அடுத்து பேசிய உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியனின் உரை, நிகழ்ச்சியின் மகுடமாகவே அமைந்தது. “ ‘மகுடம் மறுத்த மன்னன்’ என்ற தலைப்பில் இந்த புத்தகத்தை எழுதியிருப்பது ஆச்சர்யமல்ல. ராமன் என்றாலே அவர் மகுடம் மறுத்த மன்னனாகத்தான் இருப்பார், அல்லது மகுடம் மறுக்கப்பட்டவராகவும் இருக்கலாம். தந்தை குறித்த புத்தகத்தை மகன் எழுதி, தன் சகோதரர்களுடன் மேடையில் அமர்ந்திருக்க, தாயார் அந்த நூலைப் பெற்றுக்கொள்வதென்பது யாருக்கு வாய்க்கும்?” என்றவர் தொடர்ந்து, “என்ன, இந்த நூல் 30 ஆண்டுகள் தாமதமாக வருகிறது.. சரி… வாய்தா போடாமல் வழக்கறிஞர்களால் எதையும் செய்ய முடியாதுதான்” என்று சொன்னபோது அரங்கம் அமைதிக்குத் திரும்ப சில நிமிடங்கள் எடுத்தது.
தொடர்ந்து, “ஒரு மனிதனின் வாழ்க்கை எப்படிப்பட்டது என்பதை அவர் வாழ்க்கை வரலாற்றை படித்துத் தெரிந்துகொள்வதைவிட, எத்தனை பெரிய மனிதர்களின் வாழ்க்கை வரலாற்றில் அவர் பெயர் இருக்கும் என்றும் பார்க்கலாம். வி.பி.ராமனின் பெயர், அப்படி பலரது வாழ்க்கை வரலாற்றிலும் இருக்கும். கண்ணதாசன் தன் வாழ்க்கை வரலாறான வனவாசத்தில், வி.பி.ராமனுக்கு தான் கடமைபட்டிருப்பதைக் குறிப்பிட்டிருப்பார். வழக்கறிஞராக மட்டுமல்லாது அரசியல், சினிமா, இசை, எழுத்து, கற்பித்தல், நடிப்பு என அனைத்து துறைகளிலும் திறமை கொண்டிருந்தார்” என்று புகழாரம் சூட்டினார் நீதிபதி வி.ராமசுப்பிரமணியன்.
நிகழ்ச்சியில் நீதித்துறை, திரைத்துறை, அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த வி.ஐ.பி-க்கள் பலரும் கலந்துகொண்டனர்.