பாகிஸ்தான் எல்லையில் குஜராத் இருக்கிறது. இதனால் அடிக்கடி பாகிஸ்தானில் இருந்து குஜராத்திற்கு போதைப்பொருள் கடத்தி வரப்படுவது வழக்கம். இதனால் கடற்பகுதியில் இந்திய கடற்படை கப்பல்கள் அதிக அளவில் ரோந்துப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. குஜராத்தை சேர்ந்த ஒருவர் பாகிஸ்தான் கடற்படை அதிகாரி அல்லது ஐ.எஸ்.ஐ.க்கு வாட்ஸ் ஆப் மூலம் இந்திய கடற்படை ரகசியங்களை அனுப்புவதாக குஜராத் தீவிரவாத தடுப்பு படைக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் தீவிரவாத தடுப்பு படையினர் நடத்திய விசாரணையில் ஓகா என்ற இடத்தை சேர்ந்த திபேஷ் கோஹில் என்பவர் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் விசாரணை நடத்திய போது ஓகா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள கடற்படை கப்பல்கள் பற்றிய விவரங்களை சேகரித்து பாகிஸ்தான் கடற்படை அதிகாரி சஹிமா என்ற பெண்ணிற்கு அனுப்பி இருந்தார். இத்தகவல்களை அனுப்புவதற்காக திபேஷ் தினமும் ரூ.200 சம்பளமாக பெற்றுள்ளார். திபேஷிற்கு வங்கிக்கணக்கு கிடையாது. இதனால் தனது நண்பரிடம் சொல்லி அவரது வங்கிக்கணக்கிற்கு பணத்தை வரவைத்து வாங்கி இருப்பதாக தீவிரவாத தடுப்பு படை அதிகாரி சித்தார்த் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,” இருவருக்கும் இடையே பேஸ்புக் மூலம் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு அறிமுகம் ஏற்பட்டுள்ளது. நண்பரிடம் வெல்டிங் செய்த பணம் என்று கூறி நண்பர் வங்கிக்கணக்கிற்கு பாகிஸ்தானில் இருந்து பணத்தை வரவைத்துள்ளார். திபேஷ் ஓகா துறைமுகத்தில் வெல்டிங் செய்யும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இதனால் எந்த கப்பல் வருகிறது என்ற விபரங்கள் அவருக்குத் தெரியும். அதனை வீடியோ எடுத்து பாகிஸ்தானுக்கு அனுப்பி இருந்தார். இது வரை பாகிஸ்தான் கடற்படை அதிகாரியிடமிருந்து ரூ.42 ஆயிரம் பெற்று இருப்பது தெரிய வந்துள்ளது. பாகிஸ்தான் அதிகாரி யார் என்றும் அடையாளம் காணப்படவில்லை”என்று தெரிவித்தார்.