பட மூலாதாரம், Getty Images
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. சனிக்கிழமை ஏற்பட்ட கலவரத்தில், இம்பால் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள சில எம்எல்ஏ மற்றும் அமைச்சர்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. வாகனங்கள் எரியூட்டப்பட்டன.
”இம்பாலில், கோபமடைந்த சில போராட்டக்காரர்கள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ உட்பட சில மக்கள் பிரதிநிதிகளின் வீடுகள் மற்றும் உடமைகள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தினர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவல்துறை கண்ணீர் புகைக்குண்டுகளை பயன்படுத்தினர்” என்று மணிப்பூர் போலீசார் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர்.
காவல்துறையின் இந்த நடவடிக்கையின் போது எட்டு நபர்கள் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து, உள்ளூர் நிர்வாகம் இம்பால் உட்பட பல இடங்களில் ஊரடங்கை அமல்படுத்தியது. இதுமட்டுமின்றி, சில இடங்களில் இணையச் சேவையும் தடைச் செய்யப்பட்டது.
பி.டி.ஐ செய்தி முகமையின் கூற்றுபடி, மாநிலத்தின் ஆறு காவல் நிலையப் பகுதிகளில் இருந்து AFSPA சட்டத்தை(ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டம்) நீக்க வேண்டும் என்று மணிப்பூர் அரசு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.
வன்முறை நிகழும் பகுதிகளில் அமைதியை நிலைநாட்ட ஆயுதப்படைக்கு சிறப்பு அதிகாரத்தை ‘ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்’ கொடுக்கிறது. இந்தச் சட்டத்தின் அடிப்படையில், ஆயுதப்படை ஐந்து அல்லது அதற்கு அதிகமான மக்கள் கூடுவதை தடுக்க முடியும்.
ஒரு நபர் சட்டத்தை மீறுவதாக ஆயுதப் படைக் கருதினால், எச்சரிக்கைக் கொடுத்தப் பின் அவர் மீது தாக்குதல் நடத்தலாம். அந்த நபர் மீது துப்பாக்கிச்சூடும் நடத்தலாம்.
இந்த AFSPA சட்டம், ஆயுதப்படைக்கு சந்தேகத்தின் அடிப்படையில் எந்த நபரை வேண்டுமானாலும் கைது செய்யவும், வாரண்ட் இன்றி எந்த இடங்களை வேண்டுமானாலும் சோதனைச் செய்யும் அதிகாரம் கொடுத்துள்ளது.
பட மூலாதாரம், Getty Images
எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்களின் வீடுகள் தாக்கப்பட்டன
இம்பாலில் கலவரம் நடந்த பிறகு பல இடங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது
மணிப்பூர் சட்டமன்றத்தின் உறுப்பினராக உள்ள தேசிய மக்கள் கட்சியின் நுரல் ஹாசன், பிபிசியிடம் கூறுகையில், ”மாலை 4 மணியளவில் 100 முதல் 150 நபர்கள் கொண்ட மக்கள் படை எனது வீட்டிற்கு வந்தனர். நான் டெல்லிக்கு வந்துள்ளதால் அங்குள்ள சில நபர்களுடன் செல்போன் வாயிலாக பேசினேன் ”
“அவர்கள் தற்போது உள்ள எம்.எல்.ஏ மற்றும் அமைச்சர்களால் மணிப்பூரில் நிகழும் இந்த கலவரத்தை கையாள முடியவில்லை, அதனால் அந்த மக்கள் அவர்களைப் பதவி விலக கோரிக்கை வைக்கின்றனர். நான் அந்த மக்களின் அனைத்து கோரிக்கைகளையும் ஏற்கிறேன். அதனால் அவர்கள் என் வீட்டை சேதப்படுத்தாமல் திரும்பி சென்றனர். நான் மக்கள் கூறும் எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருப்பதாக அவர்களிடம் கூறினேன்” என்றார்
இந்நிலையில், சுயேட்சை எம்.எல்.ஏ நிஷிகாந்த் சிங்கின் வீடு பல நபர்கள் அடங்கிய ஒரு குழுவால் தாக்கப்பட்டுள்ளது. அவரது வீட்டின் வாயில் முன் இருந்த பாதுகாப்பு அறை முற்றிலுமாக சேதப்படுத்தப்பட்டுள்ளது
எம்எல்ஏ ஆர்.கே இமோ வீட்டிலிருந்த மரச்சாமன்கள் உட்பட பல பொருட்களை அதே கும்பல் எரித்து சேதப்படுத்தியது.
இம்பால் பள்ளத்தாக்கு மெய்தேய் மக்கள் அதிகம் வாழும் பகுதி.
பாதுகாப்புக் காரணங்களுக்காக மணிப்பூர் தலைநகர் இம்பாலின் புறநகர் பகுதிகளில் ராணுவம் மற்றும் அசாம் ரைப்பிள்ஸ் படை குவிக்கப்பட்டுள்ளன.
சனிக்கிழமை நடந்த கலவரத்திற்கு பிறகு, 23 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காவல்துறையினர் சில ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
இம்பால் நகரில் மறு உத்தரவு வரும் வரை ஊரடங்கு அமலில் இருக்கும் மற்றும் இரண்டு நாட்களுக்கு இணையச் சேவை தடைச் செய்யப்படும் என மணிப்பூர் காவல்துறை எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது.
பிடிஐ செய்தி முகமை வெளியிட்ட செய்தியின் படி, மணிப்பூர் கலவரத்திற்கு பிறகு, அருகில் உள்ள மாநிலமான மிசோரம் மாநிலத்தில் கலவரம் வெடிக்காமல் இருக்கச் சிறப்பு முன்னேற்பாடு நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சமீப நாட்களில் என்ன நடந்தது?
பட மூலாதாரம், ANI
நவம்பர் 7 அன்று, மாநிலத்தின் ஜிரிபாம் பகுதியில் ஆயுதங்களுடன் இருந்த வன்முறையாளர்கள், குகிபழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை சுட்டு கொன்றனர். மேலும் அவருடைய வீடோடு சேர்த்து அவரது சடலத்தையும் எரித்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு, ஜிரிபாம் பகுதியில் கலவரங்கள் வெடித்தன.
நவம்பர் 11-ஆம் தேதி, ஜிரிபாம் மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் மற்றும் வன்முறையாளர்களுக்கு இடையே என்கவுன்டர் நடந்ததாகக் கூறப்படுகிறது
“ஜிரிபாம் மாவட்டத்தின் சகுரடோர் பகுதியில் உள்ள சிஆர்பிஎஃப் தளத்தின் மீது ஆயுதமேந்திய வன்முறையாளர்கள் தாக்குதல் நடத்தினர். அதன்பிறகு பாதுகாப்புப் படையினர் உடனடியாக பதிலடி கொடுத்தனர்.
40 நிமிடத்திற்கு நீடித்த துப்பாக்கிச் சூடு முடிவுக்கு வந்த உடன், ஆயுதமேந்திய 10 வன்முறையாளர்களின் உடல்கள் கைப்பற்றப்பட்டதைக் காவல்துறை உறுதிச் செய்துள்ளது. இந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் பழங்குடியின இளைஞர்கள் ” என்று மணிப்பூர் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
பிடிஐ செய்தி முகமை வெளியிட்ட செய்தியின் படி, இந்த சம்பவத்திற்கு பிறகு, ஜிரிபாம் மாவட்டத்தில் அமைதியை நிலைநாட்ட காலவரையற்ற ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது.
இந்த என்கவுன்டர் சம்பவதிற்கு பிறகு, போரபேகரா காவல் நிலையம் அருகில் இருந்த நிவாரண முகாமிலிருந்து மெய்தேய் இனத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு நபர்களை காணவில்லை.
மெய்தேய் இன மக்கள் அவர்கள் ஆயுதமேந்திய வன்முறையாளர்களால் கடத்தப்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர்.
இந்தச் சம்பவத்திற்கு பிறகு இந்த மக்களிடையே கடும் கோபம் நிலவி வருகிறது. மேலும் இம்பால் முழுவதும் பெண்கள் போராட்டத்தில் குதித்தனர்.
அதேசமயம் 5 நாட்கள் கழித்து வெள்ளிக்கிழமை அன்று, நிவாரண முகாமிலிருந்து 20 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள ஜிரிமுக் கிராமத்தின் அருகே ஆற்றில் ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் உட்பட மூன்று சடலங்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன. இதன் பிறகு இம்பாலில் ஒரு புதிய வன்முறை சூழல் உருவானது.
உடற்கூறாய்வு செய்து முடிக்கும் வரை, இந்த சடலங்கள் காணாமல் போன நபர்கள் உடையதா என உறுதியாகக் கூற இயலாது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
எனினும், உள்ளூர் ஊடகங்கள் இது காணாமல் போன நபர்களின் சடலங்கள் எனக் கூறுகின்றன.
பட மூலாதாரம், Getty Images
மணிப்பூரில் சமீபத்தில் நிலவும் பதற்றத்தின் அடிப்படையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது
மாநிலத்தில் நிலவும் அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு, இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு, பிஷ்னுப்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இணைய சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூரில் அமைதி மற்றும் சட்டத்தை நிலைநாட்ட பாதுகாப்பு அமைப்புகள் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது என மத்திய அரசின் Press Information Bureau (PIB) வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
மணிப்பூர் ஏன் வன்முறையின் பிடியில் உள்ளது?
மாநிலத்தின் செல்வாக்கு மிக்க மெய்தேய் சமூகத்தினருக்கு பட்டியல் பழங்குடி அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையே இந்த வன்முறைக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
இதற்கு மணிப்பூரின் மலைப் பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்கள், முக்கியமாக குகி பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த வன்முறையில் ஏராளமானோர் உயிரிழந்ததுடன், ஏராளமான மக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சம் புகுந்தனர். வன்முறை காரணமாக மாநிலத்தில் பொது மற்றும் தனியார் சொத்துக்களும் சேதமடைந்துள்ளன.
இதனால் மணிப்பூரில் வசிக்கும் நாட்டின் பிற பகுதிகளை சேர்ந்த மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டது, வன்முறைக்குப் பிறகு, நூற்றுக்கணக்கான மாணவர்கள் மணிப்பூரை விட்டு வெளியேற வேண்டியிருந்தது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு