மாதவிடாய் நாள்களில் சில பெண்களுக்கு காபி உள்ளிட்ட சூடான பானங்களை பருகத் தோன்றும். சிலருக்கு சாக்லேட் பிடிக்கும். சிலருக்கு சாப்பிடவே பிடிக்காது.
மாதவிடாய் நாள்களுக்கு உகந்த உணவுகள் என்னென்ன, தவிர்க்க வேண்டியவை என்னென்ன? மகப்பேறு மருத்துவர் மதுப்பிரியாவிடம் பேசினோம்…
“2021-2022ம் ஆண்டுக்கான American College of Obstetricians and Gynecologists என்னும் அமெரிக்காவின் மிக முக்கியமான மருத்துவக்கல்லூரியின் வழிகாட்டுதல்களின்படி, கஃபீன் மற்றும் மதுபானத்தை மாதவிடாய் நாள்களில் தவிர்ப்பது, அந்த நாள்களில் ஏற்படும் வலியைக் குறைக்க உதவும் என்று கூறப்பட்டுள்ளது. அதோடு ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதவிடாய் நாள்களில் காபி, டீ போன்ற கஃபீன் பொருள்களுக்கான உணர்திறன் மாறுபடும். ஒரு சில பெண்கள், மாதவிடாய் நாள்களில் மன அழுத்தம் மற்றும் வலியைக் கட்டுக்குள் வைத்திருக்க டீ, காபியை அதிகம் நாடுவர். அவர்களது உணர்திறன் மாறுபட்டிருக்கும். ஆனால் பொதுவாக மாதவிடாய் நாள்களில் டீ, காபியை தவிர்ப்பதே மிகவும் சிறந்தது.