ஒரு கிராமத்துக்கு வெளியே இருந்த கிணற்றில் விழுந்து அடிக்கடி சிலர் தற்கொலை செய்துகொண்டார்கள். அதனால் உள்ளூர்க் காரர்கள் அந்தக் கிணற்றுத் தண்ணீரை பயன்படுத்துவதே இல்லை. ராத்திரி நேரங்களில் அந்தக் கிணற்றில் ஆவிகள் அழுதுபுலம்பும் சத்தம் கேட்பதாக பேச்சு உண்டு. அதனால் இரவு நேரங்களில் அந்தக் கிணற்றின் பக்கம் ஊர் மக்கள் யாரும் செல்வது இல்லை. இதை நம்பாமல் பகலில் அந்தக் கிணற்றில் குளித்த ஒருவன், சில வாரத்திலேயே எதிர்பாராதவிதமாக மரணத்தை தழுவினான். அதனால் அந்த ஊர் மக்களைப் பொறுத்தவரை அந்தக் கிணறு என்பது பேய்களின் கல்லறை.

இப்படிப்பட்ட நேரத்தில் இரண்டு நண்பர்கள் அந்தக் கிராமத்துக்கு புடவை வியாபாரம் செய்வதற்கு வந்தார்கள். வரும் வழியில் கிணற்றைப் பார்த்ததும் அவர்களுக்கு குளிக்கும் ஆசை வந்தது. இருவரும் உள்ளே இறங்கி சந்தோஷமாகக் குளித்து முடித்து வெளியே வந்தார்கள். கிணற்றை சுற்றி நின்று ஊர் மக்கள் ஆச்சர்யமாகப் பார்ப்பதைக் கண்டு நண்பர்கள் திகைத்தார்கள், காரணம் கேட்டார்கள். அப்போதுதான் பேய் விவகாரம் அவர்களுக்குத் தெரியவந்தது.
இருவரும் அதிர்ச்சி அடைந்தாலும் ஒருவன் உடனே சுதாரித்துக்கொண்டான். கிணற்றில் பேய் இருக்கிறது என்றால், உள்ளே குளித்ததும் என்னை பிடித்திருக்க வேண்டும், அப்படியெதுவும் நடக்கவில்லை என்று சிரித்தபடி சொன்னான். வேண்டுமென்றால் நான் இந்த ஊரிலேயே சில நாள்கள் தங்குகிறேன், எனக்கு எதுவும் நடக்கவில்லை என்பதைத் தெரிந்துகொண்டு நீங்களும் பேய் இல்லை என்ற முடிவுக்கு வாருங்கள் என்று சொன்னான்.
இன்னொரு நண்பனால் பேய் விவகாரத்தை அத்தனை எளிதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. தேவையில்லாமல் ஆவியின் கோபத்துக்கு ஆளாகக்கூடாது என்று பயந்தான். உடனடியாக ஊருக்குத் திரும்பி ஆவியின் கோபத்தில் இருந்து தப்புவதற்காக பரிகாரம் செய்யப்போகிறேன் என்று கிளம்பிவிட்டான்.