சென்னை: பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்வானதை தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அதிமுக தெரியப்படுத்தியது. அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக இருந்த எடப்பாடி பழனிசாமியை நிரந்தர பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவதற்காக அதிமுகவில் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்பட்டது. அந்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமி மட்டுமே போட்டியிட்டார். இபிஎஸ் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ததால் போட்டியின்றி அதிமுக பொதுச் செயலாளராக தேர்வானார். பொதுச்செயலாளர் தேர்வு ஆனதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் ஆணையர்கள் நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினர்.
அதிமுக பொதுச்செயலாளராக தேர்வான எடப்பாடி பழனிசாமிக்கு கட்சி நிர்வாகிகள், பல்வேறு கட்சி தலைவர்கள் என பலர் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையம், தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் ஆவணங்கள் அளிக்கப்பட்டன. எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச்செயலாளராக அங்கீகரிக்குமாறு அதிமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்வானதை தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அதிமுக தெரியப்படுத்தியது.