மதுரை, திண்டுக்கல், தேனி, கரூர், புதுக்கோட்டை, திருச்சி பெரம்பலூர் ஆகிய வருவாய் மாவட்டங்களை உள்ளடக்கியது ‘ரோட்டரி மாவட்டம் 3000.’
இந்த ரோட்டரி மாவட்டத்தில் முதல் பெண் ஆளுநராக, திண்டுக்கல்லை சேர்ந்த ஆனந்த ஜோதி தேர்வு செய்யப்பட்டுள்ளர். இவர், வருகிற ஜூலை 2-ம் தேதி பதவி ஏற்கிறார்.

மதுரை வந்திருந்தவர், ரோட்டரி ஹாலில் செய்தியாளர்களிடம் பேசும்போது, “ரோட்டரி மாவட்டத்தில் முதல் பெண் ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன். ரோட்டரி சங்கம் சமுதாயத்திற்குப் பல நல்ல திட்டங்களைச் செய்து வருகிறது.
குறிப்பாக போலியோ ஒழிப்பில் உலக சுகாதார அமைப்புடன் இணைந்து சேவை செய்துள்ளது. உலகிலேயே இரண்டு நாடுகளைத் தவிர வேறு எந்த நாட்டிலும் போலியோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோல் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் ரோட்டரி சங்கம், ஆதரவற்ற பெண்களுக்கு ஆட்டோ ஓட்ட கற்றுக் கொடுத்து, அவர்களுக்கு டிரைவிங் லைசென்ஸ் பெற்றுக் கொடுத்து, அதோடு இ-ஆட்டோ வழங்கி, எங்களது ரோட்டரி அமைப்புகள் மூலம் பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவர்களை சவாரி ஏற்றிச்செல்ல ஏற்பாடு செய்து, அவர்களின் வருமானத்தையும் வாழ்க்கை தரத்தையும் உயர்த்த உறுதுணையாக இருக்கும்.

2024-ம் ஆண்டுக்குள் நான்கு கோடி ரூபாய் மதிப்பில் ஒரு ரோட்டரி சங்கத்துக்கு ஒரு ஆட்டோ வீதம், 127 ஆட்டோக்களை ஆதரவற்ற ஏழைப் பெண்களுக்கு வழங்க உள்ளோம்.
பெண் குழந்தைகள் பயிலும் சுகாதார வசதி இல்லாத அரசுப் பள்ளியை கண்டெடுத்து கழிப்பறை கட்டிக் கொடுக்கவும் திட்டமிட்டுள்ளோம். வருடத்தின் 12 மாதமும் 12 திட்டங்கள் என 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளைச் செயல்படுத்த உள்ளோம்.
மதுரை லேடி டோக் கல்லூரியில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் நலனுக்காக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது’’ என்றார்.

மண்டல ஒருங்கிணைப்பாளர் அசோக், உதவி ஆளுநர் கௌசல்யா, ரோட்டரி மாவட்ட பப்ளிக் இமேஜ் சேர்மன் நெல்லை பாலு, மகிழ்ந்திரு, மகிழ்வித்திரு திட்ட ஒருங்கிணைப்பாளர் மாதவன் பிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்