சீன நாட்டு மக்கள் பாம்பு, பல்லி, வௌவால் என பல உயிரினங்களைச் சாப்பிடுவார்கள் என்பது நாமெல்லாம் கேள்விப்பட்ட ஒன்றுதான். ஆனால் அவர்களின் முக்கியமான ஸ்நாக்ஸ் வகைகளில் பூரானும் ஒன்று என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆமாம், சிவப்புத்தலை கொண்ட பூரான்களை, குச்சியில் செருகி சீன மக்கள் ருசித்துச் சாப்பிடும் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
பதப்படுத்திய பூரானை எடுத்து, குச்சியில் சொருகி அதை நன்றாக வறுத்து உப்பு தூவி, சோயா சாஸ் சேர்த்துச் சாப்பிட்டால், ருசியே வேற லெவல் என அங்குள்ள பலரும் விரும்பிச் சாப்பிடுகின்றனர். அந்தளவுக்கு பூரான் உணவு, சீனாவில் பிரபலம். சீன நாட்டின் பெரும்பாலான இரவு நேரச் சந்தைகளில், இந்த உணவு கிடைக்கிறது.
கிழக்கு ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இடங்களில் கிடைக்கும் சிவப்புத்தலை பூரான்களே இதற்காக பயன்படுத்தப்படுகின்றன. இந்தப் பூரானின் உடலில் விஷம் இருந்தாலும், அவற்றை உணவாகச் சமைக்கும் முறையில், அந்த விஷமானது முறிந்து விடுவதாகக் கூறுகிறார்கள். பூரானின் விஷத்தில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து சிறந்த வலி நிவாரணியாகப் பயன்படுகிறது. இந்தப் பூரானின் விற்பனை தற்போது ஆன்லைனில்கூட நடைபெறுகிறது.