புதுச்சேரி: `சிபிஎஸ்இ பாடத்திட்ட தேர்வில் 50 சதவிகித மாணவர்கள் தோல்வி’ – அதிர்ச்சி கொடுக்கும் திமுக

Share

புதுச்சேரியில் கடந்த 2021-ல் என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க ஆட்சி அமைந்தவுடன் சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. அவசர அவசரமாக அமல்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்திற்கு பா.ஜ.க கூட்டணி கட்சிகளைத் தவிர அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதேபோல மாணவர்களின் தேர்ச்சி விகிதமும் குறைந்துவிட்டதாக பொதுநல அமைப்புகள் குற்றம் சுமத்தி வருகின்றன. இந்த நிலையில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் குறித்து பேசிய எதிர்கட்சித் தலைவரும், புதுச்சேரி தி.மு.க அமைப்பாளருமான சிவா, “அரசுப் பள்ளிகளில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் படிக்கும் 9,10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களில் பெரும்பாலானவர்கள் தேர்வில் தோல்வியடைந்திருக்கின்றனர்.

புதுச்சேரி திமுக அமைப்பாளர், எதிர்க்கட்சித் தலைவர் சிவா

அதனால் அவர்களின் இடைநிற்றலை தடுக்கும் விதமாக அவர்களுக்கு மறுதேர்வு நடத்தத் திட்டமிட்டிருக்கும் கல்வித்துறை, அதற்கான அட்டவணையை வெளியிட்டிருக்கிறது. 10-ம் தேதி முதல் தொடங்க இருக்கும் அந்தத் தேர்வு கால அட்டவணையைப் பார்க்கும்போது சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் தோல்வி அடைந்திருப்பதை அரசு ஒப்புக் கொண்டிருப்பதாகவே தெரிகிறது. மூன்றாம் வகுப்பு முதல் +2 வகுப்பு வரை பொதுத் தேர்வு நடத்தி, அதில் தோல்வியடையும் மாணவர்களை படிப்பில் இருந்து வெளியேற்றும் வேலையைத்தான் ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கை செய்யும். இதன் மூலம் சமூகத்தில் பின்தங்கி உள்ள, ஏழை மாணவர்கள் கல்வியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள்.

பிறகு கல்வியில் முன்னேறிய உயர் வகுப்பினர் மற்றும் பணக்காரர்களுக்கு,  வேலையாட்களாக செல்லும் பிற்போக்கு சித்தாந்தத்தை நோக்கி அவர்கள் தள்ளப்படுவார்கள். அதனால்தான் மாணவர்களின் எதிர்காலத்தை பாழடிக்கும் இந்த புதிய கல்வித் திட்டத்தை எதிர்ப்பதுடன், அந்தத் திட்டம் வேண்டாம் என்று போராடியும் வருகிறோம். சி.பி.எஸ்.இ விவகாரத்தில் எங்கள் நிலைப்பாடு உண்மை என்பது, 9,10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களின் தேர்வு தோல்விகள் கூறுகின்றன. இதன் மூலம் மாணவர்களின் இடைநிற்றலை ஊக்குவிப்பதுதான் புதிய கல்விக் கொள்கையின் நோக்கமாகும்.

புதுச்சேரி
புதுச்சேரி அரசு

மக்கள் அரசை கேள்வி கேட்பார்கள் என்ற பயத்தில்தான், மறுதேர்வு முடிவை எடுத்திருக்கிறது புதுச்சேரி அரசு. இல்லையென்றால் வரும் கல்வியாண்டில் 10 மற்றும் +2 வகுப்புகளுக்கு மாணவர்களே இல்லாத சூழல் ஏற்படும். இப்படி ஒரு சூழல் ஏற்படும் என்றுதான் கடந்த நான்கு ஆண்டுகளாக கூறி வருகிறோம். சி.பி.எஸ்.இ பாடத்திட்டம அமல்படுத்தினார்களே தவிர, அதற்கான பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லை. அதனால் ஆசிரியர்களுக்கு தொடர்ச்சியாக பயிற்சி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறோம். மேலும் காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் வலியுறுத்தி வருகிறோம்.

இவற்றில் எதையும் செய்யாத இந்த அரசு, தேர்வு தோல்வியை மறைப்பதற்கு மறுதேர்வு நாடகத்தை நடத்துகிறது. சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் இந்த ஆண்டு தேர்வு எழுதிய மாணவர்களில் 50 சதவிகிதத்திற்கும் மேலான மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்று எங்களுக்கு தகவல் கிடைத்திருக்கிறது. அதனால் தேர்வில் தோல்வி அடைந்தவர்களின் எண்ணிக்கையை கல்வித்துறை முதலில் வெளியிட வேண்டும். அதேபோல தோல்விக்கான காரணத்தை ஆய்வு செய்து அதைக் களைவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் மறுதேர்வுக்கான கால அவகாசத்தையும் அளிக்க வேண்டும்.

மாணவர்கள் தேர்வு – கோப்புப் படம்

அதைவிடுத்து அவசரகதியில் தேர்வை நடத்தி நீங்களே மதிப்பெண்களை வாரி வழங்கி கணக்கு காட்டினால், எதிர்வரும் ஆண்டில் 10 மற்றும் 12–ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கிறேன். ஆகவே, இதில் வெளிப்படைத்தன்மையுடன் அரசு முழுமையான உண்மையை வெளியிட வேண்டும். அத்துடன் அவசரகதியில் ஒன்றிய பா.ஜ.க அரசின் புதிய கல்வித் திட்டத்தை நுழைத்து மாணவர்களின் எதிர்காலத்தை பாழடிக்கும் செயலை நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்று புதுச்சேரி அரசை கேட்டுக்கொள்கிறேன்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com