நடைப்பயிற்சி செய்யும் இடங்களில், வாழைத்தண்டு சாறு, அறுகம்புல் ஜூஸ், முள்ளங்கி ஜூஸ், கற்றாழை ஜூஸ், கீரை சூப் என இயற்கை பானங்களை விற்பனை செய்யும் பல கடைகளையும் பார்க்கிறோம். இயற்கையான மூலிகைகளிலிருந்தும் உணவுப் பொருள்களிலிருந்தும் தயாரிக்கப்பட்ட பானங்கள் ஆரோக்கியமானவை என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய சில விஷயங்களும் இருக்கின்றன.

மனித உடலின் தன்மையோ உள் உறுப்புகளின் செயல்பாடுகள், காலச்சூழல், பணிச்சூழல், வாதம், பித்தம், கபம் போன்ற உடல் தத்துவ அமைப்பிற்கேற்ப மாறுபடும் என்பதால் சில விஷயங்களைக் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக, கப உடல் தன்மை கொண்டவர்கள் குளிர், பனி நாள்களில் கற்றாழை பானங்களைப் பருகினால், கபம் அதிகரித்து கப நோய்கள் வரலாம். வெப்பம் சார்ந்த பகுதிகளில் தொடர்ந்து பணிபுரிகிறவர்களுக்கு குளிர்ச்சியான இயற்கை பொருள்கள் தேவை.
இருபத்தி நான்கு மணிநேரமும் குளிர்சூழ் அறைகளில் தொடர்ந்து பணிபுரியும் நபர்களுக்கு குளிர்காலங்களில் அவை ஏற்றுக்கொள்ளாது. கற்றாழை பானத்தை கோடைக்காலங்களில் தாராளமாக எடுத்துக்கொள்ளலாம். உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுப்பதோடு, ஆன்டி ஆக்ஸிடன்ட் பொருள்களையும் அதிகமாக வைத்திருக்கிறது கற்றாழை. ஆனால் குளிர்காலங்களிலும், மழைக்காலங்களிலும் அதைத் தவிர்ப்பது நல்லது.