மற்ற மாநில உணவுகளையும் ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம்; ஜொமோட்டோவின் இந்தச் சேவை எப்படிச் சாத்தியம்? | Zomato launches Intercity legends – How this works?

Share

ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு ஸ்பெஷல் இருக்கும். அந்த வகையில் இனிமேல் நீங்கள் இருக்கும் இடத்திலிருந்தே இந்தியாவின் மற்ற நகரங்களின் உணவுகளையும் ஆர்டர் செய்து சாப்பிடலாம். ஜொமோட்டோ தற்போது ‘இன்டர்சிட்டி லெஜெண்ட்ஸ்’ (Intercity legends) என்ற புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தச் சேவையானது நகரங்களுக்கு இடையேயான உணவு விநியோக சேவையை வழங்கவுள்ளது.

இது தொடர்பாக ஜொமோட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல் பேசியதாவது, “இந்தியாவின் மற்ற நகரங்களில் உள்ள ஸ்பெஷலான உணவுகளைப் பிற நகரங்களிலிருந்து ஆர்டர் செய்ய முடியும். ஆனால், இன்று ஆர்டர் செய்தால் அதிகபட்சமாக ஒரு நாளுக்குள் உணவு டெலிவரி செய்யப்படும். பெரும்பாலும் பேக்கிங் செய்யப்பட்ட உணவுகளே டெலிவரி செய்யப்படும் என்றார்.

மேலும், கொல்கத்தாவிலிருந்து ரசகுல்லா, ஹைதராபாத்திலிருந்து பிரியாணி, பெங்களூரிலிருந்து மைசூர்பாக், லக்னோவிலிருந்து கபாப், டெல்லியிலிருந்து பட்டர் சிக்கன் போன்ற உணவுகளை ஆர்டர் செய்ய இந்த ‘இன்டர்சிட்டி லெஜெண்ட்ஸ்’ திட்டம் உதவும் என்று அவருடைய சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தீபிந்தர் கோயல்

தீபிந்தர் கோயல்

தற்போது, இந்தச் சேவையை குருகிராம் மற்றும் தெற்கு டெல்லியில் வசிப்பவர்கள் மட்டுமே பெற முடியும். இதற்குக் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்துத்தான் இந்தியா முழுவதும் இந்தச் சேவை விரிவுபடுத்தப்படும் என்று ஜொமோட்டோ அறிவித்துள்ளது. குருகிராம் மற்றும் தெற்கு டெல்லியில் வசிப்பவர்கள் ஆர்டர் செய்ய வேண்டிய நகரங்களின் பட்டியலில் கொல்கத்தா, ஹைதராபாத், லக்னோ, ஜெய்ப்பூர், பெங்களூர், மதுரா, சென்னை, ஆக்ரா மற்றும் புவனேஸ்வர் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இந்தத் திட்டம் மூலம் ஆர்டர் செய்பவர்களுக்குக் குறிப்பிட்ட உணவகங்களில் புதிதாக உணவு தயார் செய்யப்பட்டு விமானம் மூலம் அனுப்பப்படும் என்றும் விமானப் பயணத்தின் போது உணவு பாதுகாப்பாக இருப்பதற்கு அதிநவீன குளிர்பதன தொழில்நுட்பம் கொண்ட பாக்ஸ்களில் அவை பேக் செய்யப்படும் என்றும் ஜொமோட்டோ தெரிவித்துள்ளது. இன்னும் சில வாரங்களில் இந்தச் சேவை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com