மாணவர்களின் நலன் காக்க பெற்றோர் செய்ய வேண்டியது… | What parents need to do to protect the welfare of students …

Share

கொரோனா குறைந்து வந்தாலும், முற்றிலும் ஒழிந்து விடவில்லை. தொற்று அபாயம் முழுமையாக நீங்காத நிலையில், பள்ளி – கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் தங்கள் உடலையும், மனத்தையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சித்த மருத்துவத்தில் ஏராளமான வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன. மாணவர்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டிய காலகட்டம் இது. பஸ் போக்குவரத்து, வகுப்பறை, நண்பர்களுடன் அமர்ந்து சாப்பிடுதல், விளையாடுதல் மற்றும் ஒன்றாகக் கூடும் இடங்களில் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.

பள்ளி, கல்லூரி மட்டுமின்றி வீடு, பொது இடங்களிலும் முகக் கவசம், தனிமனித இடைவெளி உள்ளிட்ட அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை அவசியம் பின்பற்ற வேண்டும். பருவ மழை காலம் துவங்க உள்ளதால், மாணவர்களுக்கு இருமல், ஜலதோஷம் உள்ளிட்ட சின்னச்சின்ன பிரச்னைகள் தலை காட்டலாம். பெற்றோர், ஆசிரியர்கள் அச்சப்பட தேவையில்லை. விழிப்புணர்வு, கவனத்துடன் இருந்தால் எளிதாக கையாளலாம்.

உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்திருந்தாலே போதும். ஊட்டச்சத்து நிலை, ஒருவரது மனத்திறனை நேரடியாக பாதிக்கும் என்பது பல்வேறு ஆராச்சிகள் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது. குறிப்பாக இளம் பருவத்தில் இரும்புச்சத்து குறைபாடு பிரச்னையால், மூளையிலுள்ள நரம்பு செல்களிடையே சமிஞ்சைகளை பரிமாற்றம் செய்யக் கூடிய டோபமைன் நிலையைக் குறைத்து, அறிவாற்றல் திறனை பாதிக்கும்.

இதுபோல வைட்டமின் பி மற்றும் இ, அயோடின், ஜிங்க் போன்ற தாது உப்புகளின் குறைபாடும் நினைவாற்றலை குறைக்கும் திறன் கொண்டது. குழந்தைகளுக்கு இந்தக் குறைபாடுகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். அரசு மருத்துவமனைகளில் உள்ள சித்தா பிரிவில் அமுக்கரா, கருப்பு விஷ்ணுசக்கரம் மாத்திரைகள் மற்றும் நெல்லிக்காய் லேகியம் அடங்கிய ஆரோக்கிய பெட்டகம் இலவசமாக வழங்கப்படுகிறது.

இதனை மருத்துவர் அறிவுரைகள்படி நாள்தோறும் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். முகக்கவசம் அணியாதது, கூட்டம் அதிகமுள்ள பகுதிகளுக்கு செல்லுதல் போன்ற அசாதாரண சூழல் ஏற்படும் சமயங்களில் கடுக்காய், நெல்லிக்காய், தான்ட்ரிகாய் அடங்கிய திரிபால சூரணம் பொடியை லேசான வெந்நீரில் கலந்து வாய் கொப்பளிக்கலாம். மழைக்காலத்தில் 10 கிராம் தாளிசாதி சூரணத்தை நாட்டுத்தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் சளி தொந்தரவு நீங்கும்.

இதனை கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் பின்பற்றலாம். வேப்பிலை, மஞ்சள் கலந்த தண்ணீரை எப்போதும் தயாராக வைத்திருக்க வேண்டும். மாணவர்கள் வீட்டிற்கு வந்ததும் வாய் கொப்பளித்து, நன்றாக கை, கால் கழுவ சொல்ல வேண்டும். தினமும் சலவை செய்த துணிகளை அணிவிக்க வேண்டும். மறுநாள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

மஞ்சள், நொச்சி இலை போன்றவற்றை மிதமான சுடுநீரில் போட்டு ஆவி பிடிக்க சொல்ல வேண்டும். ஆடாதொடை இலை, கற்பூரவள்ளி இலை, துளசி இலை போன்றவற்றை கொதிக்க வைத்த தண்ணீருடன், பனங்கற்கண்டு கலந்து கொடுக்கலாம். இதனால் கண்டிப்பாக வாய், தொண்டை, மூக்கு உள்ளிட்ட பகுதிகளில் கிருமி இருந்தால் மடிந்து போகும்.

சளி போன்றவை பிடிக்காது. சாக்லெட், பாக்கெட் நொறுக்குத்தீனிகளை தவிர்த்து கடலை மிட்டாய், எள்ளு மிட்டாய் போன்ற பாரம்பரிய உணவு பொருட்களை சாப்பிட வேண்டும். மேலும் கபசுர குடிநீர் வாரத்தில் 5 நாட்களுக்கு குடிக்கலாம். மாணவர்கள் 30 மி.லி., பெரியவர்கள் 60 மி.லி குடிக்கலாம்.தினமும் குறைந்தது அரை மணிநேரம் தியானம், யோகா, மூச்சு பயிற்சியை செய்ய வேண்டும். இந்த வழிமுறைகளை பின்பற்றினால் மழை காலத்தில் சளி தொந்தரவுகளில் இருந்து தப்பித்து, கொரோனா அச்சத்திலிருந்து விடுபடலாம்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com