கோடைக்காலம் வந்துவிட்டாலே, அதன் கடுமையிலிருந்து நம்மைக் காத்துக்கொள்வது பற்றிய கவலைகளும் வந்துவிடும். வெயிலில் இருந்து நம் தாகம் தீர்க்கும், ஆரோக்கியம் காக்கும் 10 வகை பானங்கள் இங்கே…
அருகம்புல் ஜூஸ்
அருகம்புல்லைக் கழுவி சுத்தம் செய்யவும். மிக்ஸி ஜாரில் அருகம்புல்லுடன் இஞ்சித் துருவல், தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும். பிறகு வடிகட்டி… உப்பு, எலுமிச்சைச் சாறு கலந்து பருகவும்.
தக்காளி ஜூஸ்
தக்காளியுடன் உப்பு சேர்த்து தண்ணீர் விடாமல் அரைத்து எடுக்கவும். இதனுடன் மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்துக் கலந்து பருகவும்.
ராகி கூழ்
ராகி மாவுடன் தண்ணீர்விட்டுக் கரைக்கவும். மோருடன் உப்பு, இஞ்சித் துருவல், கறிவேப்பிலை சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று அரைத்து எடுக்கவும். அடிகனமான பாத்திரத்தில் ராகி மாவுக் கரைசலை ஊற்றி நன்கு வேகும்வரை கிளறி இறக்கவும். ஆறிய பின் அரைத்த மோர் கலவையை விட்டுக் கரைத்துப் பருகவும்.
சீரக தண்ணீர்
ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன் சீரகம் சேர்த்து நன்கு கொதிக்கவைத்து இறக்கவும். இதனுடன் துளசி இலைகள் சேர்த்து மூடி வைக்கவும். ஆறிய பின் வடிகட்டிப் பருகவும்.
நெல்லி ஜூஸ்
நெல்லிக்காயுடன் கறிவேப்பிலை, உப்பு சேர்த்து, தண்ணீர்விட்டு நைஸாக அரைத்து வடிகட்டவும். அப்படியேவோ, மண்பாண்டத்தில் குளிரவைத்து எடுத்தோ பருகவும்.
எவர்கிரீன் ஜூஸ்
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழையுடன் தேவையான அளவு தண்ணீர்விட்டு அரைத்து வடிகட்டவும். இதனுடன் உப்பு, எலுமிச்சைச் சாறு கலந்து பருகவும்.
பீட்ரூட் லஸ்ஸி
பீட்ரூட் துருவலுடன் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் தெளித்து வேகவிடவும். ஆறிய பின் மிக்ஸியில் சேர்த்து தண்ணீர் விடாமல் விழுதாக அரைக்கவும். தயிருடன் சர்க்கரை, பீட்ரூட் விழுது சேர்த்துக் கலந்து சாப்பிட… மிகவும் சுவையாக இருக்கும்.
கறிவேப்பிலை ஜூஸ்
சுத்தம் செய்த கறிவேப்பிலையுடன் இஞ்சித் துருவல், உப்பு, தண்ணீர் சேர்த்து நைஸாக அரைத்து வடிகட்டிப் பருகவும்.
தேங்காய் – வெல்ல பால்
ஒரு பாத்திரத்தில் வெல்லத்துடன் மூழ்கும் வரை தண்ணீர்விட்டு ஒரு கொதிவிட்டு இறக்கி வடிகட்டவும். தேங்காய்த் துருவலுடன் கசகசா, சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டவும். இந்தத் தேங்காய்ப்பாலுடன் வெல்லக் கரைசல், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து பருகவும்.
செம்பருத்திப்பூ டிரிங்
செம்பருத்திப்பூவின் காம்பு, நடுவில் உள்ள நரம்பு பகுதியை நீக்கி ஆய்ந்து எடுக்கவும். பாத்திரத்தில் செம்பருத்திப்பூ இதழ்கள், பனங்கற்கண்டு சேர்த்து நன்கு கொதிக்கவைத்து இறக்கி வடிகட்டவும். ஆறிய பின் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து பருகவும்.