
மதுரையில் தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வந்த கார் மீது பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சிலர் செருப்பு வீசிய சம்பவத்தில் ஐந்து பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரரின் இறுதி நிகழ்வுக்காக அமைச்சர் வந்தபோது அந்த இடத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அதன் பிறகு அமைச்சரின் வாகனத்தை நிறுத்தி பாரதிய ஜனதா கட்சியினர் போராடும் அளவுக்கு இந்த விவகாரம் தீவிரம் அடைந்ததது. என்ன நடந்தது மதுரையில்?
தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய ராணுவ வீரர் லட்சுமணன் ஜம்மு காஷ்மீரின் ரஜெளரியில் தீவிரவாதிகளுடனான சண்டையில் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் சொந்த ஊரான திருமங்கலம் அருகே உள்ள டி. புதுப்பட்டிக்கு கொண்டு செல்லப்படுவதற்காக விமானம் மூலம் மதுரை விமான நிலையத்துக்கு சனிக்கிழமை நண்பகலில் கொண்டு வரப்பட்டது.
அப்போது அங்கு அஞ்சலி செலுத்துவதற்காக மதுரையில் இருந்த தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் திமுக நிர்வாகிகள் சிலருடன் வந்திருந்தார். மறுபுறம் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் கே. அண்ணாமலை மற்றும் அவரது கட்சியினரும் வந்திருந்தனர்.
விமான நிலைய வளாகத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், நகர மேயர் இந்திராணி பொன்வசந்த், மதுரை விமான நிலைய இயக்குநர் பாபுராஜ், மதுரை காவல் ஆணையர் செந்தில் குமார் உள்ளிட்டோரும் விமான நிலையத்துக்கு வந்து லட்சுமணின் உடல் இடம்பெற்ற சவப்பெட்டிக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக, அரசு தரப்பில் சம்பிரதாய முறைப்படி லட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் நடைமுறை நடைபெற்றது. அதில் பாஜக நிர்வாகிகளும் மலர்வளையம் வைக்க விரும்புவதாக தெரிவித்தனர்.
பாஜகவினர் வாக்குவாதம்
ஆனால், அரசாங்க நிகழ்வு என்பதால் சம்பிரதாய நடைமுறை பட்டியலில் (ப்ரோட்டோகால் லிஸ்ட்) இடம்பெற்ற மிக முக்கிய பிரமுகர்கள், தலைவர்கள் மட்டுமே முதலில் அனுமதிக்கப்படுவர் என்று அதிகாரிகள் கூறியுள்ளதாகத் தெரிகிறது. அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜனும் இதே கருத்தை கூறியது அங்கிருந்த பாஜகவினர் காதில் விழுந்ததாகவும் அதைத்தொடர்ந்து அவர்கள் வாக்குவாதம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து அவர்களுடன் பேசுவதற்காகச் சென்ற அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை திமுகவினர் சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றனர்.
இதையடுத்து, விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட அமைச்சரின் கார் வெளியேவந்தபோது, சாலையில் இருந்த சில பாஜகவினர் அமைச்சருக்கு எதிராக குரல் எழுப்பினர். அதில் இருந்த சிலர் அமைச்சரின் வாகனம் மீது காலணிகளை வீசினர். அவரது காரை வழிமறிக்க முயன்ற சிலரை போலீஸார் அப்புறப்படுத்தினர்.
அப்போது அங்கிருந்த பாஜகவினர், ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்ற கோஷங்களை எழுப்பிய காட்சிகளை சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளி மூலம் பார்க்க முடிந்தது.
ஐந்து பேர் கைது
இந்த நிலையில், நடந்த சம்பவம் தொடர்பாக பாஜகவைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 506 (குற்றவியல் மிரட்டல்), 341 (முறையற்று தடுத்தல்), 355 (தாக்குதல் அல்லது குற்றம் இழைக்க பலத்தை பயன்படுத்துதல்) மற்றும் 34 (ஒரே நோக்குடன் பலர் கூட்டு சேருதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த பரபரப்புக்கு மத்தியில் விமான நிலையத்தில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்ட லட்சுமணனின் உடல், அவரது சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அரசியல் தலைவர்கள் கண்டனம்
இந்த நிலையில், அமைச்சரின் கார் மீது காலணி வீசிய சம்பவத்தை பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டித்துள்ளனர்.
கரூர் தொகுதி காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி கண்டித்துள்ளார். “அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை தாக்க முயன்ற தமிழக பாஜகவிற்கு கடுமையான கண்டனங்களை தெரிவிக்கிறேன். பாஜகவின் இந்த வன்முறை அரசியல் ஆபாசமானது. ஒரு மாநில அமைச்சரிடமே இவ்வளவு வன்முறையில் பாஜகவினர் ஈடுபடுவார்கள் என்றால் சாதாரண மக்களின் கதி என்ன? தமிழக அரசு பாஜகவின் இந்த வன்முறை அரசியலை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்,” என்று அவர் கூறியுள்ளார்.
அமைச்சரின் வாகனம் மீதான தாக்குதல் முயற்சி அநாகரிகமானது என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறியுள்ளார். பாஜகவினரின் இதுபோன்ற செயலை எதிர்க்க ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
காஷ்மீரில் என்ன நடந்தது?
மதுரையைச் சேர்ந்த தர்மராஜ், ஆண்டாள் தம்பதியின் இரட்டையர் பிள்ளைகளில் ஒருவரான லட்சுமணன், பி.காம் பட்டப்படிப்பு முடித்துள்ளார். 2019இல் அவர் இந்திய ராணுவத்தில் சேர்ந்தார்.
கடந்த வியாழக்கிழமை ஜம்மு காஷ்மீரின் ரஜெளரியில் இவர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது, அவர்கள் இருந்த சோதனைச் சாவடி மீது தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி விட்டு உள்ளே நுழைய முற்பட்டனர். அப்போது அவர்களுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அந்த சம்பவத்தில் மதுரையைச் சேர்ந்த லட்சுமணன், ராஜஸ்தானைச் சேர்ந்த சுபேதார் ராஜந்திர பிரசாத், ஹரியாணாவைச் சேர்ந்த மனோஜ் குமார் ஆகியோர் உயிரிவந்தனர். ஆறு வீரர்கள் காயம் அடைந்தனர்.
திமுக vs பாஜக: இரவோடு இரவாக ஸ்டாலின், உதயநிதி போஸ்டரை கிழித்த பாஜகவினர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: