சென்னை: போதைப்பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க வலியுறுத்தி வரும் 30ம் தேதி மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் சென்னை, திருவண்ணாமலை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் 2021ம் ஆண்டு ஜூலை மாதத்தில் நடந்த ஆய்வில் 9% மாணவர்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாகியிருப்பது தெரியவந்துள்ளது. நடப்பாண்டில் நடத்தப்பட்ட இன்னொரு ஆய்வில் இந்த எண்ணிக்கை 10 விழுக்காட்டை தாண்டியிருப்பது உறுதியாகியிருக்கிறது. மாணவர்கள் போதைக்கு அடிமையாவதற்கான முதன்மையான காரணங்களில் ஒன்று போதைப் பொருட்கள் மிகவும் எளிதாக கிடைப்பது தான் என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
தமிழ்நாட்டில் கல்வி நிறுவனப் பகுதிகளில்தான் போதைப்பொருள் அதிகம் விற்பனையாகிறது. படிப்புக்காக வீடுகளை விட்டு வந்து விடுதிகளிலும், தனியாக அறை எடுத்தும் தங்கியுள்ள இளைஞர்கள் எளிதாக போதைப்பழக்கத்திற்கு அடிமையாகின்றனர். எனவே, தமிழ்நாட்டில் குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் விற்பனையை முற்றிலுமாக ஒழிக்க வலியுறுத்தி வரும் 30ம் தேதி சனிக்கிழமை காலை 11 மணிக்கு தமிழ்நாடு முழுவதும் அனைத்து வருவாய் மாவட்ட தலைநகரங்களிலும் பாமக சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்பட உள்ளது. சென்னையில் நடைபெற இருக்கும் போராட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி தலைமையேற்பார். மாவட்ட தலைநகரங்களில் நடைபெற உள்ள போராட்டங்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாநில, மாவட்ட நிர்வாகிகள் தலைமையேற்பார்கள். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
மரம் வளர்த்தால் இலவச மின்சாரம்: ஜார்க்கண்ட் மாநிலத்தின் நகர்ப்புறங்களில் உள்ள வீடுகளில் வளர்க்கப்படும் ஒவ்வொரு மரத்திற்கும் 5 அலகுகள் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்ற திட்டம் தமிழகமும் பின்பற்ற வேண்டிய திட்டம் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.