார்.
கடைசியாக 1983-ல் காமன்வெல்த் பிரதமர்கள் மாநாட்டின் போது அவரைச் சந்தித்தேன். ஒரு சிறிய நேர்காணல் எடுத்தேன். நேர்காணலுக்குப் பிறகு டேப் ரெக்கார்டரை அணைக்கச் சொல்லிவிட்டு, சுமார் 10-15 நிமிடங்கள் நாட்டின் நிலவரம் குறித்து என்னிடம் பேசிக்கொண்டிருந்தார்.
பட மூலாதாரம், Getty Images
மறக்க முடியாத சம்பவங்களைப் பற்றி?
மிகவும் முக்கியமான சம்பவம் அயோத்தியில் நடந்தது. அங்கு இடிப்புச் சம்பவங்கள் நடந்தபோது நான் அங்கேயே இருந்தேன். அயோத்தியிலிருந்து செய்தியை அனுப்ப முடியாத சூழல் இருந்ததால், உடனடியாக ஃபைசாபாத் சென்று அங்கிருந்து செய்தியை அனுப்பினேன்.
பிபிசி தான் முதலில் இந்த இடிப்புச் செய்தியை வெளியிட்டது. பிறகு அயோத்தி மற்றும் ஃபைசாபாத் இடையே எங்களை ஒரு கும்பல் சூழ்ந்துகொண்டது. என்னுடன் சில இந்திய பத்திரிகையாளர்களும் இருந்தனர். எங்களை ஒரு அறையில் வைத்துப் பூட்டிவிட்டனர்.
உங்கள் தொழிலில் மிகக் கடினமான பணி எது?
சுல்பிகார் அலி பூட்டோவின் வழக்கு விசாரணையைச் செய்தியாக்கியது மிகவும் கடினமாக இருந்தது என்று நினைக்கிறேன். நான் ஒவ்வொரு நாள் மாலையும் நீதிபதியைச் சந்திக்கச் செல்வேன். அவர் என்னிடம் அனைத்தையும் கூறுவதாகவும், ஆனால் அந்தச் செய்தி வெளியானால், அதனை மறுப்பேன என்று கூறிவிடுவார். அது எனக்கு மிகவும் இக்கட்டான ஒரு சூழலாக இருந்தது.
உங்கள் வாழ்க்கையின் மிகச்சிறந்த செய்தி எது?
எனக்கு ரயில்வே என்றால் மிகவும் பிடிக்கும். அது எனக்கு மிகவும் பிடித்தமான தலைப்பு. கராச்சியிலிருந்து கைபர் கணவாய் வரையிலான ரயில் பயணத்தைப் பற்றி பிபிசி-க்காக ஒரு படம் எடுத்தேன். பெஷாவரிலிருந்து கைபர் கணவாய் வரையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த ரயில் பாதை பல ஆண்டுகளாக மூடப்பட்டிருந்தது. அதை மீண்டும் திறக்குமாறு பாகிஸ்தான் ரயில்வேயிடம் நாங்கள் கோரிக்கை வைத்தோம், அவர்களும் அதற்குச் சம்மதித்தனர்.
இந்தியாவைப் பற்றிப் பல தசாப்தங்களாகச் செய்திகள் வழங்கியுள்ளீர்கள். இந்தியாவின் மிகப்பெரிய பலமாக நீங்கள் எதனைக் கருதுகிறீர்கள்?
எனது அபிப்பிராயத்தில், இந்தியாவின் மிகப்பெரிய பலம் அதன் ‘நிலையான தன்மை’. இந்தியாவின் மிகச்சிறந்த பண்பு என்னவென்றால், இங்கு அனைத்து மதங்களையும் சார்ந்த மக்கள் வாழ்கிறார்கள். இங்கு மலைகள், பாலைவனங்கள் மற்றும் கடற்கரைகள் உள்ளன. இது ஒரு ஒருங்கிணைந்த நாடு, என்றும் அப்படியே இருக்கும்.
மிகப்பெரிய பலவீனம் எது?
எனது பார்வையில் மிகப்பெரிய பலவீனம் என்னவென்றால், ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து நீங்கள் எடுத்துக்கொண்ட ‘பாபு கிரி’ (அதிகாரவர்க்கம்) முறை இன்னும் தொடர்வதுதான்.
அதிகாரவர்க்கம் (Bureaucracy) இல்லாமல் நாடு எப்படி இயங்கும்? என்ன மாதிரியான முறையை அமல்படுத்த வேண்டும்?
இன்னும் இங்கு பழைய ‘தாணா’ (காவல் நிலைய) முறைதான் உள்ளது. இங்கிலாந்தில் நவீன காவல் படை உள்ளது. இந்தியாவில் நவீன காவல் துறை இருப்பதாக நீங்கள் சொல்ல முடியாது. இன்றும் கிராமங்களில் ‘பாபு’க்கள் (அதிகாரிகள்) தங்கள் புகார்களைக் காதுகொடுத்துக் கேட்பதில்லை என்பதுதான் பொதுவான புகாராக உள்ளது. மக்களை ஆள வேண்டும் என்றுதான் அதிகாரிகள் இன்றும் நினைக்கிறார்கள்.
உங்களுக்கு நைட்ஹுட், பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அதைப்பற்றி எப்படி உணர்கிறீர்கள்?
இந்தக் கௌரவங்கள் எனக்குக் கிடைக்கும் என்று நான் கற்பனை கூடச் செய்ததில்லை. பிரிட்டிஷ் தூதர் என்னிடம் ‘நைட்ஹுட்’ பட்டத்தை ஏற்றுக்கொள்வீர்களா என்று கேட்டபோது, “நான் பழைய காலத்தைச் சேர்ந்தவன், இக்காலத்தைச் சேர்ந்தவன் அல்ல” என்று அவரிடம் கூறினேன். அதற்கு அவர், “நாங்கள் உங்களை இன்னும் இந்த யுகத்தைச் சேர்ந்தவராகவே கருதுகிறோம்” என்றார்.
பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் விருதுகளைப் பெற்றபோது நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன்.
உங்களுக்குப் பிடித்த இந்திய அரசியல்வாதி யார்?
சௌத்ரி தேவிலால். அவர் எனது மிகச்சிறந்த நண்பர். தேர்தல் சமயத்தில் ஒருமுறை நான் அவரைச் சந்திக்கச் சென்றேன். சௌத்ரி சாப் தனக்கு மிகவும் சலிப்பாக இருப்பதாகக் கூறினார். “தேர்தல் அறிக்கையில் பல நல்ல விஷயங்கள் இருப்பதாகக் கேள்விப்பட்டேனே?” என்று நான் கேட்டேன். அதற்கு அவர், “முட்டாளே, நான் எத்தனை தேர்தல்களில் போட்டியிட்டேன் என்று எனக்கே தெரியாது, ஆனால் ஒருமுறை கூட தேர்தல் அறிக்கையை நான் வாசித்ததில்லை” என்றார்.
அவரிடம் இருந்த ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், கிராமங்களில் இருக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் அவரைத் தெரிந்திருந்தது.
இரண்டாவதாக, எனக்கு ராஜீவ் காந்தியை மிகவும் பிடிக்கும். என் கருத்துப்படி, அவர் கொல்லப்படாமல் இருந்திருந்தால் இந்தியா இன்னும் அதிக வளர்ச்சி கண்டிருக்கும். ஏனெனில் என்ன செய்ய வேண்டும் என்பதில் அவருக்குத் தெளிவு இருந்தது.
பட மூலாதாரம், Getty Images
உங்களுக்குக் கிரிக்கெட் மீதும் அதிக ஆர்வம் உண்டு. உங்களுக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர் யார்?
உண்மையைச் சொன்னால், நான் இந்திய கிரிக்கெட் அணியின் மிகப்பெரிய ஆதரவாளன், குறிப்பாக இன்றைய அணிக்கு ஆதரவாளன். எனக்கு மகேந்திர சிங் தோனியை மிகவும் பிடிக்கும். நான் முதன்முதலில் தோனியைப் பார்த்தபோதே, அவர் பெரிய உயரத்திற்குச் செல்வார் என்று என்னைச் சுற்றியிருந்தவர்களிடம் கூறினேன்.
இவர்களைத் தவிர, எனக்கு சௌரவ் கங்குலியை மிகவும் பிடிக்கும். ஹர்பஜன் சிங்கையும் பிடிக்கும், ஆனால் அவர் எப்போதும் சோகமாகத் தெரிவார்.
உங்களுக்கு இந்தித் திரைப்படங்களும் பிடிக்கும். உங்களுக்குப் பிடித்த படங்கள் எவை?
நான் ஒரு இந்தித் திரைப்பட ரசிகன். ‘ஓம்காரா’ மற்றும் ‘தாரே ஜமீன் பர்’ படங்கள் எனக்குப் பிடித்திருந்தன. பழைய படங்களில் ‘நயா தௌர்’ பிடிக்கும். எனக்கு அம்ரிஷ் புரியை மிகவும் பிடிக்கும். நசீருதீன் ஷா மற்றும் சையப் அலி கான் சிறந்த நடிகர்கள். போமன் இரானியையும் பிடிக்கும்.
அம்ரிஷ் புரியைப் பற்றி ஒரு விஷயம் சொல்ல விரும்புகிறேன். எனக்கு நைட்ஹுட் பட்டம் கிடைத்தபோது, “உங்களுக்கு வேறு என்ன ஆசை இருக்கிறது?” என்று பத்திரிகையாளர்கள் கேட்டார்கள். அதற்கு நான், “இந்திப் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும், ஆனால் அந்தப் படத்தில் அம்ரிஷ் புரி இருக்க வேண்டும்” என்றேன். சில நாட்களுக்குப் பிறகு எனக்கு ஒரு போன் வந்தது, “மார்க் டலி சார், நான் உங்கள் நண்பன் அம்ரிஷ் புரி பேசுகிறேன், உங்கள் ஆசை விரைவில் நிறைவேறும்” என்றார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்திற்குப் பிறகு விரைவில் அவர் காலமானார்.
உங்களுக்குப் பிடித்த பாடல்கள் எவை?
எனக்கு ‘சாரே ஜஹான் சே அச்சா…’ மிகவும் பிடிக்கும். இது தவிர ஓம்காரா படத்தின் தலைப்புப் பாடல், ஜுனூன் படத்தின் ‘ஆஜ் ரங் ஹை’, பரிணிதா படத்தின் ‘யே ஹவா குன்குனாயே’ ஆகிய பாடல்கள் பிடிக்கும். லகான் படத்தின் ‘கனன் கனன்’, சுபைதா படத்தின் ‘தீமே தீமே’ மற்றும் முன்னா பாய் எம்பிபிஎஸ், தாரே ஜமீன் பர் பாடல்களும் பிடிக்கும். பழைய படமான நயா தௌர் பாடல்களும் எனக்குப் பிடிக்கும்.

1960-களுக்குப் பிறகு இந்தியாவில் பல தேர்தல்களைப் பார்த்துள்ளீர்கள். இந்தியத் தேர்தல்களில் என்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன?
நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மிகப்பெரிய மாற்றம் தேர்தல் ஏற்பாடுகளில் நிகழ்ந்துள்ளது. இப்போது தேர்தல்கள் ஒரு மாதம் வரை நீடிக்கின்றன. முன்பு காங்கிரஸ் மட்டுமே தேசியக் கட்சியாக இருந்தது, மற்றவை சிறிய கட்சிகளாக இருந்தன. இப்போது இரண்டு தேசியக் கட்சிகள் உள்ளன, சிறிய கட்சிகளின் பலமும் கணிசமாக அதிகரித்துள்ளது.
இவ்வளவு கட்சிகள் இருப்பது இந்தியாவிற்கு நல்லது என்று நினைக்கிறீர்களா?
ஒரே ஒரு தேசியக் கட்சி மட்டும் இருக்கக்கூடாது என்பது மிகவும் நல்ல விஷயம். சிறிய கட்சிகளின் வளர்ச்சியால் தலித் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்குப் பெரிய வாய்ப்புகள் கிடைத்துள்ளன. 10-15 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராக ஒரு தலித் பெண் (மாயாவதி) இருப்பார் என்று யாராவது கற்பனை செய்திருப்பார்களா? இந்த மாற்றம் நல்லது இல்லை என்று யார் சொல்ல முடியும்?
வருங்காலத்தில் இந்தியாவை எங்கே பார்க்கிறீர்கள்?
வருங்காலத்தில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இன்னும் வேகம் எடுக்கும். அரசியல் அமைப்பில் சீர்திருத்தங்கள் வரும். ஆனால் இந்தச் சீர்திருத்தங்கள் சாதாரண மக்கள் தங்கள் குரலை உயர்த்தினால் மட்டுமே சாத்தியமாகும்.
உங்கள் நலம் விரும்பிகள் உங்களிடமிருந்து எதை எதிர்பார்க்கலாம்?
நான் தற்போது இந்தியாவில் நடக்கும் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் குறித்து ஒரு புத்தகம் எழுதிக் கொண்டிருக்கிறேன். அதுதான் எனது கடைசிப் புத்தகமாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதன் பிறகு நான் ஓய்வு பெறுவேன்.
(இந்தக் கட்டுரை முதன்முதலில் 2009 ஏப்ரல் 5 அன்று பிபிசியில் வெளியானது. அப்போதைய பிபிசி இந்தி சேவையின் இந்திய ஆசிரியர் சஞ்சீவ் ஸ்ரீவஸ்தவா இந்த நேர்காணலை எடுத்தார்.)
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு