மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் ஹஸ்ரத் சாத்பீர் சயீத் பாபா என்ற தர்கா இருந்தது. இத்தர்கா சட்டவிரோதமானது என்று மும்பை உயர் நீதிமன்றம் கடந்த மாதம் 12ம் தேதி தெரிவித்து இருந்தது.
இதையடுத்து தர்காவை இடிக்கக் கடந்த ஒன்றாம் தேதி நாசிக் மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது. தர்கா நிர்வாகம் தாங்களாகவே இரண்டு வாரத்திற்குள் இடிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி தர்கா நிர்வாகம் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. ஆனால் அம்மனுவை மும்பை உயர் நீதிமன்றம் விசாரிக்காமல் இழுத்தடித்து வந்தது.
ஏப்ரல் 7ம் தேதி இம்மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அதனை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் நேரம் ஒதுக்கவில்லை.
கட்டிடங்களை இடிப்பது தொடர்பான மனுக்களாக இருந்தால் அதனை அவசர மனுவாக எடுத்துக்கொண்டு விசாரிக்க வேண்டும்.

ஆனால் உயர் நீதிமன்றம் விசாரிக்கவில்லை. இதையடுத்து தர்கா நிர்வாகம் அவசரமாக சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தது. இம்மனு சுப்ரீம் கோர்ட்டில் அடுத்த நாள் விசாரணைக்கு வருகிறது என்பதை முன்கூட்டியே தெரிந்து கொண்ட மாநகராட்சி நிர்வாகம் செவ்வாய்க் கிழமை நள்ளிரவில் திடீரென புல்டோசருடன் சென்று தர்காவை இடிக்க ஆரம்பித்தது.
இது குறித்துக் கேள்விப்பட்ட அப்பகுதி மக்கள் ஓடி வந்து தர்காவை இடிப்பதைத் தடுக்க முயன்றனர்.
ஏற்கனவே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தர்கா இடிக்கப்படுவதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் கல் வீசித்தாக்கினர். இதில் 20 பேர் காயம் அடைந்தனர்.
இதையடுத்து சிறார்கள் உட்பட 30 பேர் கைது செய்யப்பட்டனர். அதிகாலை 6 மணிக்குள் தர்கா முற்றிலும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
கொலை, கொலை முயற்சி, பொதுச் சொத்துக்குச் சேதம் ஏற்படுத்தியது தொடர்பாக 1400 பேர் மீது வழக்குப்பதிவு செய்திருப்பதாக நாசிக் போலீஸ் கமிஷனர் சந்தீப் தெரிவித்தார்.
தர்கா இடிக்கப்படுவது குறித்து சமூக வலைத்தளத்தில் செய்தியைப் பரப்பியவர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.