சுற்றுலா மாநிலமான புதுச்சேரிக்கு தினம்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். அது தவிர வார இறுதி நாள்களிலும், விடுமுறை நாள்களிலும் உள்ளூர் மக்களும் தங்கள் குழந்தைகளுடன் கடற்கரை சாலை, பாரதி பூங்கா, தாவரவியல் பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு வந்து செல்கின்றனர். அப்போது அங்கு பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து, வடமாநில இளைஞர்களால் விற்கப்படும் பிங்க் நிற பஞ்சு மிட்டாய்களை வாங்கி சாப்பிடுகின்றனர். முக்கியமாக குழந்தைகள் அடம்பிடித்து அதை விரும்பி சாப்பிடுவார்கள். சமீப காலமாக அந்த பஞ்சு மிட்டாய்கள் அடர் வண்ண நிறத்தில் விற்கப்படுவதைக் கண்ட சிலர், உணவு பாதுகாப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில், பஞ்சு மிட்டாய்கள் விற்பனை செய்து கொண்டிருந்த இளைஞர் ஒருவரை பிடித்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள், அவர் விற்பனைக்கு வைத்திருந்த பஞ்சு மிட்டாய்களை பறிமுதல் செய்து, அதை ஆய்வகத்திற்கு கொண்டு வந்து சோதனை செய்தனர்.

அப்போது அதில் அரசால் தடை செய்யப்பட்ட, தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் `ரோடமின் – பி’ என்ற ரசாயனம் கலக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அந்த ரசாயனம் கலந்த பஞ்சு மிட்டாய்களை சாப்பிடுவதன் மூலம், புற்று நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரித்தனர். அதையடுத்து பஞ்சு மிட்டாய் தொடர்பாக வீடியோ வெளியிட்ட ஆளுநர் தமிழிசை, “புதுச்சேரியில் குழந்தைகள் வாங்கி சாப்பிடும் பஞ்சு மிட்டாயில் `ரோடமின் – பி’ என்ற நச்சுப் பொருள் இருப்பதாக கண்டறிந்திருக்கிறார்கள்.
அதை விற்பனை செய்பவர்கள் யாராக இருந்தாலும் உணவு பாதுகாப்பு அதிகாரிகளின் சான்றிதழ் வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதுவையை பொறுத்தவரை இதுபோன்ற நச்சு பொருள்கள் தடை செய்யப்பட வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கும் இதுபற்றிய விழிப்புணர்வு வேண்டும். இது போன்ற அடர்நிற மிட்டாய்களை குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்கக் கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதே நமது எண்ணம்” என்று தெரிவித்திருக்கிறார்.