பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை ஒவ்வொரு நாளும் சில நிகழ்வுகள் நமக்கு எடுத்துரைக்கின்றன. அதிலும் பெண்களை மட்டும் வைத்து தொழில் நடத்தினால் எப்படி இருக்கும்? நிச்சயம் ஒவ்வொரு நாளும் வெற்றிக்கனி தான். இதோ முற்றிலும் பெண்களை மட்டும் வைத்து தொழில் நடத்தி சாதனைப் புரிந்துள்ளார் ஐதராபாத்தைச் சேர்ந்த இளம் தொழில் முனைவோர். யார் அவர்? என்ன செய்கிறார்? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்.
தொழிலதிபராக உருவானது எப்படி?…
ஐதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபரான பிரனீதா சித்திரவி, தனது இளங்கலைப் படிப்பின் போது கல்லூரியில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்து கொண்டார். அவ்விழாவின் போது பேக்கிங் ஸ்டால் வைத்திருந்தது தான் இவர் தொழில் முனைவோர் ஆவதற்கு ஒரு முதற்படியாக அமைந்தது. பின்னர் பட்டம் பெற்ற இவர், எம்பிஏ படிப்பைத் தொடர்ந்தார். அப்போது பெங்களூருவில் உள்ள பேக்கிங் அகாடமியில் பயிற்சியைத் தேர்ந்தெடுத்தார் பிரனீதா. பிரனீதா தனது பயிற்சியின் போது, பேக்கிங் ஒரு கலை மட்டுமல்ல, ஒரு அறிவியலும் கூட என்று கற்றுக்கொண்டார். பேக்கிங் சோடா முதல் வெண்ணெய் முதல் முட்டை வரை ஒவ்வொரு மூலப்பொருளும் ஒரு தனித்துவமான வேதியியலைக் கொண்டிருக்கிறது என தெரிவித்த இவர் இதை எப்படியாவது தான் முழுமையாக கற்றுக்கொள்ள வேண்டும் என நினைத்தாகவும் கூறுகிறார்.
இதையடுத்து தன்னுடைய தொழிலை விரிவுப்படுத்த எண்ணிய இவர் பிரெஞ்ச், இத்தாலி ஸ்டைலில் பேக்கரி ஒன்றை நடத்தி வருகிறார். இங்கு முற்றிலும் பெண்கள் மட்டுமே பணியில் அமர்த்த வேண்டும் என முடிவெடுத்து அதையும் நிரூபித்துக் காட்டியுள்ளார். இதுகுறித்து நியூஸ் 18க்கு அளித்த பேட்டி ஒன்றில், பிரனீதா தனது இன்டர்னஷிப்பின் போது, கேக் பேக்கிங்கில் திறமை மற்றும் கலையின் முக்கியத்துவத்தைக் கண்டுபிடித்ததாகவும், அந்தத் துறையில் உள்ள திறமையின் வணிக அம்சங்களைப் பற்றி அறிந்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். . தனது பேக்கரியில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களை வேலைக்கு அமர்த்துவதில் உறுதியாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இவ்வாறு பெண்களை மட்டும் பணிக்கு அமர்த்தி, லட்சக் கணக்கில் சம்பாதித்து வருகிறார் பிரனீதா. சுவையான மற்றும் சூடான பொருட்களை வழங்குவதன் மூலம் அதிக வாடிக்கையாளர்களை தங்கள் வசம் இழுத்துள்ளதாகவும் தெரிவிக்கிறார் பிரனீதா.
ஆண்களின் ஆதிக்கம் அதிகம் நிறைந்துள்ள இச்சமூகத்தில் பல தடைகளைத் தாண்டி பெண்கள் நிதி சுதந்திரத்தோடு தனித்து நிற்கும் வாய்ப்பை வழங்கியுள்ள பிரனீதா. நிச்சயம் வாழ்க்கையில் இலக்கை அடைவதற்கு முயற்சியும், ஆர்வமும் இருந்தால் போதும் என்பதை நிரூபித்துக்காட்டி சாதனைப் படைத்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.