கர்நாடக மாநிலத்தில், காங்கிரஸ் ஆட்சி அமைந்தபின், பா.ஜ.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இந்துத்துவா கொள்கை அடிப்படையிலான, மதமாற்ற தடைச்சட்டம் ரத்து, பள்ளிப் பாடப் புத்தகங்களில், ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் கேசவ் பலிராம் ஹெட்கேவர், சாவர்க்கர் உள்ளிட்ட வலதுசாரி சிந்தாந்தம் தொடர்புடையவர்களின் பாடங்கள் ‘கட்’ என, அரசியல் களத்தில் அனலைக் கிளப்பும் வகையில், பல அதிரடி ஆட்டங்களை நிகழ்த்தி வருகிறது காங்கிரஸ் அரசு.
இப்படியான நிலையில், இன்று மதியம், மதக்கலவரங்களில் மரணித்த இஸ்லாமிய மக்களுக்கு காங்கிரஸ் அரசு, தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கியிருப்பது, அரசியல் களத்தில் பேசுபொருளாகியிருக்கிறது.
சிறுப்பான்மை மக்கள் ஐவருக்கு…
கடந்த மார்ச் மாதம் மாண்டியா மாவட்டத்தில், ‘பசு பாதுகாப்புக் குழு’ என்ற பெயரில் இயங்கிய இந்து அமைப்பைச் சேர்ந்தவர்களால், இஸ்லாமிய இளைஞர் இத்ரீஸ் பாஷா கடுமையாக துன்புறத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இதேபோல், பா.ஜ.க ஆட்சி முழுவதிலும், பல்வேறு காலகட்டங்களில், பல மாவட்டங்களில் மதக்கலவரங்களால் கொலைசெய்யப்பட்ட, மசூத், முகமது ஃபாசில், அப்துல் ஜலீல், சபீர் சுபான்; மங்களூரு நகரில் இஸ்லாமிய வகுப்பினர்களால் கொலைசெய்யப்பட்ட பா.ஜ.க நிர்வாகி தீபக் ராவ் ஆகிய 6 பேரின் குடும்பங்களுக்கு, தலா ரூ.25 லட்சம் நிவாரண நிதியை முதல்வர் சித்தராமையா இன்று பெங்களூரில் வழங்கினார்.