பட மூலாதாரம், Getty Images
ஈஸ்டர் கொண்டாட்டங்களின் போது, இயேசு உயிர்த்தெழுந்ததாக நிலவும் நம்பிக்கையுடன் முட்டையும், முயலும் முக்கிய சின்னங்களாக பார்க்கப்படுகின்றன.
முட்டையும், முயலும் மறுபிறப்பின் சின்னங்களாக சில நாடுகளில் பார்க்கப்படுவதற்கும், இயேசு உயிர்தெழுதல் குறித்த நம்பிக்கைக்கும் இடையே தொடர்பு என்ன?
ஈஸ்டரும், நம்பிக்கைகளும்
இயேசு உயிர்த்தெழுதல் நம்பிக்கையுடன் தொடர்புடைய எந்த தலைப்பை எடுத்தாலும் அவை பல நேரங்களில் சர்ச்சைக்குரியதாக மாறுகின்றன.
மேலும் மத நம்பிக்கை கொண்டவர்கள் மத்தியில் இது தொடர்பாக பல கோட்பாடுகள் புழக்கத்தில் உள்ளன.
அவற்றுள் பல நூற்றாண்டுகளாகப் பரப்பப்படும் ஒரு கருத்தில் இயேசுவுக்கும், முயலுக்கும் இருக்கும் தொடர்பு விவரிக்கப்படுகிறது.
இயேசு, வெள்ளிக்கிழமை சிலுவையில் அறையப்பட்ட பிறகு அவரது கல்லறைக்கு ஞாயிற்றுக்கிழமை விடியற்காலையில் மேரி மகதலேனா சென்றார். அப்போது இயேசுவின் உடலை அபிஷேகம் செய்ய தேவையான பொருட்களை எடுத்துச் சென்றார் மேரி.
கல்லறைக்குச் சென்று பார்த்தபோது, இயேசுவின் கல்லறை திறந்து கிடந்தது. அப்போது கல்லறையில் சிக்கியிருந்த முயல், இயேசு உயிர்தெழுந்ததை பார்த்த முதல் உயிரினம் என்று நம்பப்படுகிறது.
இதன் காரணமாக ஈஸ்டர் தினத்தன்று குழந்தைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கும் பாக்கியம் முயலுக்கு கிடைத்தது. எனவேதான் சாக்லேட்டையும், முட்டையையும் முயல் சுமக்கிறது என்ற நம்பிக்கை ஒரு பிரிவினரிடையே நிலவுகிறது.
அதனாலேயே முட்டையும், மறுபிறப்பின் ஒரு சின்னமாக பார்கப்படுகிறது.
முட்டைக் கொடுக்கும் வழக்கம்
பட மூலாதாரம், Getty Images
பண்டைய ரோமானிய மக்கள், பேரண்டம் நீள்வட்ட வடிவத்தைக் கொண்டுள்ளது என்ற கருத்தைப் பரப்பினர். இடைக்காலத்தில் முட்டையின் ஓட்டிற்குள் உலகம் தோன்றியதாகவும் நம்பப்பட்டது.
பிற்காலத்தில், ஒருவருக்கொருவர் கோழி முட்டையை கொடுக்கும் வழக்கம் உருவானது.
சில வரலாற்றாசிரியர்கள், இந்த மரபு பாரசீகர்களிடையே தோன்றியிருக்கலாம் என்று ஊகிக்கின்றனர். ஆனால் மற்றவர்கள் அதன் தோற்றம் சீனர்களிடம் இருந்து உருவானதாக கூறுகின்றனர்.
ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் மரங்களில் தொடங்கவிடப்படும் உருண்டைகள் போல மரக்கிளைகளில் முட்டைகள் தொங்கவிடப்படுகின்றன.
“கிறிஸ்து பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, நிலநடுக் கோட்டு பகுதிகளில், குளிர்காலம் முடிந்து வசந்த காலம் தொடங்கும் தினமான மார்ச் 21 அன்று முட்டைகளை பரிமாறிக்கொள்வது ஒரு வழக்கமாக இருந்துள்ளது,” என்று கிறித்துவ சட்டங்களில் வல்லுநரான மான்சிக்னர் ஆண்ட்ரே சம்பாயோ ஒலிவேரா விளக்குகிறார்.
“பிற்காலத்தில் கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் கொண்டாடத் தொடங்கியபோது, வசந்த கால கொண்டாட்டம் புனித வாரத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டது. அப்போது முதல் கிறிஸ்தவர்கள் முட்டையை இயேசு உயிர்த்தெழுந்ததின் சின்னமாக பார்க்கத் தொடங்கினர்.”
பட மூலாதாரம், EPA
ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் மரங்களில் தொடங்கவிடப்படும் உருண்டைகள் போல மரக்கிளைகளில் முட்டைகள் தொங்கவிடப்படுகின்றன
163 கோடி ரூபாய் ஈஸ்டர் முட்டை
ஈஸ்டரின் போது முட்டை கொடுக்கும் வழக்கம் உருவான பிறகு சில ஆண்டுகளிலேயே, அந்த முட்டைகளை அலங்கரிக்கும் வழக்கமும் மனிதர்களிடம் உருவானது.
இடைக்காலத்தின் போது, பரிசாக வழங்கப்படும் முட்டைகளின் ஓடுகளின் மேல் கைகளால் வண்ணம் பூசி வழங்கும் வழக்கம் இருந்தது.
“உலகம் முழுவதும் ஈஸ்டர் அன்று முட்டைகள் வெவ்வேறு வகைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன,” என்று எழுத்தாளரும், ஆய்வாளருமான எவரிஸ்டோ எட்வர்டோ டி மிராண்டா கூறுகிறார்.
ஜெர்மனியில், வண்ணமயமான முட்டைகள் கிறிஸ்துமஸ் பந்துகளைப் போல மரக்கிளைகளில் தொங்கவிடப்படுகின்றன.
ரஷ்யாவில், இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், முட்டைகள் கல்லறைகளில் வைக்கப்படுகின்றன.
ஈஸ்டர் தினத்தன்று இத்தாலியில், இரவு உணவு மேஜைகள் வண்ணமயமான முட்டைகளால் அலங்கரிக்கப்படுகின்றன.
ரஷ்யாவின் ஜார் மன்னர்கள், இந்தப் பழக்கத்தை ஒரு புதிய நிலைக்கு எடுத்துச் சென்றனர்.
1885 மற்றும் 1916ம் ஆண்டுக்கு இடையே, மூன்றாம் ஜார் அலெக்சாண்டரும், இரண்டாம் நிக்கோலஸ் மன்னரும் பிரபல ரஷ்ய நகை வியாபாரியான பீட்டர் கார்ல் ஃபேபர்கேவிடம் 50 முட்டை வடிவங்களை செய்து தரும்படி ஆர்டர் செய்தனர்.
பட மூலாதாரம், Getty Images
ஜார் மன்னரான மூன்றாம் அலெக்சாண்டர் ஆர்டர் செய்த இந்த ஈஸ்டர் முட்டை வடிவ அலங்காரப் பொருள் 20 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஏலம் போனது
அவற்றில் ஒன்றை, மூன்றாம் அலெக்சாண்டர் தனது மனைவியான அரசி மேரி ஃபியோடோரோவ்னாவுக்கு வழங்கியது. அதனுள் வைரம் மற்றும் நீலக்கற்களால் ஆன கைக்கடிகாரம் பதிக்கப்பட்டு இருந்தது.
ஏப்ரல் 2014 அன்று, 8.2 செ.மீ உயரம் கொண்ட இந்த முட்டையின் மதிப்பு 20 மில்லியன் அமெரிக்க டாலராக(இந்திய மதிப்பில் சுமார் 163 கோடி ரூபாய்) இருந்தது.
18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரெஞ்சு மிட்டாய் உற்பத்தியாளர்கள் ஒரு புதிய நுட்பத்தை பரிசோதித்தனர்.
முட்டைகளுக்குள் இருக்கும் கருவை எடுத்துவிட்டு அதை சாக்லேட்டால் நிரப்பினர். ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு, ஈஸ்டர் அன்று இந்த சாக்லேட் முட்டைகளைத் தயாரிக்கத் தொடங்கினர். இந்த ‘காஸ்ட்ரோனமிக் கண்டுபிடிப்பு’ மத நம்பிக்கை இல்லாத நபர்களாலும் அங்கீகரிக்கப்பட்டது.
முயல் சின்னம் வந்த கதை
பட மூலாதாரம், Getty Images
ஈஸ்டருக்கும், முட்டைக்குமான தொடர்புக்கு பின்னால் ஒரு நம்பிக்கை கோட்பாடு இருப்பது போல முயலுக்கும் ஈஸ்டருக்குமான தொடர்பையும் சில கதைகள் இணைக்கின்றன.
முட்டையிடாத பாலூட்டி இனத்தை சேர்ந்த முயல், எப்படி கிறிஸ்தவ பண்டிகையின் அடையாளமாக மாறியது?
பண்டைய எகிப்து காலத்திலிருந்தே அழகான இந்த கொறித்துண்ணிகள் கருவுறுதலின் அடையாளமாக பார்க்கப்பட்டன.
சராசரியாக ஒரு முயல், ஆண்டுக்கு 4 முதல் 8 முறை கருத்தரிக்கும். ஒவ்வொரு முறையும் இவை 8 முதல் 10 குட்டிகள் வரை போடும்.
இதனால், காலப்போக்கில் முயல் மறுபிறப்பின் சின்னமாக மாறியது. குளிர்காலத்திற்குப் பிறகு வசந்தகாலம் தொடங்கும் முன் குகையிலிருந்து வெளியே வரும் முதல் விலங்கு முயல்கள் ஆகும்.
“முயல் ஏற்கனவே கிறிஸ்துவ கருத்தியலில் இயேசுவுடன் தொடர்பு கொண்டிருக்கிறது. கடவுள் கூறும் வார்த்தைகளை கேட்கும் வகையில் பெரிய காதுகளை அவை கொண்டிருந்தன,” என்று ஆராய்ச்சியாளர் எவரிஸ்டோ டி மிராண்டா கூறுகிறார்.
“முயலுக்கும், ஈஸ்டர் முட்டைகளுக்குமான தொடர்பு எப்போது தோன்றியது என மிகச்சரியாக குறிப்பிட முடியாது. இது குறித்து பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. அவை அனைத்தும் வெவ்வேறு இன மக்கள், கலாசாரத்துடன் தொடர்பை கொண்டிருந்தன. அந்த கருத்துகள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்துருவுடனும் இருந்தன,” என்று பிரேசிலின் சாவ் பாலோவில் உள்ள கேம்பினாஸ் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை முனைவர் பட்ட மாணவர் ஜெபர்சன் ரமால்ஹோ தெளிவுபடுத்தினார்.
கத்தோலிக்க திருச்சபையைப் பொறுத்தவரை, ஈஸ்டரின் உண்மையான சின்னம் ‘பாஸ்கல் மெழுகுவர்த்தி’ ஆகும்.
இது இயேசுவின் உயிர்த்தெழுதலைக் குறிக்கும் ஒரு பெரிய வெள்ளை மெழுகுவர்த்தி. அதில் கிரேக்க எழுத்துக்களின் முதல் மற்றும் கடைசி எழுத்துக்களான ஆல்பா, ஒமேகா ஆகிய எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இது இயேசுவே தொடக்கமும், முடிவும் என்பதைக் குறிக்கிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: