பொதுக்குழு முறையாக நடைபெறும்; அதற்காக அறிவிப்பு விரைவில் வெளிவரும்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

Share

சென்னை: பொதுக்குழு முறையாக நடைபெறும்; அதற்காக அறிவிப்பு விரைவில் வெளிவரும் என  அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக பல்வேறு அணிகளாக உடைந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியினர் செயல்பட்டு வருகிறார்கள். அதிமுக கட்சி தலைமை அலுவலகம், அதிமுக தலைமை கழக முக்கிய நிர்வாகிகள், அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவுடன் இந்த அணி முன்னணி வகிக்கிறது. அதேநேரம், தமிழகம் முழுவதும் தொண்டர்கள் ஆதரவு தனக்குத்தான் உள்ளது என்று ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியினர் செயல்பட்டு வருகின்றனர்.

இந்த அணியினரும், எடப்பாடி பழனிசாமிக்கு சவால் விடும் வகையில், தமிழகம் முழுவதும் புதிதாக மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை நியமித்து தங்களது பலத்தை நிரூபித்து வருகிறார்கள். அதேநேரம் சசிகலாவும், நான்தான் அதிமுக பொதுச்செயலாளர் என்று கூறி வருவதுடன், கட்சியை ஒருங்கிணைக்க அனைத்து முயற்சிகளும் எடுத்து வருவதாக கூறுகிறார். டி.டி.வி.தினகரன் அமமுக கட்சி என்று தனியாக கட்சி ஆரம்பித்து செயல்பட்டாலும், அதிமுகவை கைப்பற்ற சில முயற்சிகளை எடுத்து வருகிறார். இப்படி அதிமுக 4 அணிகளாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி அணியினர் சில மாதங்களுக்கு முன் அதிமுக பொதுக்குழுவை கூட்டி, இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடியை அறிவித்தனர்.

அதிமுக கட்சியில் இருந்தும், பொறுப்புகளில் இருந்தும் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களை நீக்கினர். இதற்கு பதிலடியாக, ஓ.பன்னீர்செல்வம் நான்தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக தொடர்கிறேன் என்று கூறி எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கினார். அதேநேரம், அதிமுகவை கைப்பற்ற ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றம், இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளார். இது தொடர்பான விசாரணை இன்னும் நிலுவையில் உள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில்தான், எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு எதிராக போட்டி பொதுக்குழுவை கூட்ட ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளார்.

இதற்கான முன்னேற்பாடுகளை செய்வதற்காக சென்னையில் இன்று ஓபிஎஸ் அணியினர் தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அதிமுக அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெறும் என்று அறிவித்தனர். அதன்படி, பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில், ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு வேப்பேரியில் உள்ள ஒய்எம்சிஏ மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கு.ப.கிருஷ்ணன், ஜே.சி.டி.பிரபாகர், எம்எல்ஏ மனோஜ் பாண்டியன், பெங்களூர் புகழேந்தி, முன்னாள் எம்எல்ஏ ராஜலட்சுமி மற்றும் 88 மாவட்ட செயலாளர்கள், 100 தலைமை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓ.பன்னீர்செல்வம்; தொண்டர்கள், பொதுமக்கள் அனைவரும் எங்களுடன் தான் உள்ளனர். உச்சநீதிமன்ற தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக அமையும்; இரட்டை இலையும் கட்சியும் எங்களிடம் தான் இருக்கும். பொதுக்குழு முறையாக நடைபெறும். அதற்காக அறிவிப்பு விரைவில் வெளிவரும். ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் அதிமுகவை கேவலப்படுத்துகிறார்கள். இறுதி வெற்றி எங்களுக்கு தான்; இணைய கூடாது என்ற எண்ணம் ஈபிஎஸ்-க்கு மட்டும் தான் உள்ளது. அதிமுகவை காப்பற்ற நினைப்பவர்களுடன் இணைந்து செயல்படுவோம்.

மக்கள் துரோகிகளை துரத்தி அடிப்பார்கள். எடப்பாடி பழனிசாமிக்கு தைரியமிருந்தால் தனிக்கட்சி தொடங்கி நடத்தி பார்க்கட்டும். பொதுக்குழுவுக்கு நான் வரக்கூடாது என்பதற்காக சதித்திட்டங்கள் தீட்டப்பட்டன. தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்ட வரவு செலவு கணக்கு, நான் பொருளாளராக இருந்தபோது கொடுத்தது. நாடாளுமன்ற தேர்தலில் எங்கள் தலைமையில் தான் கூட்டணி அமையும். தேர்தல் ஆணையமும், நீதிமன்றமும் எங்களுக்கு தான் இரட்டை இலை சின்னத்தை வழங்கும். ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டிய தருணம் இது. நாடாளுமன்ற தேர்தலில் எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் முடிவெடுக்கப்படும் இவ்வாறு கூறினார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com