சென்னை: பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கோரி திமுக ஆட்சியை எதிர்த்து போராட்டம் நடத்த பாஜவுக்கு அருகதை இல்லை என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஊழலை ஒழித்து விட்டதாக பேசுவதற்கு பிரதமர் மோடிக்கு அசாத்திய துணிச்சல் இருக்க வேண்டும். அனைத்து ஊழல்களுக்கும் தாயாக ரபேல் பேர ஊழல் நடந்ததை நாட்டு மக்கள் அறிவார்கள். இதில் மோடியின் நேரடி தொடர்பு உறுதிப்படுத்தப்பட்டது. பிரதமர் மோடியின் ஆட்சியில் வறுமை குறித்து ஹின்ட்ரைஸ் பவுன்டேஷன் தயாரித்த ஆய்வறிக்கையில், 20 கோடி இந்தியர்களுக்கும் மேலாக நாள்தோறும் பசியோடும், வெறும் வயிற்றுடனும் உறங்குகிறார்கள் என்று கூறியதோடு, பட்டினியால் நாள்தோறும் ஏழாயிரத்திற்கும் மேற்பட்டோர் இறப்பதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
நாட்டு மக்களிடையே வறுமையும், பஞ்சமும் தலைவிரித்தாடுகிற போது குறிப்பிட்ட சில தொழிலதிபர்களின் சொத்து மடங்கு பலமடங்கு கூடியிருப்பது குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு விளக்கம் கூற வேண்டும். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ஊழல் நடந்ததாக ஒரு தோற்றத்தை உருவாக்குகிற முயற்சியில் பிரதமர் மோடி ஈடுபட்டிருக்கிறார். 10 ஆண்டுகாலம் பிரதமராக இருந்த மன்மோகன்சிங் மற்றும் சோனியா காந்தி, ராகுல்காந்தி உள்ளிட்டவர்கள் மீது ஒரே ஒரு ஊழல் குற்றச்சாட்டை கூறுகிற துணிவு பிரதமர் மோடிக்கு இருக்கிறதா? பாஜவுக்கு இருக்கிறதா?. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைக்கக் கோரி கோட்டையை நோக்கி தமிழக பாஜ பேரணி நடத்தியிருக்கிறது.
இவைகளின் விலையை பாஜ அரசு நிர்ணயம் செய்கிறதா, தமிழக அரசு நிர்ணயம் செய்கிறதா, யார் நிர்ணயம் செய்கிறார்கள் என்பதை அண்ணாமலை தெளிவுபடுத்துவாரா?. இந்நிலையில், திமுக அரசு கொடுத்த வாக்குறுதியின்படி பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3 விலையை குறைத்திருக்கிறது. இதனால் தமிழக அரசுக்கு ரூ.1016 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே 5 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையோடு ஆட்சியில் அமர்ந்த திமுக அரசு, இந்த விலை குறைப்பை செய்திருக்கிறது. இதை பாராட்ட மனமில்லை என்றாலும், குறைந்தபட்சம் விமர்சனம் செய்யாமல் இருக்கலாம்.
ஆனால், பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக் கோரி திமுக ஆட்சியை எதிர்த்து போராட்டம் நடத்துவதற்கு தமிழக பாஜவிற்கு என்ன அருகதை இருக்கிறது. எனவே, கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மதவாத அரசியல் மூலம் மக்களை பிளவுபடுத்தி பொருளாதார பேரழிவில் சிக்கியுள்ள மக்களின் கவனத்தை திசைத் திருப்பி அரசியல் ஆதாயம் தேடலாம் என்ற பிரதமர் மோடியின் கனவு நிச்சயம் நிறைவேறாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.