பட மூலாதாரம், Getty Images
தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று (24.11.2025) காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மலாக்கா ஜலசந்தி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது.
”இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதனால் தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகக் கூடும். இது தொடர்ந்து அதே திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரங்களில் புயலாக வலுப்பெறக்கூடும்” என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வரும் 25ம் தேதி வாக்கில் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை – தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழை எச்சரிக்கை
இன்று கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களில் நாளையும் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே தமிழக கடலோரப் பகுதிகள் மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 கி.மீ முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் இன்றும் நாளையும் இந்தப் பகுதிகளில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
எங்கெல்லாம் பள்ளி, கல்லூரி விடுமுறை?
கனமழை எச்சரிக்கை காரணமாக பல்வேறு தென் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று ராமநாதபுரம் மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்துள்ளது மாவட்ட நிர்வாகம்.
மேலும், மழை எச்சரிக்கை காரணமாக கள்ளக்குறிச்சி, திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை, விருதுநகர், மயிலாடுதுறை, தஞ்சாவூர் மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு