பதின்ம வயதுச் சிறார்களின் உளவியல் சிக்கல்களில் முதன்மையானது தனிமை. அது டீன் பிள்ளைகளிடம் உருவாக்கும் சிக்கல்கள் பற்றி பெற்றோருக்கு எந்த விழிப்புணர்வும் எப்போதும் இருந்ததில்லை என்றே சொல்லலாம். பேயை வைத்து மூடநம்பிக்கை வளர்த்துப் பணம் பார்ப்பவர்கள் பெருகிக் கிடக்கும் தமிழ் சினிமாவில், ஒரு ஹாரர் த்ரில்லர் திரைப்படமாகக் கடந்த மே மாதம் வெளியாகி, வந்த சுவடே தெரியாமல்போனது ‘கீனோ’.
பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கு டீன் பருவத்தினருக்கும் விழிப்புணர்வு ஊட்டிய இப்படத்தில், ‘வெற்றிடம்’, ‘நெகடிவ் ஸ்பேஸ்’, ‘பாசிடிவ் மாடுலேட்டர்ஸ்’, ‘கீனோபோபியா’ என இதுவரை யாரும் கையாளாத மருத்துவ அறிவியல் விஷயங்களைத் திரட்டிக் கோத்து சமூக அக்கறையுடன் ‘கீனோ’ என்கிற ஹாரர் த்ரில்லர் திரைப்படத்தை எழுதி, இயக்கியிருந்தார் ஆர்.கே.திவாகர். இயக்குநர்கள் கதிர், மிஷ்கின் ஆகியோரிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவரான ஆர்.கே. திவாகர் எழுதி, இயக்கியதுடன், ஒரு ஹாரர் த்ரில்லர் படத்துக்கான இசையையும் வழங்கியிருந்தார். ஜி.சி.சி. நிறுவனத்தின் சார்பில் கிருத்திகா காந்தி தயாரித்திருந்தார்.
உயர்தரமான ‘மேக்கிங்’ உடன் வெளியான இப்படத்தில் முற்றிலும் புதுமுக நடித்ததாலோ என்னவோ திரையரங்குகளில் வெளியானபோது கவனம் பெறாமல் தற்போது இப்படத்தைத் தற்போது தேடிப் பிடித்துக் காணும் பார்வையாளர்கள், சர்வதேசத் திரைப்படத் தரவுத் தளத்தில் (IMDB) ‘கீனோ’வுக்கு 10க்கு 9.2 மதிப்பெண்கள் வழங்கி கௌரவம் செய்திருக்கிறார்கள்.
ஹாரர் த்ரில்லர் வகையில் இதுவரை வெளியான தமிழ்ப் படங்களில், 1948 இல் வெளிவந்த ஏவிஎம்மின் ‘வேதாள உலகம்’ முதல் ‘கீனோ’ படம் வரை 166 படங்கள் இத்தளத்தின் பயன்பாட்டாளர்களிடம் மதிப்பெண்களைப் பெற்றுள்ளன. அவற்றில்
1941இல் வெளிவந்த ‘சாவித்ரி’, 1944இல் வெளிவந்த ‘பர்மா ராணி’, 1950ல் வெளிவந்த ‘திகம்பர சாமியார்’, 1954இல் வெளிவந்த ‘அந்த நாள்’ போன்ற பழைய கறுப்பு வெள்ளைப் படங்கள் தொடங்கி, ‘கீனோ’ வரை 50க்கும் அதிகமான ஹாரர் த்ரில்லர் படங்கள் மதிப்பெண்களைப் பெற்றுள்ளன. இவற்றில் ‘கீனோ’ ஒரு முக்கிய சமூகப் பிரச்சினையைக் கையாண்டிருந்தபோதும் அதைப் பார்வையாளர்கள் மதித்து மதிப்பெண் தந்துள்ளது தமிழ் ரசனை, தேர்ச்சிக்கும் பெயர்பெற்றது என்பதை எடுத்துக்காட்டுகிறது.