ஸ்லெட்ஜிங்கின் வாயிலாக எதிராளியின் கவனத்தைச் சிதறடிப்பது ஆஸ்திரேலியாவுக்கு கைவந்த கலை. அதிலும் பெய்ன் அதனை அடிக்கடி செய்யக்கூடியவர். வார்த்தைகளை விட்டு வாங்கிக் கட்டிக் கொள்வதும் அவருக்கு புதிதல்ல. 2018/19 தொடரில் பண்டுக்கும் அவருக்குமான உரையாடல்கள் ஸ்டம்ப் மைக்கையும் மதிமயங்கி சிரிக்க வைத்திருக்கும்.
தொடர்ச்சியாக பண்டை சீண்டிக் கொண்டே இருந்த பெய்ன், “எனது குழந்தைகளுக்கு பேபி சிட்டிங் செய்ய முடியுமா, நானும் எனது மனைவியும் படத்திற்குச் செல்ல வேண்டும்” என்று வம்பிழுத்தார். போட்டிக்குப் பின்னதாக அவரது குழந்தைகளோடு பண்ட் பேபி சிட்டராக எடுத்த புகைப்படங்கள் ரசிகர்களைக் கவர்ந்தாலும் களத்திற்கு உள்ளே பண்ட் அவர் பேட்டிங் செய்கையில் கொடுத்த பதிலடிதான் ஹைலைட். “தற்காலிக கேப்டன் இவர், பேசுவது மட்டுமே இவருக்குத் தெரிந்த ஒன்று, நாள் முழுவதும் கூட பேசிக் கொண்டே இருப்பார்” என பெய்னைக் கேலி செய்தார்.
சிராஜ் – ஆஸ்திரேலிய பார்வையாளர்கள்:
2020/21 சீசனில் அறிமுகத் தொடரிலேயே ரெட் பாலில் தனது வித்தைகளை சிராஜ் காட்டியிருந்தார். புதுமுக வீரரென்ற சுவடே தெரியாத அளவு ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களைத் திணறடித்தார். இதைப் பார்க்க பொறுக்காத இனவெறி பிடித்த சில ஆஸ்திரேலிய பார்வையாளர்கள் அவரை இனப்பாகுபாடு காட்டி இழிவான வார்த்தைகளால் கிண்டல் செய்தனர். பாதுகாக்கும் அரணாக கோலியும் இல்லாத நிலையில் இது சிராஜையும் மற்ற இந்திய வீரர்களைக் காயப்படுத்தியது.
‘ஜென்டில்மேன் கேம்’ என்ற பெயரில் கேலிகளை பொறுத்துப் பழகிய இந்திய வீரர்கள் சமயத்தில் திருப்பிக் கொடுக்கவும் செய்திருக்கின்றனர். ரவி சாஸ்திரி இதைப்பற்றி ஒருமுறை, “ஆஸ்திரேலியர்களுக்கு எதிராக ஆடும்போது அவர்களுக்கு இணையான Attitude-ஐ காட்டுவது மிக முக்கியம். அதனால்தான் நான் எனது வீரர்களிடம் அவர்கள் ஒன்றாகக் கொடுத்தால் நீங்கள் அதனை மூன்று மடங்காகத் திருப்பிக் கொடுங்கள் என்று கூறியிருக்கிறேன்” என்றார். மொத்தத்தில் பந்துக்கும் பேட்டுக்குமான மோதல்தான் என்றாலும் ‘Butterfly Effect’ போல இத்தகைய சின்ன சின்ன சீண்டல்களும் நிகழ்வுகளும் போட்டி முழுவதிலும் சங்கிலித் தொடராக வியாபித்து அதனைக் கட்டுப்படுத்தி எதிர்பாராத திசையில்கூட பயணிக்க வைக்கும்.